Published : 26 Dec 2019 01:03 PM
Last Updated : 26 Dec 2019 01:03 PM

விஜய் சேதுபதிக்கு தேசிய விருது இல்லை என்றால் மரியாதை இல்லை: ஒளிப்பதிவாளர் சுகுமார் 

விஜய் சேதுபதிக்கு தேசிய விருது இல்லை என்றால் அந்த விருதுக்கே மரியாதை இல்லை என்று ஒளிப்பதிவாளர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, அனைகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மாமனிதன்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள இந்தப் படம் வெளியீட்டுத் தயாராகிவிட்டாலும், படத்தின் வெளியீட்டில் சிக்கல் நிலவி வருகிறது.

இதனிடையே இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்துள்ள சுகுமார், 'மாமனிதன்' அனுபவங்கள் குறித்துப் பேசியதாவது:

" 'தர்மதுரை' படத்திற்குப் பிறகு இயக்குநர் சீனு ராமசாமி மற்றும் விஜய் சேதுபதி இருவருடனும் இணைந்து 'மாமனிதன்' படத்தில் பணியாற்றுகிறேன். இது 'தர்மதுரை' மாதிரியான கதை அல்ல. வேறு விதமான கதை. அடுத்தவர்களைப் பார்த்து வாழ வேண்டாம், நமக்காக நாம் வாழ்வோம் என்கிற ஒரு செய்தியைச் சொல்லும் நடுத்தர வர்க்கத்துக் குடும்பத்துக் கதையாக இது இருக்கும்.

இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பாகட்டும், காயத்ரியின் நடிப்பாகட்டும் நிச்சயமாக இருவருக்கும் சிறந்த நடிப்புக்கான தேசிய விருது கிடைத்தே ஆக வேண்டும். அப்படிக் கிடைக்கவில்லை என்றால் அந்த தேசிய விருதுக்கே மரியாதை இல்லை என்று தான் உறுதியாகச் சொல்வேன். அந்த அளவுக்கு மிக இயல்பான அற்புதமான நடிப்பை இருவரும் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்தப் படத்திலும் புதிய முயற்சி ஒன்றைக் கையாண்டுள்ளோம். படத்தில் குறிப்பிட்ட நான்கு காட்சிகளை மட்டும் ஒரே ஷாட்டில் படமாக்கியுள்ளோம். ஒவ்வொரு காட்சியும் சுமார் நான்கு நிமிடத்துக்குக் குறையாத நீளம் கொண்டவை. அவற்றை ஒரே டேக்கில் படமாக்கி இருக்கிறோம். காரணம் அந்தக் காட்சிகளை அப்படி ஒரே ஷாட்டில் சொன்னால் ரொம்பவே பொருத்தமானதாக இருக்கும் என இயக்குநர் சீனு ராமசாமி விரும்பினார்.

இதைப் பல ஷாட்டுகளாகப் பிரித்து வழக்கம் போல ஏன் எடுக்க வேண்டும் ஒரே ஷாட்டில் எடுக்கலாமே என்று எனக்கு இந்த புதிய முயற்சியைப் பரீட்சித்துப் பார்க்க ஊக்கம் தந்தார். பக்காவாக முன் பயிற்சி செய்து சென்றதால் ஒரே டேக்கில் பிரமாதப்படுத்தி விட்டார்கள் விஜய் சேதுபதியும் காயத்ரியும்.

அப்படி இந்தக் காட்சியைப் படமாக்குவதற்காகப் பகலில் படப்பிடிப்பை முடித்துவிட்டு அன்று இரவே பக்கத்திலிருந்த இன்னொரு லொக்கேஷனுக்கு மாறினோம். எப்படியும் முதல் ஷாட்டே எட்டு மணிக்குதான் ஆரம்பிக்கும் நள்ளிரவில் தான் படப்பிடிப்பு முடியும் என நினைத்து, படக்குழுவினரும் அதற்கான ஏற்பாடுகளுடன் வந்திருந்தனர்.

ஆனால், ஏழரை மணிக்கு ஷாட் வைத்துக் கிட்டத்தட்ட எட்டு மணிக்கெல்லாம் படப்பிடிப்பை முடித்துவிட்டுக் கிளம்பிவிட்டோம். நாங்கள் ஒரே ஷாட்டில் இந்த நான்கு நிமிடக் காட்சிகளை எடுக்கப்போகிறோம் என்பது எங்கள் நால்வரைத் தவிர யாருக்கும் தெரியாததால் படக்குழுவினருக்குக் கூட இது எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

’தர்மதுரை’ படத்தில் பார்த்த அதே விஜய் சேதுபதிதான் ’மாமனிதன்’ படத்திலும். எந்தவித மாற்றமும் இல்லாத மனிதர். கதாபாத்திரங்களுக்காக மட்டுமே தன்னை மாற்றிக் கொள்ளக்கூடிய மனிதர். ‘சங்கத்தமிழன்’ போன்ற கமர்ஷியல் படங்களில் விஜய் சேதுபதி நடிக்கலாமா என சிலர் கேட்கிறார்கள். விஜய் சேதுபதி போன்ற ஒரு நடிகனை இப்படித்தான் நடிக்க வேண்டும் என ஒரு வட்டத்திற்குள் அடக்கவே கூடாது. எல்லா வகையான படங்களும் செய்வதற்குத் தகுதியான ஒரு நடிகர்தான் அவர்.

'தர்மதுரை' படம் போலவே இந்தப் படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பையும் ஆண்டிப்பட்டி பகுதிகளில்தான் நடத்தி இருக்கிறோம். ஆனால் அந்தப் படத்தின் படப்பிடிப்பை விட தற்போது விஜய் சேதுபதிக்கான மிகப்பெரிய வரவேற்பு இருந்ததைக் காண முடிந்தது.

அதுமட்டுமல்ல படப்பிடிப்பு முடிந்ததும் இவ்வளவு சீக்கிரமாக முடிந்து விட்டதா என நாட்களே போனது தெரியாமல் ஒரு குடும்பமாக இருந்தது போன்ற உணர்வைத் தந்தது இந்த 'மாமனிதன்' படப்பிடிப்பு. இது தவிர கேரளா மற்றும் காசியிலும் இதன் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்..

இந்தப் படத்துக்காக முதல் முறையாக இளையராஜாவும் அவரது மகன் யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளார்கள். அப்படி ஒரு சிறப்புமிக்க படத்தில் நானும் இருக்கிறேன் என்பதே பெருமையாக இருக்கிறது”.

இவ்வாறு ஒளிப்பதிவாளர் சுகுமார் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x