Published : 26 Dec 2019 11:18 AM
Last Updated : 26 Dec 2019 11:18 AM

சாதிய ரீதியிலான பேச்சு: இணையக் கிண்டல்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி

சாதிய ரீதியிலான தனது பேச்சுக்கு இணையக் கிண்டல்கள் வலுக்க, லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

2019-ம் ஆண்டு நிறைவு பெற இருப்பதை முன்னிட்டு பல்வேறு யூடியூப் சேனல்களில் 'சிறந்த படங்கள்' வரிசையை வீடியோவாக வெளியிட்டு வருகிறார்கள். இதில் முன்னணி யூடியூப் சேனல் ஒன்று, தமிழ்த் திரையுலகின் முக்கிய இயக்குநர்களை வைத்து கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றை நடத்தியது.

இதில் இயக்குநர்கள் வெற்றிமாறன், கெளதம் மேனன், ரத்னகுமார், செழியன், பார்த்திபன் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டார்கள். அப்போது பலரும் தமிழ்த் திரையுலகம் குறித்த தங்களுடைய பார்வையை வெளிப்படுத்தினார்கள். இதில் சினிமாவுக்குப் பின்னால் இருக்கும் சாதிய ரீதியிலான பிரிவினை குறித்த தன் பார்வையை லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இந்தப் பேச்சு இணையத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. பலரும் சாதி ரீதியாகக் கேள்விகள் எழுப்பத் தொடங்கினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் லட்சுமி ராமகிருஷ்ணன், "இந்த தசாப்தத்தில் பொழுதுபோக்குத் துறையில் இது நடந்திருக்கிறது. 'காலா' இறுதிக் காட்சி, 'மெட்ராஸ்' படங்கள் எனக்கு எவ்வளவு பிடித்தது என்பது பற்றிப் பேசினேன்.

ஆனால், அதை வசதியாகப் புறக்கணித்துவிட்டார்கள். திரைப்படங்களில் வன்முறை குறித்தும், திரைப்படத் தலைப்புகளின் பாணி மாறி வருவதைப் பற்றியும் பேசினேன். ஆனால் அதுவும் சில மறைமுக நோக்கங்களுக்காகத் திரித்து விடப்பட்டுள்ளன.

நாங்கள் எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள், எங்கிருந்து வருகிறோம், என்ன பாலினம் என்பதை வைத்து எங்களைப் பற்றி அவர்களின் குறைந்த, கறை படிந்த அறிவால் தீர்மானித்து வைக்கிறார்கள். குறுகிய வட்டத்தைத் தாண்டி யோசிக்கத் தெரியாது. ஆனால் தமிழகம் இதுவல்ல. நிஜமாக, மக்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்களுக்காக இந்தப் பிரச்சினைகளைத் தாங்கிக் கொள்ளும் அளவு தகுதியானவர்கள்.

பல வருடங்கள் வெளிநாட்டில் வாழ்ந்தும் தமிழகத்துக்குத் திரும்ப வந்துவிட்டோம். நான் கற்பனை செய்ததை விட அதிக அன்பைத் தமிழகம் எனக்குத் தந்திருக்கிறது. இப்படி பாரபட்சமாகக் கிண்டல் செய்யும் நபர் எங்கள் அளவுக்குத் தமிழராக இல்லாமல் கூட இருக்கலாம். மறைமுகமான காரணங்களுக்காகப் பணம் வாங்கிக்கொண்டு நையாண்டி செய்பவராகவும் இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வின் காரணமாக எல்லோருமே தங்கள் கோபத்தையும் வேதனையையும் காட்ட வேண்டிய அழுத்தமான மனநிலையில் இருக்கிறார்கள், அதுதான் (சினிமாவில்) வன்முறையாக உருவெடுக்கிறது என்று வெற்றிமாறன் சொன்னார். அதைத்தானே சொன்னார்? அப்படி அழுத்தத்தில் கோபத்தை வளர்க்கவிட்டு விடலாமா? இல்லை அதற்கான வேறொரு சிறப்பான பிரதிநிதித்துவத்தை முன்வைக்கலாமா?

நான் சினிமாவில் சாதிய பிரதிநிதித்துவத்துக்கு எதிரானவள் இல்லை. ஆனால் துறையில் திடீரென மாறும் சூழ்நிலைகள் கவலை தருகின்றன. அது திரைக்குப் பின் பிரிவினையை ஏற்படுத்துகிறது. அதைப் பற்றி நான் தாழ்மையுடன் என் கருத்துகளைப் பேசினேன். ஆனால் இணையத்தில் கிண்டல் செய்பவர்களுக்கு எப்படியும் வேறொரு நோக்கம் இருக்கும். அது அவர்களுக்கு வசதியாகிவிட்டது.

இப்படியான இணையக் கிண்டல் கண்டிப்பாகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். சிறிய படங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க துறையில் முக்கியஸ்தர்கள் எங்கள் படங்களைப் பார்த்து அதைப் பற்றிப் பேச வேண்டும். வெற்றிமாறனைத் தவிர அங்கு உட்கார்ந்திருந்தவர்கள் யாருமே என் படத்தைப் பார்த்ததில்லை. வெற்றிமாறன் 'ஹவுஸ் ஓனர்' பற்றிய அவரது கருத்தை இங்கு தெரிவித்திருக்கலாம் என்று விரும்புகிறேன். அது இந்த நையாண்டி செய்பவர்களின் வாயை அடைத்திருக்கும்" என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x