Published : 25 Dec 2019 06:27 PM
Last Updated : 25 Dec 2019 06:27 PM

'சீதக்காதி' படத்தால் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றம்: விஜய் சேதுபதி வெளிப்படை

தன் வாழ்க்கையில் 'சீதக்காதி' படத்தால் நிகழ்ந்த மாற்றத்தைப் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமான படம் 'தென்மேற்கு பருவக்காற்று'. இந்தப் படம் வெளியாகி நேற்றுடன் (டிசம்பர் 24) 9 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனால் விஜய் சேதுபதி நாயகனாக அறிமுகமாகி 9 ஆண்டுகள் நிறைவையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும் #9YearsofVijaysethupathism என்ற ஹேஷ்டேக்கும் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்ட்டானது.

நாயகனாக அறிமுகமாகி 9 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்துள்ளார் விஜய் சேதுபதி. அதில் 'சீதக்காதி' படத்திலுள்ள தனது கதாபாத்திரம், தனது நிஜ வாழ்க்கைக்கு எந்தளவுக்கு உதவியாக இருந்தது என்பதைத் தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

அந்தப் பேட்டியில் 'சீதக்காதி' படம் தொடர்பாக விஜய் சேதுபதி, "சமீபத்தில் வேலை தொடர்பாக ஒருவர் என்னை மிகவும் காயப்படுத்தினார். நான் கடுமையாகக் கோபம் கொண்டேன். பிறகு நான் ’சீதக்காதி’ படத்தில் நான் இறக்கும் காட்சியைப் பார்த்தேன். பிறகு, 'அட என் வாழ்க்கையில் நான் இப்படியான ஒரு படத்தில் நடித்திருக்கிறேனா' என்று நினைத்தேன். உறைந்துவிட்டேன்.

அந்த தருணத்தில், எனது தொழில் எனது வலிக்கான மருந்தாக மாறியது. அது எனக்கு ஒரு திருப்தியைக் கொடுத்தது. நான் இயக்குநர் பாலாஜி தரணீதரனை உடனடியாக அழைத்து அந்தப் பட வாய்ப்பை தந்ததற்கு நன்றி கூறினேன். எனது கோபம் அனைத்தும் கரைந்து போனது. 'டேய், நான் உன்னை ஆசிர்வதித்திருக்கிறேன். வேறென்ன உனக்கு வேண்டும்? ஏன் கற்றுக்குட்டிகளின் கருத்துகளைப் பார்த்துக் கவலைப்படுகிறாய்?' என்று அந்த கலை வடிவமே எனக்குச் சொன்னது போலத் தோன்றியது" என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x