Published : 25 Dec 2019 01:11 PM
Last Updated : 25 Dec 2019 01:11 PM

டைட்டிலிலும் ஏறுமுகம்; ’கோகிலா’ மோகன், மூவரில் ஒருவர், முதல் பெயர்;  மோகனின் ‘கிளிஞ்சல்கள்’ ரிலீசாகி 38 வருடம்! 

வி.ராம்ஜி

தமிழில் முதல் படமான ‘மூடுபனி’ படத்தில் ‘கோகிலா’ மோகன் என்று டைட்டிலில் மோகன் பெயர் இடம்பெற்றது. பிறகு மூவரில் ஒருவராகவும் அதையடுத்து ‘கிளிஞ்சல்கள்’ படத்தில் தனித்ததாக, முதல் பெயராக மோகன் பெயர் இடம்பெற்றது. இந்தப் படம் ரிலீசான நாள் இன்று. படம் வெளியாகி, 38 வருடங்களாகின்றன.

இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பாலு மகேந்திரா,’கோகிலா’ எனும் கன்னடப் படத்தில் மோகனை அறிமுகப்படுத்தினார். கமல், ஷோபா, ரோஜாரமணி முதலானோர் நடித்திருந்த இந்தப் படம் வெற்றிப் படமாக அமைந்தது.

இதையடுத்து, இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில், ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் சுஹாசினியின் காதலராக நடித்தார் மோகன். சுஹாசினியின் அண்ணனாக சரத்பாபுவும் கணவராக பிரதாப்பும் நடித்தனர். கார் மெக்கானிக்காக எல்லோர் கவனத்தையும் ஈர்த்தார் மோகன். சுஹாசினிக்கு இதுவே முதல் படம்.

இதேவேளையில், இயக்குநர் பாலுமகேந்திரா மோகனை அழைத்தார். சிறிய வேடமொன்றில் நடிக்கச் சொன்னார். ‘மூடுபனி’ படத்தில் புகைப்படக் கலைஞராக நடித்தார் மோகன். பிரதாப், ஷோபா நடித்த இந்தப் படம், 1980-ம் ஆண்டு, நவம்பர் 6-ம் தேதி வெளியானது. இந்தப் படத்தில் மூன்று நான்கு காட்சிகள் மட்டுமே வருவார் மோகன். டைட்டிலில், ’ஊர்வசி’ ஷோபா என்று அவர் பெயர் முதலில் போடப்பட்டது. பிறகு ஒவ்வொருவரின் பெயரும் டைட்டில் கார்டில் வர, அறிமுகம் ‘கோகிலா’ மோகன் என போடப்பட்டது. இளையராஜாவின் 100-வது படம் இது என்பது கூடுதல் தகவல்.

இன்னொரு சிறப்புத் தகவல்... திரையுலகில் மூன்றுநான்கு காட்சிகளில் வந்த மோகன், ரொம்பவே கவனம் ஈர்த்தார்.

ஆக, ‘கோகிலா’ என்ற படத்தில் கன்னடத்தில் அறிமுகமான மோகன், தமிழில் ‘மூடுபனி’ என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். அடுத்த மாதமே அதாவது 80-ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி மகேந்திரனின் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ வந்தது. ‘மூடுபனி’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ இரண்டு படங்களும் வெற்றிப் படங்களாகவே அமைந்தன.

குறிப்பாக, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ 200 நாட்கள், முந்நூறு நாள், நானூறு நாள் என ஓடியது. சென்னையில் 500 நாட்களைக் கடந்து ஓடியது என ரசிகர்கள் பெருமிதம் பொங்கச் சொல்கிறார்கள். ’நெஞ்சத்தைக் கிள்ளாதே’ படத்தில் டைட்டில் கார்டில், ‘சரத்பாபு, பிரதாப் போத்தன், மோகன்’ என்று வரும். மூன்றாவதாகத்தான் மோகனின் பெயர் இடம்பெற்றது.

‘மூடுபனி’யும் ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’யும் 80-ம் ஆண்டில், அடுத்தடுத்த மாதங்களில் வர... அடுத்த வருடமான 81ம் வருடம், ‘கிளிஞ்சல்கள்’ வந்தது. மோகனும் பூர்ணிமா ஜெயராமனும் (பூர்ணிமா பாக்யராஜ்) இணைந்து நடித்த முதல் படம் இது. ‘பசி’ இயக்குநர் துரை இயக்கத்தில் வெளியான இந்தப் படத்துக்கு டி.ராஜேந்தர் இசையமைத்தார்.

படத்தின் டைட்டிலில், நடிகர்களின் பட்டியலில் முதல் பெயராக, மோகன் பெயர் இடம்பெற்றது. தனித்ததொரு அடையாளத்தையும் கொடுத்தது. எல்லாப் பாடல்களும் இனிதாக அமைந்தன. துள்ளத்துடிக்கும் உயிரைக் கரைக்கும் காதல் கதையில் அழகாகப் பொருந்தினார் மோகன். இந்தப் படத்தில் இருந்தே, ரசிகர்களும் ரசிகைகளும் அதிகரித்தார்கள். குறிப்பாக, பெண்கள் மோகனை ரொம்பவே ரசிக்கத் தொடங்கியதெல்லாம் ‘கிளிஞ்சல்கள்’ படத்தில் இருந்துதான்!

முதல் படத்தில் (மூடுபனி) மூன்று நான்கு காட்சிகள், இரண்டாவது படத்தில் மூன்று பேரில் கடைசி பெயராக மோகனின் பெயர், மூன்றாவது படத்தில் தனி ஹீரோ. 81ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி ‘கிளிஞ்சல்கள்’ வெளியானது. படம் ரிலீசான நாள் இன்று. கிட்டத்தட்ட, படம் வெளியாகி 38 வருடங்களாகின்றன.

எண்பதுகளில், காதல் ஈர்ப்பில் லயித்தவர்களுக்கு, ‘கிளிஞ்சல்கள்’ மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. ஊக்கத்தைத் தந்தது. இப்படியொரு உயிர்ப்பான லவ் ஸ்டோரி தமிழில் இதுதான் முதல் முறை எனக் கொண்டாடினார்கள், அன்றைய இளைஞர்களும் யுவதிகளும்!

81ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி ‘கிளிஞ்சல்கள்’ வெளியானது. இரண்டே மாதங்களில், 82ம் ஆண்டு, பிப்ரவரி 26-ம் தேதி அடுத்த படம் வெளியானது. அந்தப் படம் ஏற்படுத்திய தாக்கமும் பிரமாண்ட வெற்றியும் அசாதாரணம். அந்தப் படம் ‘பயணங்கள் முடிவதில்லை’.

‘கிளிஞ்சல்கள்’ படத்தில் இருந்து கிடைத்த முத்து என ரசிகர்களும் திரையுலகமும் கொண்டாட, அன்றிலிருந்து இன்னும் இன்னும் என, ஏறிக்கொண்டே போனது மோகனின் கிராஃப். எகிறிக்கொண்டே போனது ரசிகக் கூட்டம்.

‘கிளிஞ்சல்கள்’... ரிலீசான இந்தநாளில், மோகனுக்கும் பூர்ணிமா பாக்யராஜுக்கும் டி.ராஜேந்தருக்கும் இயக்குநர் துரை உள்ளிட்ட மொத்தக் குழுவினருக்கும் வாழ்த்துகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x