Published : 22 Dec 2019 11:02 AM
Last Updated : 22 Dec 2019 11:02 AM

ஏவிஎம் - ரஜினிக்கு வெற்றி மிகமிக அவசியம்;  இணைந்து  ஹிட்டடித்த ‘முரட்டுக்காளை’

வி.ராம்ஜி


ஏவி.மெய்யப்பச் செட்டியார் மறைவுக்குப் பிறகு அந்த நிறுவனம் தயாரிப்பில் இறங்கியது. அப்படி எடுக்கும் படமே, மிரட்டலாக இருக்கவேண்டும், பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதில் ஏவிஎம் சரவணன் சகோதரர்கள் உறுதியாக இருந்தனர். அதற்கான கதைத் தேர்வில் இறங்கினர்.


இதேசமயத்தில், ஏகப்பட்ட படங்களில் நடித்து வந்த ரஜினிக்கு ஓய்வே இல்லாத நிலை அப்போது. வரிசையாக நடித்துக்கொண்டிருந்த ரஜினி, ஒருவித மன அழுத்தத்துக்கு ஆளானார். ‘ரஜினியை வைச்சு படம் பண்றது ரிஸ்க்’ என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது.


அப்போது ரஜினியுடன் நடித்த நடிகைகள், நடிகர்கள் பலரும் வியந்து மிரண்டு பார்த்த வேளையில், நடிகை ஸ்ரீப்ரியா இயக்குநர் பாலசந்தரிடம் சென்று, ‘அவரை (ரஜினியை) உங்களால்தான் சரிப்படுத்த முடியும்; குணப்படுத்த முடியும்’ என்று சொன்னார்.


இதன் பின்னர், மெல்ல மெல்ல மன அழுத்தத்தில் இருந்து வெளியே வந்துகொண்டிருந்த ரஜினிக்கு, அப்போது வந்த படங்களும் சரியாகப் போகவில்லை. வாய்ப்புகளும் குறையத் தொடங்கின. உடனடியாக, மிகப்பெரிய ஹிட் தேவைப்பட்டது ரஜினிக்கு. எல்லோரும் திரும்பிப் பார்க்கும்படியான வெற்றியாக அது இருக்கவேண்டும் என நினைத்தார் ரஜினி.


கதாசிரியரும் தயாரிப்பாளருமான பஞ்சு அருணாசலம், ஏவிஎம்மிற்கு கதை சொன்னார். அந்தக் கதை பிடித்துவிட்டது. ‘கவிக்குயில்’ தொடங்கி ‘காயத்ரி’, ’புவனா ஒரு கேள்விக்குறி’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘ப்ரியா’ முதலான பஞ்சு அருணாசலம் படைப்புகளில் நடித்த ரஜினியை, இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.


ஆக, ஏவி.மெய்யப்பச்செட்டியார் மறைவுக்குப் பிறகு எடுக்கும் படம் ஹிட்டடிக்கவேண்டும் என்பது ஏவிஎம்மிற்கு கட்டாயமாகவும் அவசியமாகவும் இருந்தது. இதே நிலைதான் ரஜினிக்கும்.ஒரே சிந்தனை கைகோர்க்கவைத்தது. அதுதான் ‘முரட்டுக்காளை’. திரைப்படம்.
அட்டகாசமான கிராமத்து சப்ஜெக்ட். பழிக்குப் பழி வாங்கும் சாதாரணக் கதைதான். ஆனால் அதற்கு திரைக்கதை நகாசு செய்திருந்தார் பஞ்சு அருணாசலம். எஸ்.பி.முத்துராமன் நல்லதொரு பொழுதுபோக்குச் சித்திரமாக உருவாக்கினார்.


படத்துக்கு வில்லன் வேண்டும். அந்தப் பண்ணையார் கேரக்டர் வெயிட்டாக இருந்தால்தான், காளையன் ரஜினி கேரக்டர் பேசப்படும். ‘இதுவரை வில்லன் கேரக்டர் பண்ணாதவர் நடித்தால் நன்றாக இருக்கும்’ என்று யோசித்தார்கள்.


அந்தக் காலகட்டத்தில், ஜெய்சங்கருக்கு படங்கள் குறையத் தொடங்கின. அப்படியே படங்கள் வந்தாலும் பெரிதாகப் பேசப்படவில்லை. ஆனால் தொடர்ந்து படங்கள் வந்துகொண்டுதான் இருந்தன. ‘வில்லனுக்கு ஜெய்சங்கரைப் போடலாம்’ என்று பஞ்சு அருணாசலம் ஐடியா கொடுத்தார். ஜெய்சங்கரின் பல படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார்; தயாரித்திருக்கிறார் பஞ்சு அருணாசலம்.


ஏவிஎம்மில் இருந்து தயங்கித் தயங்கி ஜெய்சங்கரிடம் கேட்க, அவர் உடனே போன் போட்டு ஆலோசனை கேட்டார். அப்படி ஆலோசனை கேட்டது பஞ்சு அருணாசலத்திடம் என்பதுதான் சுவாரஸ்யம். ஒருவழியாக சம்மதித்தார் ஜெய்சங்கர். கிட்டத்தட்ட, ஏவிஎம், ரஜினி போல் ஜெய்சங்கருக்கும் அப்படியொரு வெற்றி அவசியமாகத்தான் இருந்தது.


படத்துக்கு இளையராஜா மிகப்பெரிய பலமாக இருந்தார். எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார். ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ இன்றைக்கும் ரஜினி ரசிகர்களின் முக்கியமான பாடலாக அமைந்திருக்கிறது. அவ்வளவு ஏன்.. ரஜினிக்கே பிடித்த பாடல் வரிசையில் இந்தப் பாடலும் உள்ளது.


ரஜினி, ஜெய்சங்கர், ரதி, சுமலதா, சுருளிராஜன், ஒய்.ஜி.மகேந்திரன் நடித்தார்கள். ஆஸ்தான ஒளிப்பதிவாளர் பாபு, ஆஸ்தான எடிட்டர் விட்டல், ஆஸ்தான இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் கூட்டணியில் ஜூடோ ரத்தினத்தின் சண்டைக்காட்சிகள் பிரமிக்க வைத்தன. முக்கியமாக, க்ளைமாக்ஸ் ரயில் சண்டைக்காகவே திரும்பத் திரும்பப் பார்த்தார்கள் ரசிகர்கள்.


காளையன் எனும் கேரக்டரில் ரஜினி பின்னிப்பெடலெடுத்திருந்தார். ரஜினியின் ஸ்பெஷலே அவரின் தலைமுடியும் அதை அவர் கோதிவிடுவதும்தான். ஆனால், கிராமத்துக்கார தோற்றத்துக்காக விக் வைக்கப்பட்டது. படம் முழுவதும் வேஷ்டியில்தான் வலம் வந்தார் ரஜினி, க்ளைமாக்ஸ் தவிர்த்து!


ரத்தியின் அழகும் நடிப்பும் கவனம் ஈர்த்தது. ஜெய்சங்கரின் நடிப்பு, ஜெண்டிலான வில்லன் எனப் பேரெடுத்தது. காமெடியும் வசனங்களும் ரசிக்கப்பட்டன. மஞ்சுவிரட்டுக் காட்சிகள் மிரளச் செய்தன. ‘சீவிடுவேன்’ என்கிற ரஜினி வசனம் விசில் பறக்கவைத்தது.


‘முரட்டுக்காளை’ ரஜினியின் கேரியரில் மிக முக்கியமான படமாக அமைந்தது. ‘ரஜினி அவ்ளோதான்’ என்று பேசியவர்கள் வாய் பிளந்து வெற்றியைப் பார்த்தார்கள். இதன் பிறகு ரஜினியின் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பித்தது.


‘முரட்டுக்காளை’ திரைப்படம், மிகப்பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. வசூல் மழை பொழிந்தது. 1980-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 20-ம் தேதி வெளியானது. நிறைய தியேட்டர்களில், பொங்கலுக்கு இந்தப் படத்தைத் தூக்கவில்லை. அப்படியே தொடர் ஹவுஸ்புல்லாக ஓடியது. சில்வர் ஜூப்ளி படமாக அமைந்தது. 200 நாட்களைக் கடந்து ஓடியது.


1980-ம் ஆண்டு டிசம்பர் 20-ம் தேதி வெளியான ‘முரட்டுக்காளை’ படம் வெளியாகி, 39 வருடங்களாகிவிட்டன. இதோ... 2020-ம் ஆண்டு, ‘முரட்டுக்காளை’க்கு 40-வது ஆண்டு.


இன்றைக்கும் ‘அண்ணனுக்கு ஜே...’ காளையனுக்கு ஜே’ போட்டுகொண்டிருக்கிறார்கள், ‘முரட்டுக்காளை’யின் ரசிகர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x