Published : 21 Dec 2019 03:30 PM
Last Updated : 21 Dec 2019 03:30 PM

குடியுரிமைச் சட்டத் திருத்த விவகாரம்: ரஜினி கருத்தை விமர்சித்தவர்களுக்கு ஷான் ரோல்டன் பதிலடி

குடியுரிமைச் சட்டத் திருத்த விவகாரம் தொடர்பாக ரஜினியின் கருத்தை விமர்சித்தவர்களுக்கு ஷான் ரோல்டன் பதிலடிகொடுத்துள்ளார்.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக ரஜினி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள கடிதத்தில், "எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வு காண வன்முறை மற்றும் கலவரம் ஒரு வழி ஆகிவிடக் கூடாது. தேசப் பாதுகாப்பு மற்றும் நாட்டு நலனை மனதில் கொண்டு இந்திய மக்கள் எல்லோரும் ஒற்றுமையுடனும் விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் வன்முறை என் மனதிற்கு மிகவும் வேதனை அளிக்கிறது" என்று தெரிவித்தார்.

மாணவர்கள் வன்முறை செய்கிறார்களா என்று பலரும் ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேலும், தொடர்ச்சியாக ரஜினியைத் திட்டித் தீர்த்து வருகிறார்கள். இதற்கு ரஜினி ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் ரஜினி கருத்து தொடர்பான சர்ச்சை குறித்து இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தனது ட்விட்டர் பதிவில், "கொதிப்படையும் அனைவருக்கும் கூறுகிறேன், வன்முறை எந்த ஒன்றிற்கும் தீர்வாக முடியாது. ஒவ்வொருவரும் தங்கள் வன்முறைக்கான நியாயத்தை வைத்துள்ளனர். இதே அணுகுமுறை தொடர்ந்தால் அராஜகம் மட்டுமே நமக்கு எஞ்சும். கொதிப்படையாதீர்கள், ரஜினி சாரின் இந்த அறிவுரைக்குத் தவறாக விளக்கம் அளிக்காதீர்கள், உணர்ச்சிக்கு உங்களை இழந்து விட வேண்டாம்.

மக்களாக நாம் கேள்விகள் எழுப்ப உரிமை கொண்டவர்கள். ஆனால், வன்முறை மூலம்தான் நாம் விரும்பியதை அடைய முடியும் என்பது தவறான முன்னுதாரணத்தை அளித்துவிடும். இதுதான் ரஜினி சாரின் செய்தியின் சாரம் ஆகும். நான் நடுநிலையாளன், இருந்தும் கூட நான் தெளிவாகவே பார்க்கிறேன்.

கழுதைகள் ட்விட்டர் கணக்கு வைத்திருந்தால் கூட அதற்கும் கூட நிறைய ட்வீட் செய்ய விஷயங்கள் இருக்கும். தனிநபர் என்ன விரும்புகிறார் என்ற அடிப்படையில் நாம் தீர்வுகளை எட்ட முடியாது. இது ஜனநாயகம். இதில் கொஞ்சம் நம்பிக்கை வையுங்கள். அமைதியான தீர்வுக்கு நம்பிக்கை வையுங்கள்.

பிறர் மீது கோபக் கனலை வீசுபவர்கள் கோபத்தை உங்கள் மீதே திருப்பி விடுங்கள். உங்களிடம் கருத்துகள் மட்டுமே உள்ளன, தீர்வுகள் இல்லை. மக்களிடமிருந்து வரும் நேர்மறையான மாற்றங்களை எந்த ஒரு அரசும் மறுக்க முடியாது. இங்கு சப்தம் போடுவதை விட எந்த ஒரு விவகாரத்திலும் உங்கள் பங்களிப்புதான் என்ன?" என்று கேட்டுள்ளார் ஷான் ரோல்டன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x