Last Updated : 20 Dec, 2019 12:49 PM

 

Published : 20 Dec 2019 12:49 PM
Last Updated : 20 Dec 2019 12:49 PM

முதல் பார்வை: ஹீரோ

தற்போதுள்ள கல்வி முறைகள், கல்வி நிறுவனம், முதலாளிகளின் அணுகுமுறை ஆகியவற்றைக் கேள்வி கேட்கும் நாயகனின் கதை தான் 'ஹீரோ'.

போலிச் சான்றிதழ் அச்சடிப்பது, கல்லூரிகளில் சீட் வாங்கிக் கொடுப்பது உள்ளிட்ட வேலைகளைச் செய்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவருடைய பகுதியில் குடியிருக்கும் இவானா, படிப்பில் சுமாராக இருந்தாலும் அறிவார்ந்தவர். அவருக்கு ஏரோநாட்டிக்கல் இன்ஜினீயரிங் படிக்க ஆசை. அவருடைய ஆசையை நிறைவேற்ற, தனக்குத் தெரிந்த கல்லூரிகளில் சீட் கேட்கிறார் சிவகார்த்திகேயன்.

இதைத் தொடர்ந்து அர்ஜுன் நடத்தி வரும் இவானா படிக்கும் பள்ளிக்குச் செல்கிறார். அங்குள்ள மாணவர்களின் கண்டுபிடிப்புகள் சிவகார்த்திகேயனை வியக்க வைக்கின்றன. அப்போது அர்ஜுனுக்குத் தெரியாமல் இவானாவின் கண்டுபிடிப்பை வைத்து, கல்லூரியில் இவானாவுக்கு சீட் பெறுகிறார் சிவகார்த்திகேயன்.

திடீரென்று இவானா கைது செய்யப்பட்டு, அவரது கண்டுபிடிப்பு திருட்டுத்தனமானது என்கிறார்கள். இதனைத் தொடர்ந்து அர்ஜுன் பள்ளிக்குச் சிக்கல் வருகிறது. அர்ஜுன் பள்ளியில் படிக்கும் மாணவர்களையும், இவானா கண்டுபிடிப்பையும் காக்க சிவகார்த்திகேயன் போராடுவதே திரைக்கதை.

’இரும்புத்திரை’ படத்தின் மூலம் தன் மீதான எதிர்பார்ப்பை உருவாக்கிய மித்ரன், இந்தப் படத்திலும் கவனிக்க வைக்கிறார். ஒவ்வொரு காட்சியின் பின்னணியிலும் அவருடைய உழைப்பு தெரிகிறது. இன்றைய கல்வி முறை எப்படியிருக்கிறது, நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம், மாணவர்களின் திறமைகளை எப்படி மழுங்கடிக்கிறோம் என்பதைச் சமரசம் செய்யாமல் சொல்லி அப்ளாஸ் அள்ளுகிறார்.

'ஜென்டில்மேன்' படத்தில் அர்ஜுனின் கதாபாத்திரத்தின் பெயர் கிருஷ்ணமூர்த்தி. இந்தப் படத்தில் அர்ஜுனின் பெயர் சத்யமூர்த்தி. இதில் கொள்ளையடித்து இலவசக் கல்வி கொடுக்கப் போய் சிக்கிக் கொள்கிறார். அப்போது இங்கு கல்வியில் பிரச்சினையில்லை, சிஸ்டத்தில் பிரச்சினை இருக்கிறது. 'இந்த சிஸ்டமை மாத்துறத்துக்கு ஜென்டில்மேன் பத்தாது, ஹீரோ வேணும்' என்று அர்ஜுனைப் பேசவைத்து, 'ஜென்டில்மேன்' படத்தின் தொடர்ச்சி போல் காட்சிகளை அடுக்கி பார்வையாளர்களை நம்ப வைத்துள்ளார் இயக்குநர் மித்ரன்.

சிவகார்த்திகேயனின் நடிப்பு கச்சிதம். போலிச் சான்றிதழ் அடிப்பது, நாயகி கல்யாணி ப்ரியதர்ஷனைக் காதலிக்க வைக்கப் போராடுவது, அர்ஜுனை முதலில் திட்டுவது, பின்பு அவர் சொல்படிக் கேட்பது, அப்பாவிடம் உருகுவது எனக் கதாபாத்திரத்தில் பொருந்தியுள்ளார். ஆனால், சில காட்சிகளில் கொஞ்சம் குண்டாகத் தெரிவது காஸ்ட்யூமில் பிரச்சினையா அல்லது அப்படித் தான் இருந்தாரா என்பது தெரியவில்லை.

இந்தப் படத்தின் மற்றொரு நாயகன் அர்ஜுன். இடைவேளை வரை இவருக்குத்தான் சண்டைக் காட்சிகள் உள்ளன. இலவசக் கல்வியைக் கொடுக்க முனைவது, சிவகார்த்திகேயனிடம் ஆவேசப்படுவது, வில்லனிடம் சவால் விடுவது என வெரைட்டி காட்டியுள்ளார். 'என்னை அழிக்கலாம். ஆனால் நான் விதைத்துள்ள சிந்தனைகளை உன்னால் அழிக்கவே முடியாது' என சவால் விடும் விதம் அற்புதம்.

வில்லனாக அபய் தியோல் தமிழில் அறிமுகமாகியிருக்கும் படம் இது. இதர மொழி நாயகர்கள் இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால், அவ்வளவு கச்சிதமாக இருக்கிறது லிப்-சிங்க். ஆரம்பத்தில் தன் கல்லூரியில் சோதனையிட வரும் காவல்துறை அதிகாரியிடம் சவால்விட்டுக் கிளம்பியவுடன், காவல்துறை அதிகாரி அப்படியே மாற்றிப் பேசும்போது இவருடைய வில்லத்தனத்தை உணர்த்தி விடுகிறார். நடை, உடை, முகபாவனை என்பதன் மூலம் தன்னுடைய வில்லத்தனத்தைக் கச்சிதமாகப் பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கிறார்.

படத்தின் கதையே இவானாவைச் சுற்றிதான் நகர்கிறது. அவரும் ஏழ்மையான குடும்பப் பெண்ணாகவும், 'நான் திருடியா அண்ணா' என்று கேட்கும் இடத்திலும் ஈர்க்கிறார். ஆரம்பத்தில் சில காட்சிகள், ஒரு பாடல் மற்றும் இறுதியில் சில காட்சிகள் என வந்துவிட்டுப் போயிருக்கிறார் கல்யாணி ப்ரியதர்ஷன். மற்றபடி நடிப்பதற்குப் பெரிய கதாபாத்திரம் எல்லாம் இல்லை. சிவகார்த்திகேயனிடம் அவர் என்ன தவறு செய்து கொண்டிருக்கிறார் என்று எடுத்துரைக்கும் காட்சியில் மட்டும் கவர்கிறார். ரோபோ ஷங்கர், அழகம் பெருமாள் ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப ரீதியில் ரொம்பவே வலுவான படம். போலிச் சான்றிதழ் அடிக்கும் இடம், கல்லூரிக் காட்சிகள், அர்ஜுனின் பள்ளிக்கூடம் என சுற்றிச் சுழன்றுள்ளது ஜார்ஸ் சி.வில்லியம்ஸின் கேமரா. கதைக்கு என்ன தேவையோ, அதிலிருந்து விலகாமல் ஒளிப்பதிவில் பயணித்திருப்பது தெரிகிறது. யுவனின் பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால், பின்னணி இசை அற்புதம். கதை வெவ்வேறு களத்துக்கு நகரும்போது, தன் பின்னணி இசையிலும் வேற்றுமை காட்டியிருக்கிறார்.

தயாரிப்பு வடிவமைப்பாளர் செல்வகுமாரின் பணிகள் இந்தப் படத்தில் மிகவும் கவனிக்கப்பட வேண்டியவை. அர்ஜுனின் பள்ளிக்கூடத்தில் இருக்கும் சிறுசிறு விஷயங்கள், அவர் உபயோகிக்கும் சின்ன உருளை வடிவிலான குண்டுகள், சூப்பர் ஹீரோ காஸ்ட்யூம், சூப்பர் ஹீரோ மாஸ்க் என ரொம்பவே மெனக்கிட்டு இருக்கிறார். மேலும், அரங்குகள் வடிவமைப்பிலும் நம்பகத்தன்மையைக் கொண்டுவந்துள்ளார்.

மாணவர்களின் திறமையை ஏன் மார்க்கை வைத்து எடை போடுகிறீர்கள் என்று நமது கல்விமுறையைக் கேள்வி கேட்டுள்ளார் இயக்குநர். அதற்கு, பார்வையாளர்கள் நம்பத்தகுந்த காட்சிகள், வசனங்கள் மூலமாக எடுத்துரைத்த விஷயத்தில் வென்றுள்ளது படக்குழு. இதற்கு "பசங்களுடைய மார்க்கெட் சீட், புக்ஸ், ஸ்கூல் நோட் எல்லாம் பாக்குறோம், எத்தனை பேர் அவனுடைய ரஃப் நோட்டைப் பாக்குறோம்" என்ற வசனம் ஒரு சான்று. இங்கு 'நிதியை வைத்து நீதியைக் கூட வாங்கலாம்', 'போலியான யுனிவர்சிட்டி நடத்தினால் இங்கு அபராதம் வெறும் 1000 ரூபாய் தான்', 'சுயமா சிந்திக்கத் தெரிந்த ஒவ்வொருத்தனும் ஹீரோதான்' என்ற வசனங்கள் மூலமாக எம்.ஆர்.பொன் பார்த்திபன், ஆண்டனி பாக்கியராஜ் மற்றும் சவரிமுத்து ஆகியோர் கைதட்டல் பெறுகிறார்கள்.

படத்தில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் ஆரம்பமும், கடைசியும் தான். தொடக்கத்தில் வரும் பாடல்கள், காதல் காட்சிகள் எல்லாம் தேவையே இல்லை. அதேபோல் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ ஆனவுடன் வில்லனுடன் மோதும் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் சேர்த்திருக்கலாம். எளிதாக அபய் தியோல் அலுவலகத்திற்குள் சென்று கேமராக்கள் வைப்பது, காரிலிருந்து மிக எளிதாக ஃபைல்களை எடுப்பது எல்லாம் கொஞ்சம் ஓவர். இறுதியில் சாட்டிலைட் மூலம் அனைத்து டிவியிலும் சிவகார்த்திகேயன் அவ்வளவு எளிதாகத் தோன்றிப் பேசுவது எல்லாம் நம்பும்படியாக இல்லை. 'சுயமாகச் சிந்திக்கத் தெரிந்தவன் சூப்பர் ஹீரோ' என்ற வசனம் பேசும் சிவகார்த்திகேயன், அர்ஜுன் சொல்லும்படியே பின்தொடர்வது முரணாக இருக்கிறது.

படம் முடிந்தவுடன், எழுத்துகள் ரோலிங்கில் போகும்போது புதிய கண்டுபிடிப்புகள் என்ன என்பதையும், அதை உருவாக்கியவர்கள் என்ன படித்திருக்கிறார்கள் என்பதை அவர்களின் வாயாலேயே சொன்ன விஷயத்துக்குப் பெரிய பூங்கொத்து. அது முடிவடைந்தவுடன், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நம் கல்வி முறை எப்படியிருக்கிறது. கண்டுபிடிப்புகளில் எத்தனையாவது இடம், மாணவர்கள் தற்கொலையில் எத்தனையாவது இடம் எனச் சொல்லி முடித்திருப்பது இந்தப் படத்தின் கதை இப்போது எவ்வளவு முக்கியம் என உணர்த்துகிறது.

தற்போதைய கல்விச் சூழலையும், மாற்றுக் கல்வியின் அவசியத்தையும் சொன்ன விதத்தில் இன்றைய பெற்றோர்கள் தவறவிடக் கூடாத படமாக 'ஹீரோ' இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x