Published : 19 Dec 2019 05:10 PM
Last Updated : 19 Dec 2019 05:10 PM

நன்றாக ஓய்வெடுங்கள்; உங்கள் மனதுக்குத் தேவை: ட்விட்டரில் குஷ்பு Vs கஸ்தூரி மோதல்

குடியுரிமைச் சட்டம் தொடர்பாக ட்விட்டர் தளத்தில் குஷ்பு மற்றும் கஸ்தூரி இருவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த மசோதா தொடர்பாக டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின்போது மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாகப் புகைப்படங்கள், வீடியோக்கள் ட்விட்டர் தளத்தில் வெளியானது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த விவகாரத்தால் மீண்டும் ட்விட்டர் தளத்துக்குத் திரும்பியுள்ளார் குஷ்பு. மேலும், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டவற்றை கடுமையாகச் சாடியுள்ளார்.

இது தொடர்பாக குஷ்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "யார் நாட்டின் குடிமகன், யார் குடிமகன் அல்ல என்பதைத் தீர்மானிக்க நீங்கள் யார் அமித் ஷா? நமது நாட்டின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் அழிக்கும் ஆணைகளைத் தர நீங்கள் யார்? அகதிகள், அந்நியர்கள் என்று நீங்கள் அழைப்பவர்கள்தான் உங்களை ஆட்சியில் அமரவைக்க வாக்களித்தவர்கள். இந்த நாடு மதச்சார்பின்மையில் வாழ்கிறது. மதத்தில் அல்ல" என்று தெரிவித்தார்.

இந்தப் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கஸ்தூரி, "நான் குழப்பமடைந்துள்ளேன். எப்படி ஓட்டுப் போடும் குடிமக்கள் அந்நியர்களாக, அகதிகளாக இருக்க முடியும்? இந்திய வாக்காளர் பட்டியலில் இருப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட குடிமக்களே. ஏதோ இந்தியர்களுக்கு அவர்கள் குடியுரிமையே பறிக்கப்படுவதைப் போலப் பேசுகிறீர்கள். அந்தப் பொய்யை நீங்கள் நம்புகிறீர்கள் என்றால் நீங்கள் CAA (Citizenship Amendment Act) குறித்து ஒழுங்காகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

குஷ்பு உட்பட பல பேர் CAB (Citizenship Amendment Bill) மற்றும் NRC (National Citizenship Register) குழப்பிக் கொள்கிறார்கள். NRC என்பது மத ரீதியான வழிமுறை அல்ல. NRC என்பது அடிப்படையில் 1971-ல் ஆரம்பித்த, அசாமியர்களிடையே நடத்தப்பட்ட வேட்டை. அது இப்போது நிறைவடைந்துள்ளது. அது காலனிய, நேருவியக் கொள்கைகளினால் உருவான ஒன்று" என குஷ்புவின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு பதிவிட்டார்.

கஸ்தூரியின் பதிவுக்கு குஷ்பு, "நான் சொன்னது சரி என்று நிரூபித்துவிட்டீர்கள். நான் CAB அல்லது NRC பற்றிக் குறிப்பிட்டேனா? நன்றாக ஓய்வெடுங்கள். உங்கள் மனதுக்குத் தேவைப்படுகிறது” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x