Published : 19 Dec 2019 05:02 PM
Last Updated : 19 Dec 2019 05:02 PM

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம்: சித்தார்த்தின் கருத்துக்கு காயத்ரி ரகுராம் பதிலடி

தனக்குப் பிரதமர் மோடி பின்பற்றும் கணக்குகளிலிருந்து கொலை மிரட்டல் வருவதாக சித்தார்த் தெரிவித்த கருத்துக்கு காயத்ரி ரகுராம் பதிலடி கொடுத்துள்ளார்.

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக நாடெங்கும் போராட்டம் வலுத்து வருகிறது. மாணவர்கள் பெருமளவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் தொடர்பாக பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் தங்களுடைய கருத்துகளை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டு வந்தனர்.

குடியுரிமைச் சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்தே கடுமையாக எதிர்த்து வருபவர் நடிகர் சித்தார்த். தற்போது குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் பல மாநிலங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில், "எனக்கும், என் அன்பார்ந்தவர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி பின்பற்றும் கணக்குகளிலிருந்து ட்வீட்டுகள் மூலம் கைது செய்வோம் என்று மிரட்டல் வருகின்றன. சுதந்திரமான தேசத்தில் எங்கள் மனதில் இருப்பதை பேச முயல்கிறோம். அசிங்கமான வார்த்தைகளும், கடுமையான சட்டங்களும் எதிர்ப்புக் குரல்களை நெரிக்க முடியாது. எதிர்ப்பையும் மீறி நாங்கள் நிலைப்போம். ஜெய்ஹிந்த்” எனத் தெரிவித்தார்.

சித்தார்த்துக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம், சித்தார்த்தின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு கடுமையாகச் சாடியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சமூக ஊடகத்தில் மக்களைத் தவறாக வழிநடத்துகிறீர்கள் என்றால், பொய்யான பிரச்சாரம் எச்சரிக்கப்படும். எல்லா பிரபலங்களும் புத்திசாலிகள். அவர்கள் சொல்வது சரி என்று மக்கள் நினைக்கிறார்கள். மக்கள் மீது பொய்மை திணிக்கப்படுகிறது. மக்கள் உணர்ச்சிவசப்படுகின்றனர். கவலைப்படுகின்றனர்.

ஆதாரமில்லாமல் பொய்யான செய்திகள் பரப்புவது தவறு. சாதாரண மக்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். தேசியப் பிரச்சினையில் நமக்கும், சாதாரண மனிதருக்கும் வித்தியாசம் இல்லை. பொய்யான செய்திகள் மூலம் அமைதியைக் கெடுப்பது அல்லது பொதுமக்களைத் தொந்தரவு செய்வது, அவர்களைத் தூண்டுவது எல்லாம் கண்டிக்கத்தக்கது. (#CAB போன்ற) தீவிரமான பொதுப் பிரச்சினையில் பொய் சொல்வதும், மக்களின் அமைதியைக் குலைப்பதும் ஜனநாயகம் அல்ல.

இந்தச் சட்டம் குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள். அதில் சட்ட ரீதியாக ஏதாவது தவறு என்று தெரிந்தால் அதை சட்டரீதியாக நிரூபியுங்கள். அதன் பிறகு அரசாங்கத்தின் குறைகளைச் சுட்டிக்காட்டலாம். (மக்களுக்கு) உண்மையைச் சொல்லுங்கள்" என்று தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x