Published : 19 Dec 2019 11:52 AM
Last Updated : 19 Dec 2019 11:52 AM

ஒரே நாளில் ரெண்டு சிவாஜி படங்கள்;  நான்கு முறை ரிலீஸாகி சாதனை! 


வி.ராம்ஜி


ஒரேநாளில் இரண்டு சிவாஜி படங்கள் வெளியாகின. இது ஒருமுறை மட்டுமின்றி, நான்கு முறை ரிலீசாகி சாதனை படைத்தது. இப்படி இத்தனை முறை வேறு எந்த நடிகரின் படமும் ஒரே நாளில் அதிகபட்சமாக ரிலீசாகவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.


1964-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வாழ்விலும் அவரின் ரசிகர்களின் எண்ணத்திலும் மறக்கமுடியாத ஆண்டு. இந்த வருடத்தில், கே.சங்கர் இயக்கத்தில் தேவிகாவுடன் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் நடித்தார் சிவாஜி கணேசன். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.


‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தைப் போலவே, மிகப் பிரமாண்டமான முறையில் பி.ஆர்.பந்துலு, சிவாஜியை வைத்து, ‘கர்ணன்’ படத்தை எடுத்தார். மிகச்சிறந்த படம். அருமையான நடிப்பில் அசத்தினார் சிவாஜி. ஆனாலும் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.


கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில், சிவாஜி, கே.ஆர்.விஜயா, சாவித்திரி முதலானோர் நடித்த ‘கைகொடுத்த தெய்வம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இதேபோல், ஏ.பீம்சிங் இயக்கத்தில், சிவாஜி, செளகார் ஜானகி, விஜயகுமாரி, எஸ்.எஸ்.ஆர், நாகேஷ் நடித்த ‘பச்சை விளக்கு’ திரைப்படம் வெளியானது. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்த வருடத்தில், சிவாஜி பிலிம்ஸ் சார்பில், ‘புதிய பறவை’யை எடுத்தார் சிவாஜி. தாதா மிராஸி இயக்கத்தில், சரோஜாதேவி, செளகார் ஜானகி, நாகேஷ், மனோரமா, வி.கே.ராமசாமி, எம்.ஆர்.ராதா முதலானோர் நடித்திருந்தனர். இந்தப் படம் இன்றைக்கும் ரசிக்கும் வகையிலான, வியக்கும் வகையிலான மிகச்சிறந்த படம் என்று கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள்.


‘கர்ணன்’ படத்தை இந்த வருடத்தில் இயக்கித் தயாரித்த பி.ஆர்.பந்துலு, சிவாஜியை வைத்து ‘முரடன் முத்து’ படத்தை இயக்கினார். தேவிகா நடித்திருந்தார். படம் பெரிதாகப் போகவில்லை. இந்த சமயத்தில்தான், இந்த வருடத்தில்தான், சிவாஜியின் 100-வது படம் வெளியானது. ஏ.பி.நாகராஜன் இயக்கத்தில், சிவாஜி, சாவித்திரி நடித்த ‘நவராத்திரி’ படம் வெளியானது. ஒன்பது வேடங்களில் நடித்தார் சிவாஜி. ஆனால், பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நூறாவது படமான ‘நவராத்திரி’ பெரிய அளவில் போகவில்லை.


1964-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 3-ம் தேதி, ‘நவராத்திரி’ ரிலீசானது. இதேநாளில்தான் ‘முரடன் முத்து’ திரைப்படமும் வெளியானது. இந்தப் படமும் சரியாக ஓடவில்லை.


‘ஆண்டவன் கட்டளை’, ‘கர்ணன்’, ‘முரடன் முத்து’ மூன்று படங்களில் தேவிகா சிவாஜியுடன் நடித்தார். ‘கை கொடுத்த தெய்வம்’ படத்திலும் ’கர்ணன்’ படத்திலும் ’நவராத்திரி’ படத்திலும் சாவித்திரி நடித்திருந்தார்.


64-ம் ஆண்டில், ‘ஆண்டவன் கட்டளை’, ‘புதிய பறவை’, ‘கை கொடுத்த தெய்வம்’, ‘பச்சை விளக்கு’ என மிகப் பிரமாண்டமான வெற்றியைக் கொடுத்தார் சிவாஜி.


64-ம் ஆண்டுக்குப் பிறகு, 67-ம் ஆண்டு ஒரேநாளிலும் 68-ம் ஆண்டு ஒரேநாளிலும் அதேபோல் 70-ம் ஆண்டின் ஒரேநாளிலும் சிவாஜி நடித்த இரண்டு படங்கள் அந்தந்த வருடங்களில், அதேதேதிகளில் வெளியாகின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x