Published : 17 Dec 2019 02:32 PM
Last Updated : 17 Dec 2019 02:32 PM

CIFF-ல் டிசம்பர் 18 அன்று என்ன படம் பார்க்கலாம்? -  மு. அப்துல் முத்தலீஃப் பரிந்துரைகள்

X - THE EXPLOITED | HUNGARY | 2018 | தேவி, காலை 11.00 மணி

ஹங்கேரியில் கடந்த காலத்தில் மக்களை வேட்டையாடிய வரலாற்றை இப்படம் ஆராய்கிறது. இருண்ட கம்யூனிஸ்ட் வேர்களைக்கொண்ட காலங்களில் நடந்த தற்கொலைகள் பலவும் கொலைகளா என்பதை மறுபரிசீலனை செய்ய இருவேறு குழுக்கள் துப்பறியும் பணியில் ஈடுபடுகின்றன. இப்படத்தில் ஹங்கேரிய போலீஸ் துப்பறியும் ஈவா பாடிஸின் திறன்மிக்கப் பணிகள் மிகவும் சிறப்பானது. ஈவானின் கணவர் இறந்தது தற்கொலையல்ல என உணரும் ஈவா தனது தற்காலிக புதிய கூட்டாளியுடன் தங்கள் நாட்டின் இருண்ட கம்யூனிஸ்ட் கடந்த காலங்களில் வேர்களைக் கொண்ட ஒரு மோசமான சதியை சுட்டிக்காட்டுகின்றனர். இதன் விளைவாக மறைக்கப்பட்ட மற்றும் கொடூரமான குற்றங்கள் வெளிப்படுகின்றன.

PATHS IN THE NIGHT | GERMANY | 1999 |தேவிபாலா, காலை 10.45 மணி

தனது ஐம்பதுகளின் பிற்பகுதியில் இருக்கும் வால்டர் வேலையில்லாமல் இருக்கிறார். சமையலறை மேசையில் தனியாக அமர்ந்து அவர் ஒரு தினசரி செய்தித்தாளின் வேலை விளம்பரங்களை படிக்கிறார், ஆனால் எந்த வேலைக்கும் அவர் விண்ணப்பிக்கவில்லை. அவரது மனைவி சில்வியா ஒரு உணவகத்தில் பணியாளராக ஒரு பதவியை ஏற்றுக்கொண்டு இவரது வாழ்வாதாரத்தையும் கவனித்து வருகிறார். ஆனால் வால்டர் இந்த நிலைமையை தொடர்ந்து ஏற்க முடியாது.

AMARE AMARO | FRANCE | 2018 | அண்ணா, மாலை 7.15 மணி

கேடானோ சராசரியான அமைதியான இளைஞன். தனது தந்தையுடன் வசித்து வரும் கேடானோ தனது குடும்ப பேக்கரியை தனியாக கவனித்து வருகிறார். அவருடைய பேக்கரி பொருட்கள் அவர் வசிக்கும் கிராம மக்களால் அதிகம் விரும்பி வாங்கப்பட்டாலும், பிரெஞ்சு தந்தைக்கும் இத்தாலி தாய்க்கும் பிறந்த அவரை கிராமம் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில் கேடானோவின் சகோதரர் குற்ற சம்பவத்தில் இறக்க அவரது இறுதிச் சடங்கை கிராமத்தில் நடத்த கிராமம் தடைவிதிக்கிறது. கிராமத்தின் எதிர்ப்பை மீறி கேடானோ தனது சகோதரை தனது தாயின் சமாதியின் அருகில் புதைக்கிறாரா என்பதை த்ரில்லிங்காக கூறுவதே அமரே அமரோ.

AREN'T YOU HAPPY | GERMANY | 2019 | கேஸினோ, பகல் 12.15 மணி

இயக்குநர் சூசேன் ஹெயின்ரிச்சின் முதல் திரைப்படமான 'ஆர் நாட் யூ ஹாப்பி', உறங்குவதற்கு இடம் தேடி நகரம் முழுதும் சுற்றித் திரியும் தனித்த பெண்ணின் கதை. நகரில் சுற்றித் திரியும் போது, காமத்தைத் தூண்டுவது அல்லது வேறு விதங்களில், புதிய மனிதர்களுடன் அப்பெண் உரையாடுகிறாள். இந்த சந்திப்புகளில், மாறும் இவ்வுலகில் தன்னையே புரிந்துகொள்ள முற்படுகிறாள். குழந்தைப் பேறு, காமம், பாலியல், சமூக உரையாடல்கள் ஆகியவற்றை இந்தப் படம் வேறு கோணங்களில் உணர்த்துகிறது. இருத்தலியல் நகைச்சுவையைகக் கையாண்டிருக்கும் இந்த திரைப்படம், பின்நவீனத்துவம், பெண்ணியம் உள்ளிட்டவற்றை பேசுகிறது. இத்திரைப்படம், பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றுள்ளது.

DEAR EMMA, SWEET BOBE | HUNGARY | 1992 | ரஷிய கலாச்சார மையம், காலை 9.30 மணி

எம்மா மற்றும் போபே ஆகிய இரு பெண்களின் கதை இது. இருவரும் தங்கள் நெருக்கமான வாழ்க்கைக்காக தொடர்ந்து போராடுகிறார்கள். முந்தைய ஆட்சியில் கடின உழைப்பில் தங்களுக்கென்று ஒரு இடத்தை அவர்கள் பெற்றிருந்தனர். ஆனால் இப்போது அதுவே பெரும் பிரச்சினையாகியுள்ளது. அவர்கள் தங்கள் இடத்தை இழந்து மீண்டும் கிராமப் பெண்களாக மாற விரும்பவில்லை.

BALANGIGA: HOWLING WILDERNESS | PHILIPPINES | 2018 | தாகூர் பிலிம் சென்டர் என்எப்டிசி, பிற்பகல் 2.00 மணி

1901ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையே நடந்த போரில் பலாங்கிகா என்னும் இடம் கடும் பாதிப்புள்ளாக்குகிறது. அமெரிக்கப் படைகளிடமிருந்து ஓடும் குலாஸ் என்னும் சிறுவனும் அவனது தாத்தாவும் அங்கிருந்து தப்பிக்கின்றனர். பிணக்குவியல்களில் மத்தியில் ஒரு சிறுவனை கண்டெடுக்கிறான் குலாஸ். அவர்கள் அமெரிக்கப் படையினரிடமிருந்து தப்பித்தார்களா? என்பதே படத்தின் கதை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x