Published : 16 Dec 2019 11:16 AM
Last Updated : 16 Dec 2019 11:16 AM

சென்னை பட விழா | தேவிபாலா | டிசம்.17 | படக்குறிப்புகள்

காலை 10.45 மணி | THE COUNTY / HERADID |DIR: GRIMUR HAKONARSON | DENMARK | 2019 | 90'

இங்கா மற்றும் ரெய்னிர் இருவரும் தம்பதிகள். ஐஸ்லாந்தின் ரெய்ஜாவிக் அருகே உள்ள சிறிய கிராமத்தில் பால் பண்ணை ஒன்றை சொந்தமாக நடத்தி வருகின்றனர். பால் பண்ணையால் ஏற்பட்ட கடன் நெருக்கடியால் மன உளைச்சலில் சிக்கித் தவிக்கின்றனர். சிறிது காலத்திலேயே கணவர் ரெய்னிர் இறந்துவிட இங்கா பால் பண்ணைக்குப் பொறுப்பேற்கிறார். அங்கு ஏற்படும் நஷ்டம் எதனால் என்று கண்டறிகிறார். அங்குள்ள கூட்டுறவு சங்கம் உள்ளூர் விவசாயிகள் மீது செலுத்தும் ஆதிக்கத்தையும் தெரிந்துகொள்கிறார். மாஃபியா கும்பலுக்கு எதிராகப் போராட முடிவெடுக்கிறார். ஆனால்...?

பகல் 1.00 மணி | A REGULAR WOMAN / NUR EINE FRAU | DIR: SHERRY HORMANN | TURKEY / GERMANY | 2019 | 90'

துருக்கிய வம்சாவளியைச் சேர்ந்த ஜெர்மன் பெண்ணான ஹதுன் அய்ருன் செரெஸின் தலைவிதியையும், அவரது குடும்பத்தின் எதிர்ப்பை எதிர்கொண்டு ஒரு சுதந்திரமான, சுயநிர்ணய வாழ்க்கைக்கான போராட்டத்தையும் சித்தரிக்கிறது இத்திரைப்படம். அவளுடைய வாழ்க்கை முறையை அவளுடைய சகோதரர்கள் ஏற்க மறுக்கிறார்கள்; அவமதிப்புகளும் அச்சுறுத்தல்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கவுரவக் கொலையை மையமாக கொண்ட படம் இது. பெர்லினில் ஒரு பரபரப்பான தெருவில் அய்ருனை சொந்த சகோதரன் நூரி சுட்டுக் கொள்கிறார். அதே நேரத்தில் அவளுடைய ஐந்து வயது மகன் கேன் சில நூறு மைல் தொலைவில் உள்ள தனது குடியிருப்பில் தூங்கிக்கொண்டிருக்கிறான். தனது பின்னணியை கதையின் நாயகியான அய்ரூன் கதை சொல்வது போல அமைந்துள்ளது.

பிற்பகல் 3.00 மணி | UYARE | DIR: MANU ASHOKAN | MALAYALAM | 2019 | 125'

இந்த கதை பல்லவி ரவீந்திரன் (பார்வதி திருவோத்து) என்ற பெண்ணின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது, தான் ஒரு விமானி ஆக வேண்டும் என்பதே அவளின் லட்சியம். அவர் கோவிந்த் பாலகிருஷ்ணனை (ஆசிப் அலி) காதலிக்கிறார், கோவிந்த்தின் காதல் மிகவும் தீவிரமாக உள்ளது. அதுவே சிக்கலை உண்டாக்குகிறது. பல்லவி மும்பையில் உள்ள ஒரு பைலட் பயிற்சி மையத்தில் சேர்கிறார். இறுதியாக, அவள் கோவிந்தின் சர்வாதிகாரத் தன்மையைக் கண்டு அஞ்சத் தொடங்குகிறாள், அவனுடைய துஷ்பிரயோகத்திலிருந்து விடுபட தைரியத்தைத் திரட்டுகிறாள், அவள் தனது வகுப்புகளை கைவிட்டு தன்னுடன் வரவேண்டுமென அவளுடைய நண்பர்களுக்கு எதிரே அவளுக்கு அழுத்தமான முத்தம் கொடுத்து அவளை அவமானப்படுத்துகிறான். இதனால் கோபமடையும் பல்லவி அவளுடைய வாழ்க்கையிலிருந்து தொலைந்து போகும்படி அவனிடம் கூறுகிறாள். இருப்பினும், அடுத்த நாள் காலையில் அவள் எழுந்ததும் பழிவாங்கலாக அவள் முகத்தில் ஆசிட் வீசும் கோவிந்தால் தாக்கப்படுகையில் அவள் வாழ்க்கை மாறுகிறது. பல்லவியின் முகம் சிதைக்கப்பட்டு, கண்பார்வை சேதமடைந்துள்ளதால், அவளுடைய விமான உரிமம் ரத்து செய்யப்படுகிறது. அதன்பிறகு அவளது லட்சியம் என்ன ஆனது... மீண்டும் வாழ்க்கையை வெல்ல முடிந்ததா? அவனுக்கு தண்டனை கிடைத்ததா?

மாலை 5.30 மணி | STRIPPED / EROM | DIR: YARON SHANI | ISRAEL / ITALY / GERMANY | 2018 | 119'

17 வயது ஜிவ், ஒரு திறமையான உணர்வுபூர்வமான இசைக்கலைஞன். தனது பெற்றோருடன் வசிக்கும் ஜிவ் ராணுவத்தில் நுழைவதற்கான பேச்சு அடிபடுகிறது. ஆனால் அவரது அப்பாவித்தனத்தையும் கனவுகளையும் பறிகொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பதால் நிறைய யோசிக்கிறான். இதற்கிடையில் தெருவைக் கடக்கும் இடத்தில் ஒரு வெற்றிகரமான எழுத்தாளரும் சுதந்திர சிந்தனையுள்ள பெண் அழகான 34 வயதான ஆலிஸ் வாழ்கிறார். இருவருக்கும் இடையிலான ஒரு சீரற்ற சந்திப்பு ஈர்ப்பையும் புரிதலையும் ஏற்படுத்துகிறது. அதேநேரம் அப்பெண் அனுபவிக்கும் பயங்கரமான மன நெருக்கடி பற்றி அவனுக்குத் தெரியாது. அவர்களுக்கு இடையேயான சந்திப்பு அவர்களின் தலைவிதியை என்றென்றும் நிர்ணயிக்கக் காத்திருக்கிறது.

மாலை 8.00 மணி | HOLY BEASTS / LA FLERA Y LA FIESTA | DIR: LAURA AMELIA GUZMAN AND ISRAEL CARDENAS | DOMINICAN REPUBLIC | 2018 | 164'

வயதான நடிகை வேறா, சாண்டோ டொமினிகோ வந்திறங்குகிறாள். தனது கடைசி படமாக தனது இறந்த நண்பன் ஒருவனின் முடிவடையாத கதையைப் படமாக எடுக்க நினைக்கிறாள். அவள் நடிகையாக உச்சத்தில் இருந்த நேரத்தில் அவளது நண்பர்களாக இருந்த தயாரிப்பாளர் விக்டரும், ஒளிப்பதிவாளர் மார்டினும் அவளுடன் படத் தயாரிப்பில் இறங்க்கின்றனர். படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. கவர்ச்சிகரமான பல விஷயங்களுக்கு நடுவில், பிரச்சினையும், மரணமும் கூட சூழ்ந்து கொண்டு படத் தயாரிப்பில் மர்மமான சூழலைக் கொண்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x