Published : 14 Dec 2019 03:54 PM
Last Updated : 14 Dec 2019 03:54 PM

CIFF-ல் டிசம்பர் 15 அன்று என்ன படம் பார்க்கலாம்? - கார்த்திக் கிருஷ்ணா பரிந்துரைகள்

HEARTS AND BONES | AUSTRALIA | 2019 | தேவி, மாலை 7.00 மணி

ஒரு போர் புகைப்படக் கலைஞரான ஹூகோ வீவிங் மற்றும் அகதி ஆந்த்ரே லூரி இருவரையும் அச்சுறுத்தும் புகைப்படம் ஒன்றைக் கண்டுபிடிக்கின்றனர். அந்தப் புகைப்படம் கிராம கண்காட்சியில் இடம்பெறப் போவதுதான் உச்சபட்ச பிரச்சினை.... இரண்டு முக்கியமான நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டு பென் லாரன்ஸ் ஒரு அறிவார்ந்த, தார்மீக சிக்கலான மற்றும் ஆழமாக நகரும் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

THE GROUND BENEATH MY FEET | GERMANY | 2019 | தேவிபாலா, மாலை 5.30 மணி

கார்ப்பரேட் அலுவலகங்களுக்கான வணிக ஆலோசகர் லோலா. அவள் தனது வேலையில் வருமானத்தை மேம்படுத்த சிறப்பான ஆர்வத்தைக் காட்டுகிறாள். தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் அவளது ஈடுபாடு ஒருவித கறார் தன்மையுடன் அமைகிறது. ஆனால் கடந்த கால துன்பகரமான சம்பவம் ஒன்று அவளது வாழ்க்கையில் மீண்டும் கட்டாயப்படுத்தும்போது, லோலாவின் யதார்த்தத்தின் மீதான பிடி நழுவுகிறது.

SOLE | ITALY | 2019 | அண்ணா, காலை 9.30 மணி

லீனா, எர்மானோ இருவரை சுற்றியே கதை முழுவதும் நகர்கிறது. போலந்து நாட்டில் இருந்து 7 மாத கர்ப்பிணியாக வரும் லீனா தன் வயிற்றில் இருக்கும் குழந்தையை விற்க முயல்கிறார். அப்போது அவருக்கு எர்மானோ அறிமுகமாகிறார். லீனாவின் கணவராகவும், குழந்தைக்கு தந்தையாகவும் நடிக்க எர்மானோ சம்மதிக்கிறார். குழந்தையை விற்கும் பணத்தில் இருவரும் பிரித்துக்கொள்ள முடிவு செய்கிறார்கள்.

எர்மானோவின் மாமா பேபியோவுக்கு குழந்தை இல்லாததால் தானே குழந்தை வாங்கிக் கொள்வதாகவும், அதுவரை வீட்டில் தங்கி இருக்குமாறும் இருவரையும் கேட்டுக்கொள்கிறார். எர்மானோ, லீனா இருவரும் வெளிஉலகிற்கு தம்பதி போல நடக்கிறார்கள். ஆனால், நாளடைவில் லீனா மீது காதல் வருகிறது.

அதை அவன் வெளிக்காட்டவில்லை. லீனாவுக்கு குழந்தை பிறக்கிறது, குழந்தையை தனது குழந்தை போல் எர்மானோ பாவிக்கிறான். குழந்தையை விட்டுச்செல்லவும் லீனாவுக்கு மனமில்லை. குழந்தையை லீனா விற்றாலா, எர்மானாோ லீனாவிடம் காதலைக் கூறினானா என்பதுதான் கதை. இளம்வயதில் தந்தையான ஒருவரின் உணர்வுகளையும், காதலையும், தாய்மையையும் அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்

ALICE | FRANCE | 2019 |கேஸினோ, காலை 9.45 மணி

ஆலிஸ் தனது அன்பான கணவர் மற்றும் ஒரு சிறிய மகனுடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். திடீரென எல்லாம் தலைகீழாக மாறுகிறது. அவரது கணவர் ஆலிஸ் சேமிப்பிலிருந்து எல்லா பணத்துடனும் காணாமல் போகிறார், மேலும் வீடு அடமானத்தில் உள்ளதால் தனது குடியிருப்பில் இருந்து வெளியேறவேண்டிய நிலை. தனது வீட்டைக் காப்பாற்ற அவள் ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் அதிக அளவு பணம் தவணைமுறையில் செலுத்தியாக வேண்டும். ஆலிஸால் அவ்வளவு பணம் சம்பாதிக்க முடியாது. ஆனால் அதற்கும் ஒரே ஒரு வழி இருக்கிறது, அது மேல்தட்டு பாலியல் தொழிலாளியாக ஆலிஸ் மாற வேண்டியதுதான். எல்லாவற்றிலிருந்தும் மீள்வதற்காக அவர் என்ன செய்கிறார்? எமிலி பெப்போனியர் ஆலிஸ் எனும் கதாபாத்திரத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ள படம் இது.

A SON | TUNISIA | 2019 |கேஸினோ, மாலை 7.00 மணி

துனிசியாவில் கோடை 2011 காலகட்டம். மெரீமும் அவரது 10 வயது மகன் அஸிஸும் கும்பல் தாக்குதலில் தற்செயலாக சுடப்படுகிறார்கள். அஸுக்கு கல்லீரலில் காயம் ஏற்படுகிறது. அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அப்போது மிகப்பெரிய ரகசியம் ஒன்று வெளிப்படுகிறது. தான் இதுவரை தந்தை என எண்ணி வந்த நபர் உயிரியல் ரீதியாக தனது தந்தை இல்லை என்ற விவரம் தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை விவரிக்கிறது திரைப்படம்.

THE DAY AFTER I'M GONE | ISRAEL | 2019 | ரஷிய கலாச்சார மையம், பகல் 12.00 மணி

யோரம் டெல் அவிவில் உள்ள ஒரு சஃபாரி பூங்காவில் கால்நடை மருத்துவர். மனைவியின் பிரிவால் வாடும் அவர் தனது 17 வயது மகளுடன் வாழ்கிறார். தனது மகளைவிட அவருக்கு வன விலங்குகள்தான் முக்கியம். நோய்வாய்ப்பட்ட விலங்குகளை அறுவை சிகிச்சை செய்வார். காயம்பட்ட புலிகளுக்குக்கூட நன்றாக சிகிச்சை அளித்து அதை நன்றாகக் கவனித்துக்கொள்வார், அதேநேரம் கால்நடை மருத்துவர் யோராம் தனது டீனேஜ் மகள் ரோனியை சரியாக கவனித்துக் கொள்ளாதததன் விளைவையும் அவர் சந்திக்க நேரிடுகிறது.

THE WARDEN | IRAN | 2019 | தாகூர் பிலிம் சென்டர் என்எப்டிசி, மாலை 7.00 மணி

1960களில் ஷா ஆட்சியின் காலக்கட்டம். நகரில் ஒரு புதிய விமான நிலையம் அமைகிறது. அதற்கான ஓடுபாதை விமான நிலையத்திற்கு அதேநிலத்திலேயே அமைக்கப்பட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். விமான நிலையத்திற்கு அருகில் உள்ள சிறைச்சாலையை இடித்துத் தள்ள திட்டம் உருவாகிறது. இதனால் அங்குள்ள சிறைக்கைதிகள் தெற்கு ஈரானில் அமைந்துள்ள சிறைச்சாலைக்கு மாற்றப்பட வேலைகள் நடக்கின்ன. சிறைச்சாலையின் வார்டனான மேஜர் ஜாகேத், கைதிகளை புதிய சிறைக்கு மாற்றும் பொறுப்பை ஏற்கிறார். அவரையே ஏமாற்றிவிட்டு மரணத் தண்டனை கைதி ஒருவன் எப்படித் தப்பிக்கிறான்? இப்பிரச்சினை காவல்துறையின் செயல்பாட்டின் அவசரத்தை கோருகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x