Published : 14 Dec 2019 01:12 PM
Last Updated : 14 Dec 2019 01:12 PM

'தர்பார்', 'இந்தியன் 2', 'தளபதி 64' அப்டேட்ஸ்: ரசிகர்களின் கேள்விகளுக்கு அனிருத் பதில்

'தர்பார்', 'இந்தியன் 2', 'தளபதி 64' படங்கள் குறித்து ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அனிருத் பதிலளித்துள்ளார்.

பல முன்னணி நாயகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். ரஜினி நடித்துள்ள 'தர்பார்', கமல் நடித்து வரும் 'இந்தியன் 2', விஜய் நடித்து வரும் 'தளபதி 64', சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'டாக்டர்' உள்ளிட்ட பல படங்கள் அனிருத் இசையமைப்பில் உருவாகின்றன. தொடர்ச்சியாக பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைப்பதால், தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடாமல் இருந்தார்.

நீண்ட நாட்கள் கழித்து நேற்று (டிசம்பர் 12) மாலை ட்விட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் அனிருத் கலந்துரையாடினார். இதற்காக #AskAnirudh என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. அதில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தொடங்கினார். பல கேள்விகளுக்குப் பதிலளித்ததால், #AskAnirudh என்ற ஹேஷ்டேக் உலகளவில் 2-வது இடத்தைப் பிடித்தது. இது பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

#AskAnirudh ஹேஷ்டேக்கில் ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளும், அனிருத் அளித்த பதில்களின் தொகுப்பு இதோ:

‘தர்பார்’ல ரஜினிக்குப் பிடித்த பாட்டு?

தரம் மாறா சிங்கிள், கண்ணுல திமிரு.

மறுபடியும் ஒரு தனுஷ் - அனிருத் படம்?

விரைவில் வரும்.

உங்கள் கல்யாணம் எப்ப?

இப்போதைக்கு அப்படி எந்தத் திட்டமும் இல்ல.

ஹீரோவா நடிக்க யோசனை இருக்கா?

இல்ல. நான் செய்யும் வேலையில் எனக்கு அதிக சந்தோஷம் கிடைக்கிறது. அதை நான் ரசிக்கிறேன்.

நீங்க இசையமைக்கும்போது படத்துக்காக யோசிப்பீர்களா அல்லது உங்கள் நிஜ வாழ்க்கையை தொடர்புப்படுத்தி யோசிப்பீர்களா?

எனது உணர்வுகளின் அடிப்படையில்தான் பாடல்கள் இசையமைப்பேன். அதனால் பெரும்பாலும் நிஜ வாழ்க்கையோடு தொடர்புபடுத்துதல் தான்.

தர்பாரில் சூப்பர் ஸ்டார் என்று வரும் டைட்டிலில் உங்கள் பேட்ட இசை வருமா, தர்பார் தீம் வருமா அல்லது தேவாவின் அண்ணாமலை தீம் வருமா?

அண்ணாமலை இசை தான் எப்போதுமே.

மோசமான நாளை வழக்கமாக எப்படிக் கையாள்வீர்கள்?

மோசமான நாட்கள் என்று எதுவும் இல்ல. ஒவ்வொரு தருணத்தையும் கொண்டாட, நினைவில் கொள்ளக் கற்றுக்கொள்கிறோம். என்றும் எதிர்மறை எண்ணங்கள் தான்.

எதிர்மறை விஷயங்களை எப்படி எதிர்கொள்வீர்கள்?

அது ஆக்கபூர்வமான விமர்சனமாக இருந்தால் கற்றுக்கொள்வேன். தனிப்பட்ட தாக்குதலாக இருந்தால் புறக்கணிப்பேன். இதுவே சிறந்த கொள்கை.

ஏன் ஏ.ஆர்.ரஹ்மான் உங்களின் இன்ஸ்பிரேஷன்?

ஏனென்றால் மெட்ராஸின் மொஸார்ட், அவரது இசையைக் கேட்டுதான் நான் வளர்ந்தேன்.

தர்பார் எந்த மாதிரியான கதை? காதலர் தினத்துக்கு ஏதாவது பாடல் வருமா?

தர்பார், தலைவர் - முருகதாஸ் இணையின் விசேஷப் படமாக இருக்கும். காதலர் தினத்துக்கு ஒரு பாடல் வரும். இல்லாம எப்படி?

யார் உங்களை அதிகமாக இன்ஸ்பயர் செய்கிறார்கள்?

சூப்பர் ஸ்டார், தோனி.

கத்தி, வேதாளம், பேட்ட மாதிரியான படங்களில் அதி தீவிரமான காட்சிகளுக்குப் பின்னணி இசை அமைக்க எப்படி உங்களைத் தயார் செய்து கொள்வீர்கள்?

திரையரங்கில் உட்கார்ந்து முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது போலப் பின்னணி இசை அமைக்கும்போது எப்போதும் கற்பனை செய்துகொள்வோம்.

ரசிகர்களின் நாடித்துடிப்பை எப்படித் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்? எல்லா பாடல்களும் எப்படிக் கேட்டதும் பிடிக்கிறது? கொலவெறியிலிருந்து சும்மா கிழி வரை எல்லாம் ஹிட். எது உங்கள் ஊக்கம்?

’3’ ஆரம்பித்து ’தர்பார்’ வரை அற்புதமான பயணமாக இருந்திருக்கிறது. உங்கள் எல்லோருடைய அன்பின் ஆசிர்வாதம் இருக்கிறது. ஒவ்வொரு படத்தையும் சுவாரசியமாகத் தரப் பார்க்கிறேன். அவ்வளவுதான்.

தளபதி 64-க்கு பாடல்கள் தயாரா? ஆரம்பித்துவீட்டீர்களா? அப்டேட்?

ஆமாம், எல்லாம் நன்றாக வந்து கொண்டிருக்கிறது. நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்.

இந்தியன் 2 அனுபவம் பற்றி?

ஷங்கர் சார் எனக்கு மிகவும் பிடித்த ஒருவர். முதல் முறையாக கமல் சாருக்கு இசையமைப்பது மிக்க மகிழ்ச்சி.

தல, தளபதி, தலைவர், உலகநாயகன்னு இளம் வயதிலேயே இவ்வளவு சாதித்து விட்டீர்களே? என்ன ரகசியம் அது?

ரகசியம் இல்ல. ஆசீர்வாதங்களுடன் என்றும் நேர்மறையாக இருக்கிறேன். அவ்வளவே.

உங்களுக்குப் பாடுவது பிடிக்குமா, இசையமைப்பது பிடிக்குமா?

எனக்கு இசையமைப்பது, இசை தயாரிப்புதான் பிடிக்கும். பாடுவது என் வாழ்வில் எதிர்பாராத ஒரு திருப்பம். அதனால்தான் நான் எல்லோருக்காகவும் பாடுகிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x