Published : 14 Dec 2019 11:38 AM
Last Updated : 14 Dec 2019 11:38 AM

திரை விமர்சனம் - Jumanji: The Next Level

பிரிந்து போன நண்பர்கள் ஸ்பென்சர், ஃப்ரிட்ஜ், மார்த்தா, பெத்தனி நால்வரும் மீண்டும் சந்திக்கத் திட்டமிடுகிறார்கள். இந்தச் சந்திப்பு குறித்து நாயகன் ஸ்பென்சர் ஆழ்ந்த யோசனையில் இருக்கிறான். காரணம் மார்த்தாவுக்கும் அவனுக்கும் இடையே இருந்த காதல். தற்போது மார்த்தா மகிழ்ச்சியாக இருப்பதாக எண்ணும் அவனுக்கு இந்தச் சந்திப்பில் பெரிதாக ஈடுபாடு இல்லை. 1 வருடமாக பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த ஜுமாஞ்சி கேமை எடுக்கிறான்.

மறுநாள் நண்பர்கள் மூவரும் ஸ்பென்சரைத் தேடி வீட்டுக்கு வருகிறார்கள். ஆனால் வீட்டில் ஸ்பென்சர் இல்லை. அவந்து தாத்தா எட்டியும், அவரது நீண்டநாள் நண்பருமான மைலோவும் மட்டுமே இருக்கிறார்கள். ஸ்பென்சரை வீட்டுக்குள் தேடும் மூன்று நண்பர்களில் பெத்தனியைத் தவிர மற்று இருவரும் ஜுமாஞ்சி வீடியோ கேமால் உள்ளிழுக்கப்படுகிறார்கள்.

மீண்டும் நண்பர்கள் இருவரும் ஜுமாஞ்சிக்குள் வந்து விழுகிறார்கள். கூடவே தாத்தா எட்டியையும் அவரது நண்பரையும் ஜூமாஞ்சி உள்ளே இழுத்துக் கொண்டிருக்கிறது. முந்தைய பாகத்தில் ப்ரேவ்ஸ்டோன் கதாபாத்திரத்தில் இருந்த ஸ்பென்சரை இப்போது காணவில்லை. ஆனால் அந்தக் கதாபாத்திரத்தில் இப்போது தாத்தா எட்டி இருக்கிறார். மார்த்தாவைத் தவிர மற்ற அனைவரும் வேறொரு கதாபாத்திரத்தில் இருக்கிறார்கள். குழப்பமடையும் அவர்களுக்கு ஜுமாஞ்சி கேமின் வழிகாட்டி ஒருவர் கேம் தற்போது அடுத்த லெவலுக்குச் சென்று விட்டதாகஜ் கூறுகிறார்.

இதில் ஜுர்கன் எனப்படும் ஒருவன் பழங்குடியின மக்களுக்குச் சொந்தமான ஒரு மந்திர நெக்லஸைத் திருடி விட்டதாகவும் அதனால் ஜுமாஞ்சியில் கடும் வறட்சி நிலவுவதாகவும் அந்த நெகலஸை அவனிடமிருந்து மீட்டால் மட்டுமே இந்த கேம் முடிவடையும் என்றும் கூறுகிறார். நெக்லஸ் மீட்கப்பட்டதா? ஸ்பென்சரின் நிலை என்ன? என்பதற்கான விடையே ’ஜூமாஞ்சி: தி நெக்ஸ்ட் லெவல்’.

ஜுமாஞ்சி படத்தின் முந்தைய பாகம் முடிந்து ஒருவருடம் கழித்து நடக்கும் கதை. முந்தைய பாகத்தைப் போலவே நான்கு நண்பர்கள் ஜூமாஞ்சி வீடியோ கேமுக்குள் இழுக்கப்பட்டு, அங்கு நடக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கப் போராடுவதுதான் கதைக்களம். ஆனால் அதை விறுவிறுப்புடனும், கலகலப்பாகவும் சொன்ன விதத்தில் இப்படம் ஜெயிக்கிறது.

படம் தொடங்கியதிலிருந்து இறுதிவரை வெடித்துச் சிரிக்கவைக்கும் நகைச்சுவை வசனங்கள் படத்திற்குப் பெரும் பலம். அதுவே படத்தை எந்த இடத்திலும் தொய்வடையாமல் கொண்டு செல்ல உதவுகிறது.

ப்ரேவ்ஸ்டோனாக வரும் ராக் ஜான்ஸன், தாத்தாவாக நடித்திருக்கும் டேனி டிவிட்டோ உட்பட அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் கேமின் உள்ளே சென்றதும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்ப ஒவ்வொருவரும் உடல்மொழியை வெளிப்படுத்துவது அட்டகாசம். முதலில் எட்டியாக இருக்கும்போதும் பின்னர் ஸ்பென்சராக மாறும்போதும் நடிப்பிலும் முக பாவனையிலும் வித்தியாசம் காட்டி ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் பறக்க வைக்கிறார் ராக் ஜான்ஸன்.

எட்டிக்கும் அவரது நண்பர் மைலோவுக்கும் இடையே இருக்கும் நட்பு உணர்வுபூர்வமான முறையில் சொல்லப்பட்டிருக்கிறது.

கிராபிக்ஸ், இசை, ஒளிப்பதிவு என அனைத்தும் படத்துக்கு பலம் சேர்ப்பதாக அமைந்திருந்தாலும், வீட்டில் இருந்த அனைவரையும் உள்ளிழுக்கும் வீடியோ கேம் பெத்தனியை மட்டும் விட்டுவைத்தது ஏன்? ப்ரேவ்ஸ்டோனின் முன்னாள் காதலியாக வரும் பெண் யார்? அதன்பிறகு அவரது நிலை என்ன? போன்ற கேள்விகளுக்கு படத்தில் விடை இல்லை.

வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை வசனங்களுக்காகவும், விறுவிறுப்பான திரைக்கதைக்காகவும் நல்ல 3டி அரங்கில் ஒருமுறை பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x