Published : 13 Dec 2019 06:02 PM
Last Updated : 13 Dec 2019 06:02 PM

நா.முத்துக்குமார் - யுவன் கூட்டணியை மிஸ் பண்றேன்; அது சொர்க்கம்: சிவகார்த்திகேயன் உருக்கம்

படம்: எல்.சீனிவாசன்

நா.முத்துக்குமார்-யுவன் கூட்டணியை ரொம்பவே மிஸ் பண்றேன். அது சொர்க்கம் என்று 'ஹீரோ' இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் உருக்கமாகப் பேசினார்.

மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன், அர்ஜுன், அபய் தியோல், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஹீரோ'. ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது:

"ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் மூலமாகத் தான் இயக்குநர் மித்ரனைத் தெரியும். 'இரும்புத்திரை' படத்துக்கு முன்பாகவே நாங்கள் படம் பண்ணுவது உறுதியாகிவிட்டது. இதற்குக் காரணமான ஜார்ஜுக்கு நன்றி. சினிமாவில் நல்ல ட்ரெய்லர்களைப் பார்த்து ரசித்துள்ளேன். அப்படியொரு ட்ரெய்லர் நமக்கு அமையும்போது சந்தோஷமாக இருக்கும். அந்த வகையில் 'ரெமோ', 'கனா' ஆகிய படங்களின் ட்ரெய்லருக்குப் பிறகு 'ஹீரோ' ட்ரெய்லர் ரொம்பவே பிடித்துள்ளது.

எனக்கு சூப்பர் ஹீரோ படங்கள் ரொம்பப் பிடிக்கும். அதை நம்ம தமிழ் சினிமாவில் பார்க்க நிறைய ஆசை. இன்றைக்கு அதற்குள் நான் இருக்கேன் என்பது சந்தோஷமாக இருக்கிறது. அதே சமயத்தில் ஆச்சரியமாகவும் இருக்கிறது. இப்படியொரு சூழலை, ஐடியாவை உருவாக்கிக் கொடுத்த அத்தனை இயக்குநர்களுக்கும் பெரிய நன்றி. ஷங்கர் சாரை எல்லாம் இந்த இடத்தில் சொல்ல வேண்டும். அவர் போட்ட விதையால்தான் நாம் வேறு வேறு ஐடியாக்கள் பண்ண முடிகிறது. அப்படி ஒன்று பண்ணியிருக்கோம்.

இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள 'ஹீரோ' டைட்டில் பாடல் படத்துக்காக அல்லாமல், என் வாழ்க்கைக்காக எழுதியது மாதிரி இருந்தது. நீங்கள் எழுதியது என் வாழ்க்கையில் முக்கியமான தருணம். அந்த தருணத்தில் அதைக் கேட்கும்போது சந்தோஷமாக இருந்தது. பலரும் பதில் சொல்ல விருப்பப்பட மாட்டேன். ஆனால், இந்த வரிகளைக் கேட்கும்போது உத்வேகம் கொடுத்தது. நம்மை யார் வெறுக்கிறார்களோ அவர்களைப் பற்றி ரொம்ப யோசிப்பதை விட, யார் நம்மை ரசிக்கிறார்களோ அவர்களுக்காகத்தான் ஓட வேண்டும் என நினைப்பேன்.

கல்யாணியுடன் பணிபுரிந்ததில் மகிழ்ச்சி. ரொம்ப அழகாகத் தமிழ் பேசுகிறீர்கள். நீங்கள் நல்ல தமிழ் பேசுகிறீர்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு வரவில்லை. தமிழ், தெலுங்கு, மலையாளம் எனத் தொடர்ச்சியாக நிறைய படங்கள் பண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள். ரோபோ அண்ணனை டிவியிலிருந்தே தெரியும். உங்களுடைய அன்புக்கு நன்றி.

சினிமாவில் நீங்கள் அனைவரும் ஏற்படுத்தியிருக்கும் வாய்ப்பு ரொம்பவே பெரியது. நான் யாரை எல்லாம் திரையில் ரசித்தேனோ, கிட்டப்போய் பார்க்க முடியுமா என யோசித்தேனோ அவர்களுடன் எல்லாம் நடிக்கிற வாய்ப்பு கிடைத்துள்ளது. சத்யராஜ் சார், ராஜ்கிரண் சார், நெப்போலியன் சார் இப்போது அர்ஜுன் சார். அவருடைய 'ஜெய்ஹிந்த்' படத்தை எத்தனை முறை பார்த்தேன் எனத் தெரியவில்லை. அர்ஜுன் சாரோடு பேசுவதே அற்புதமான தருணமாக இருக்கும்.

தமிழ் வசனங்களை எழுதி ஒட்டுமொத்தமாக மனப்பாடம் செய்து பேசியுள்ளார் அபய் தியோல். வசன உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும் என அவ்வளவு மெனக்கிடலில் இருந்தார். நாமும் வேறு மொழியில் போய் படம் பண்ணலாம் என்ற எண்ணம் இவர்கள் மூலமாகத் தான் வருகிறது. இயக்குநர் மித்ரனுக்கு நன்றி. நீங்களும் உங்களுடைய டீமும் ஓடிக்கொண்டே இருந்தீர்கள்.

எதை வேண்டுமானாலும் வாழ்க்கையில் சந்திக்கலாம் என்று நம்பிக்கையுள்ள மனிதர் தயாரிப்பாளர் ராஜேஷ். அவருக்காகவே இந்தப் படம் வெற்றியடைய வேண்டும். எப்போதும் ஸ்டைலாகவே இருப்பார். ’ஹீரோ’ படம் தொடர்ச்சியாக வரவேண்டும் என்பது அனைவருக்கும் ஆசையாக இருக்கும். மக்களுக்கு இந்தப் படம் பிடித்திருந்தால் 'ஹீரோ 2', 'ஹீரோ 3' பண்ண ஆசை.

யுவன் சாருடைய பாடல்கள் கேட்காமல், என்னுடைய கல்லூரி நாட்கள் ஒரு நாள் கூட நகர்ந்ததில்லை. என்னுடைய சொல்ல முடியாத காதலை எல்லாம், இவருடைய பாடலின் மூலம் உணர்ந்துள்ளேன். யுவன் சாருக்கு நிகர் இங்கு யாருமில்லை. நீங்கள் தொடாத ஜானர், ஹிட் பாடல்கள் இல்லை. பின்னணி இசையில் அவர் தான் கிங். என்னுடைய படத்தில் முழுமையாக யுவன் சார் பின்னணி இசையுள்ளது என்பதை விட சந்தோஷமான விஷயம் வேறில்லை.

நீங்க - நா.முத்துக்குமார் சார் காம்பினேஷனை ரொம்பவே மிஸ் பண்றேன். அதுக்கும் ஈடு இணையில்லை. அவருடைய வரிகள் உங்களுடைய இசையில் கேட்கும் போது சொர்க்கம். யுவன் சார் எனக்கொரு மெசேஜ் அனுப்பியிருந்தார். நான் இதுவரை பணிபுரிந்ததில் இதுதான் என் பெஸ்ட் ப்ரோ என்றார். அதை விட என் வாழ்க்கையில் என்ன கிடைத்துவிட முடியும்?

பள்ளிக்குப் போன, பள்ளிக்குச் செல்கிற, பரீட்சையைச் சந்திக்கிற அத்தனைப் பேருக்குமான படம். வாழ்க்கையை இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கிற அத்தனைப் பேருக்குமான படம். பெற்றோர்கள் இந்தப் படத்தைப் பார்த்தால், அவர்களுடைய வீட்டில் இருக்கும் ஹீரோவை கண்டுபிடித்துவிடுவார்கள். அது மட்டும் நடந்தால் இந்தப் படம் வெற்றியடையாது, எங்களுடைய வாழ்க்கையிலும் வெற்றியடைந்த சந்தோஷம் கிடைக்கும்.

நான் ஹீரோ, நாங்கள் ஹீரோ என்று சொல்லிக் கொள்கிற படமல்ல. நமக்குள் ஒரு ஹீரோ இருக்கான் என்று சொல்கிற படம். அதுக்காக மட்டுமே வைக்கப்பட்ட படம். உங்களை நம்புங்கள், உங்களிடம் அன்பாக இருப்பவர்களை நம்புங்கள், திறமையை நம்புங்கள். அப்படி நம்பினால் நம்ம ஹீரோவாகிறது மட்டுமல்லாது, ஹீரோவையே உருவாக்கலாம் என்பது தான் எங்களுடைய நம்பிக்கை. அதைத் தான் முயற்சி செய்திருக்கிறோம்".

இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x