Published : 13 Dec 2019 02:44 PM
Last Updated : 13 Dec 2019 02:44 PM

யார் வந்தாலும் முதலில் பயப்படாதீர்கள்: மீண்டும் சீமானை மறைமுகமாகச் சாடிய லாரன்ஸ்

ரஜினி பிறந்த நாள் விழாவில், மீண்டும் சீமானை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் லாரன்ஸ்.

ரஜினியின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு, தென் சென்னை மேற்கு மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் பிரம்மாண்ட பிறந்த நாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது . தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலைஞானம், எஸ்.பி.முத்துராமன், கலைப்புலி எஸ்.தாணு, பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார், லாரன்ஸ், மீனா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேசும் போது 'நாம் தமிழர்' கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை மறைமுகமாகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார் லாரன்ஸ்.

இது தொடர்பாக லாரன்ஸ் பேசியதாவது:

"இது ரொம்ப புனிதமான விழா. புனிதத்திற்கு இன்னொரு பெயர் சூப்பர் ஸ்டார். அவருக்கு 70 வயதாகிவிட்டது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. தீபாவளி, பொங்கல் வந்தால் எப்படிக் கொண்டாடுவார்களோ அப்படித் தான் ரஜினி சாருடைய பிறந்த நாளையும் பார்க்கிறார்கள். கடல் தாண்டியும் ரசிகர்கள் இருப்பது ரஜினி சாருக்கு மட்டும் தான் இருக்கும். அவரை வாழ்த்த எனக்கு வயதில்லை.

தர்மம் எப்போதுமே அமைதியாகவே இருக்கும். அதர்மம் தலை தூக்கிக் கொண்டே இருக்கும். அந்த அதர்மம் ஏன் தலை தூக்குகிறது என்றால், தர்மம் பார்த்துக் கொண்டே இருக்கும். ஒரு அளவுக்கு மிஞ்சி அதர்மம் போகும்போது அது நல்லதல்ல. நான் பேசிய வார்த்தைகள் என்னுடைய வலி மட்டுமல்ல, அனைத்து ரஜினி ரசிகர்கள் மனதிலும் அந்த வலி இருக்கிறது. ஏன் ரஜினி சாரை இப்படிப் பேசுகிறார்கள்? அவர் எதுவுமே பண்ணுவதில்லையே என நினைப்பார்கள்.

நல்ல அரசியல், கெட்ட அரசியல் என இருக்கிறது. நல்ல அரசியல் யார் வந்தாலும் வரவேற்கும். அரசியல் வந்து ஜெயிப்பது கடவுளின் ஆசீர்வாதம், மக்கள் முடிவு செய்வது. அரசியல் செய்வது சரியல்ல, கொள்கை சரியல்ல, மக்களுக்கு நல்லது செய்வதில்லை என்று பேசுங்கள். ஆனால், யாருமே அரசியலுக்கு வரக்கூடாது, நான் மட்டும்தான் அரசியலுக்கு வருவேன் எனப் பேசுவது தான் தவறு என்கிறேன். எனக்கு மட்டுமே அனைத்தும் தெரியும், உங்கள் யாருக்கும் எதுவும் தெரியாது எனச் சொல்லக் கூடாது.

நான் பேசுவதில் நியாயமில்லை என்றால் பேசமாட்டேன். தர்மத்தை மட்டுமே பேசுவேன். இப்போது ஓரளவுக்கு வளர்ந்துள்ளேன். இனி சமுகத்துக்கு ஏதாவது பண்ண வேண்டும். தமிழ்த்தாயின் மூத்த பிள்ளை என்கிறீர்கள். நாங்கள் எல்லாம் அமெரிக்காகாரனுக்குப் பிறந்தோமா?

‘அண்ணே.. அங்கே ஒருத்தர் பேசிட்டு இருக்கார். 4 பேர் கை தட்டுறாங்க' என்று யாராவது போய் சொல்வார்கள் என நினைக்கிறேன். உடனே லிஸ்ட் எடுடா எனச் சொல்லி, அவரைப் பற்றி உடனே பேசிவிடுவார்.

யார் வந்தாலும் முதலில் பயப்படாதீர்கள், வரவேற்பு கொடுங்கள். அரசியல் ஓட்டப்பந்தயத்தில் அனைவரும் ஓடி, அதில் ஒரே ஒருவர் வெற்றி பெறுவார். அவர் தான் சரியான ஆண். யாருமே ஓடக்கூடாது, நான் மட்டுமே ஓடிப் போய் ஜெயிப்பேன் என்பதை என்னவென்று சொல்வது. எந்தத் தொழிலிலாவது இப்படி நடக்குமா?

நான் பேசிய வீடியோவைப் பார்த்துவிட்டு, சிலர் பேசிய வீடியோவைப் பார்த்தேன். என்ன பெயர் சொல்லத் தைரியம் இல்லயா என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். அவர் பெயரைச் சொல்லி நான் ஆண் என்று நிரூபிக்கும் அவசியம் எனக்கு இல்லை. நிறைய பேர் ஏன் சார் இப்போது பேசுகிறீர்கள் என்கிறார்கள். அதர்மம் தலை தூக்கிக் கொண்டே இருக்கும்போது, தர்மம் கீழே போய்விடும். ஆகையால் ஒரு கட்டத்தில் பேசியே ஆகவேண்டும். எனது பேச்சை வைத்து மீம்ஸ் போடுவார்கள், திட்டுவார்கள் எனத் தெரியும். இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள்.

என் வீட்டில் கூட உன்னை ரொம்ப கொச்சையாகப் பேசுவார்கள் எனச் சொன்னார்கள். தர்மம் ஜெயிக்க வேண்டும் என்றால் பேசித்தான் ஆகவேண்டும். என் தலைவர் ரஜினி ஒட்டுமொத்தமாக தர்மத்துக்குச் சொந்தக்காரர். நான் யாரையும் திட்ட வரவில்லை. திருத்த வந்திருக்கிறேன். அரசியல் மட்டும் பேசுங்கள். தனிமனிதத் தாக்குதல் இருக்கவே கூடாது. அது தான் அதர்மம்.

என்னிடம் ஜல்லிக்கட்டுக்காக 1 கோடி ரூபாய் யாருக்குக் கொடுத்தாய் என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார். நான் ரஜினி ரசிகன். ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது சேலத்தில் ரயிலில் இறந்த மாணவனின் தாய்க்கு வீடு கட்டிக் கொடுத்தேன். தங்கச்சியைப் படிக்க வைத்தேன். அங்கு போய் கேளுங்கள். என் பணம் என்ன செலவானது எனத் தெரியும்.

இறுதி நாளில் கடலில் விழுந்து ஒரு பையன் இறந்துவிட்டான். யாருக்கும் தெரியாது. அந்தக் குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் ஒரே செக்காகக் கொடுத்த ரஜினி ரசிகன் நான். எங்களுக்கு அனைவருமே குடும்பம் தான். சீமான் அண்ணன்.... (என அவர் தொடங்கும் போது, விழாவுக்கு வந்திருந்த ரசிகர்கள் அவர் பெயரைச் சொல்ல வேண்டாம் எனக் கத்தினார்கள்) சரி சொல்லவில்லை விடுங்கள்.

கேரள வெள்ளப் பாதிப்பின் போது 1 கோடி ரூபாய் கொடுத்து நல்லது பண்ணுங்கள் எனக் கொடுத்தேன். நீங்கள் ஓட்டுக்காகப் பண்ணுகிறவர். ரஜினி ரசிகர்கள் நாட்டுக்காகப் பண்ணுகிறவர்கள். தயவுசெய்து தவறாகப் பேசி, புண்பட வைக்காதீர்கள். இனிமேல் இதைப் பற்றி நான் பேசமாட்டேன். அமைதியாகிவிடுவேன்".

இவ்வாறு லாரன்ஸ் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x