Published : 12 Dec 2019 06:46 PM
Last Updated : 12 Dec 2019 06:46 PM

மாடிப்படி மாது, பட்டு மாமி, கிட்டு மாமா, படவா ராஸ்கல்...   என்றும் நினைவில் நிற்கும் ‘எதிர்நீச்சல்’ - 51 வயது

வி.ராம்ஜி


வாழ்வில் எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் தடைகள் இருந்தாலும் எதிர்நீச்சல் போட்டு மேலே வரவேண்டும் என்பதுதான் வாழ்க்கை நியதி. ஆனால், கஷ்டங்களைக் கண்டு துவண்டு போகிறவர்களே அதிகம். தடைகளைக் கண்டு தவித்து மருகுபவர்கள்தான் நிறையபேர். இத்தனைப் பெருங்கூட்டத்துக்கு மத்தியில் இருந்தபடி, எதிர்நீச்சல் போட்டு முன்னுக்கு வரும் ஓர் அனாதை இளைஞனின் கதைதான் ‘எதிர்நீச்சல்’.


இன்றைய அபார்ட்மெண்ட்டுகள், அன்றைக்கு ஒண்டுக்குடித்தனங்களாக இருந்தன. ஆனால் இப்போது போல், ஒண்டுக்குடித்தனமில்லை. ஓர் அபார்ட்மெண்ட்டில் உள்ள ஒவ்வொரு வீடும் தீவுகளாகிக் கிடக்கின்றன. அங்கே ஒண்டுக்குடித்தன வீடுகளில், அந்த வீட்டின் சந்தோஷம் இந்த வீட்டுக்கும் இந்த வீட்டின் சண்டை அந்த வீட்டுக்குமாக பரவும்.


அப்படியொரு ஒண்டுக்குடித்தன ஏரியாதான் கதைக்களம். நாயகி ஜெயந்தியின் வீடு ஒன்று. எஸ்.என்.லட்சுமிதான் அம்மா. பக்கத்தில் பட்டுமாமி, கிட்டு மாமாவின் வீட்டு. செளகார் - ஸ்ரீகாந்த் ஜோடி. அடுத்து மேஜர் சுந்தர்ராஜன் வீடு. அடுத்தபடியாக மாடியில் மனோரமா, எம்.ஆர்.ஆர்.வாசு வீடு. பக்கத்தில் நாயர் முத்துராமன் வீடு.


கீழே ஒரு போர்ஷன். அதில் இருமல் தாத்தா வீடு. மாடிப்படிக்குச் செல்லும் வழியில், இண்டுஇடுக்கில் ஓர் சின்னதான இடம். அந்த இடம்தான் அனாதையான மாது தங்கியிருக்கும் கூடு. மொத்த ஒண்டுக்குடித்தனக்காரர்களும் எல்லா வேலைக்கும் மாது மாது என்று அவனைப் பயன்படுத்திக்கொண்டே இருப்பார்கள். அவனும் அந்த வேலைகளையெல்லாம் செய்துமுடித்துவிட்டு, கல்லூரிப் படிப்பைத் தொடருவான்.
சாப்பாட்டுத் தட்டை எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு வீட்டு வாசலில் முறை வைத்து நின்று கொண்டு, ‘நான் மாது வந்திருக்கேன்... நான் மாது வந்திருக்கேன்’ என்பான். இப்படி வயிறு நிறைத்து வாழ்ந்து வந்தவனுக்குள் காதல், மோதல், எதிர்ப்பு, திருட்டுப்பட்டம், கால் உடைப்பு, தேர்வு நேரம், பரிட்சையிலும் வாழ்க்கையிலும் ஜெயித்தல்... என எல்லாமே நடக்கிறது. அவற்றையெல்லாம் எப்படி ‘எதிர்நீச்சல்’ போட்டுக் கடந்தான் மாது என்பதுதான்... ‘எதிர்நீச்சல்’ படத்தின் மைய வடிவம்.


செளகார் ஜானகிதான் பட்டு மாமி. சினிமாப் பைத்தியம். எதற்கு எடுத்தாலும் உதாரணத்துக்கு ஓர் சினிமாவையும் எடுத்துக்கொள்வார். பட்டு சொல்லைத் தட்டாத அசமந்தக் கணவனாக கிட்டு. ஸ்ரீகாந்த். எஸ்.என்.லட்சுமியின் மகளான ஜெயந்தி, சற்று மனம் கிலேசமாகி, குணமற்றிருக்க, பெங்களூரில் சிகிச்சை. பின்னர் வீட்டுக்கு வருவார். எஸ்.என்.லட்சுமியின் தம்பி தேங்காய் சீனிவாசன். கொஞ்சம் கை நீளம். இருட்டில் எண்பதடிக்கு நீளும்.


எம்.ஆர்.ஆர்.வாசுவின் தங்கை மனோரமா. அலட்டிக் கொள்வார் வாசு. அடுத்தவரிடம் ஓசி கேட்பார் மனோரமா. ஏ.ஆர்.எஸ்.ஸுக்கு மாது படிப்பதில் விருப்பமில்லை. தன்னை விட அதிக மார்க் வாங்காமல் அவனைத் தடுக்கும் குறுக்கு வழி தேடுபவன். ரிடையர்டு பெரியவர் மேஜர். கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்து வேலைக்குப் பார்ப்பவர் நாயர் முத்துராமன். இதில் மேஜரும் முத்துராமனும் மாதுவின் மீது அன்புடன் இருப்பவர்கள்.


மாது யாரென்று தெரியும்தானே. நாகேஷ். முதல் படமான ‘நீர்க்குமிழி’ படத்தை இயக்கும் போதும் நாகேஷ்தான் நாயகன். ’எதிர்நீச்சல்’ படத்திலும் இவரே ஹீரோ.


இரக்கமே இல்லாமல் வேலை வாங்குவார்கள் நாகேஷிடம். முகம் சுளிக்காமல் வேலை செய்வார் நாகேஷ். செளகாரின் மூக்குத்தி, நாயரின் வாட்ச், மனோரமா வீட்டு வெள்ளி தம்ளர், எஸ்.என்.லட்சுமியின் பணம் இவற்றையெல்லாம் திருடியது நாகேஷ் என குற்றம் சாட்டப்படும். மேஜர் அதட்டிக் கேட்கும் போது, எஸ்.என்.லட்சுமி உண்மையைச் சொல்லாதே என்று சொல்வார். காரணம்... தம்பி தேங்காய் சீனிவாசன் தான் பொருட்கள் திருடியிருப்பான்.


ஒருகட்டத்தில், தேங்காய் சீனிவாசன் திருடன் எனத் தெரிந்துவிடும். ‘அவரை மன்னிச்சிருங்க சார். அவரு கீழே விழுந்துட்டாரு. எந்திரிக்கும் போது நல்லவனாத்தான் எந்திரிப்பாரு’ என்பார் நாகேஷ்.


ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பைத்தியம். ஆனால், ஜெயந்தியை பைத்தியம் என்று சொல்லி ஏகடியம் செய்வார்கள். பரிதாப நாகேஷுக்கும் பைத்திய முத்திரை குத்தப்பட்ட ஜெயந்திக்கும் மெல்லிய காதல். அதைக் கடந்து, பணம் கொடுத்தால் கட்டிக்கிறேன் என்று சொல்லும் வாசு. நாகேஷின் காலை முறித்துவிடுகிற சக மாணவர்கள், நாகேஷ் மீது பிரியம் கொண்டு தன் மகளையே தரத் தயாராக இருக்கிற கல்லூரி முதல்வர் கே.விஜயன், செல்லமாகவும் அன்பு அதட்டலாகவும் ‘படவா ராஸ்கல்’ சொல்கிற மேஜர் சுந்தர்ராஜன். முகமே காட்டாமல், இருமலைக் கொண்டே நமக்கு ஓர் உயிரைக் காட்சிப்படுத்தியிருக்கிற டைரக்‌ஷன் டச். அதுதான் பாலசந்தர் பேக்கேஜ்.


‘வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்’, ‘சேதி கேட்டோ சேதி கேட்டோ’, ‘அடுத்தாத்து அம்புஜத்தைப் பாத்தேளா’, ‘தாமரைக் கன்னங்கள்’ என்று எல்லாப் பாடல்களும் நீச்சல் போட்டு, மூழ்கி முத்தெடுத்த சத்தான பாடல்கள். நாடகத்தில் இருந்தே பழக்கப்பட்ட வி.குமாரை, முதல் படமான ‘நீர்க்குமிழி’யில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய கே.பாலசந்தர், ‘எதிர்நீச்சல்’ படத்திலும் இசையமைக்கச் செய்தார்.
மாதுவாக நாகேஷ் வாழ்ந்திருப்பார். நாயர் முத்துராமன் அசத்தியிருப்பார். ‘படவா ராஸ்கல்’ மேஜர்சுந்தர்ராஜன் பிரமாதப்படுத்தியிருப்பார். அழுகாச்சி கேரக்ருக்குத்தான் செட்டாவார் என்று எல்லோரும் சொல்லிவந்த செளகார் ஜானகியை, பட்டு மாமியாக்கி, காமெடியில் அதகளம் பண்ணச் செய்திருப்பார். அசட்டு அம்மாஞ்சி கிட்டுவாக ஸ்ரீகாந்த், ஜமாய்த்திருப்பார். ஜெயந்தியின் முதிர்ச்சியான நடிப்பு பலம். மொத்தத்தில் மாஸ்டர் கே.பாலசந்தரின் முத்தான படங்களின் பட்டியலில், ‘எதிர்நீச்சல்’ படத்துக்கு முக்கிய இடம் உண்டு.


1968-ம் ஆண்டு, டிசம்பர் 12-ம் தேதி வெளியானது ‘எதிர்நீச்சல்’ படம். படம் வெளியாகி, 51 வருடங்களாகிவிட்டன. இன்னும் 101 வருடங்களானாலும் மாடிப்படி மாதுவையும் கிட்டு மாமாவையும் பட்டு மாமியையும் ‘படவா ராஸ்கலையும்’, முக்கியமாக, அந்த இருமல் தாத்தாவையும் யாரால்தான் மறக்கமுடியும்?


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x