Published : 12 Dec 2019 05:17 PM
Last Updated : 12 Dec 2019 05:17 PM

'தம்பி' உருவானதன் பின்னணி: இயக்குநர் ஜீத்து ஜோசப் பகிர்வு

'தம்பி' படம் உருவானதன் பின்னணியை இயக்குநர் ஜீத்து ஜோசப் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், செளகார் ஜானகி, நிகிலா விமல், இளவரசு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தம்பி'. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். சூரஜ் மற்றும் வியாகாம் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

டிசம்பர் 20-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படம் தொடர்பாக இயக்குநர் ஜீத்து ஜோசப் பேட்டியளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

''நான் மும்பையில் இருக்கும் சமயத்தில் இந்தக் கதையைக் கூறினார்கள். கதையைக் கேட்டதும் மிகவும் பிடித்து விட்டது. அதே போல், கார்த்தியும் ஜோதிகாவும் இக்கதையைக் கேட்டதும் நடிக்கச் சம்மதித்துவிட்டார்கள் என்றதும் மகிழ்ச்சி கூடிவிட்டது. அப்போதே இது பெரிய திரைப்படமாக இருக்கும் என்பது உறுதியாகி விட்டது. உடனே இயக்க ஒப்புக்கொண்டேன்.

இப்படத்தின் கதை 2 குடும்பங்களின் கதை. இரண்டு குடும்பங்களின் உறவுகளுக்கு இடையே நடக்கும் ஒரு கதை. அடிப்படையில் குடும்பக் கதையாக இருந்தாலும் இதில், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை தருணங்கள் மற்றும் திகைப்பூட்டும் காட்சிகள் நிறைந்திருக்கும்.

'தம்பி' படத்தைப் பார்க்க வருபவர்கள் படத்துடன் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். எதிர்பாராதது நடக்கும்.. காட்சிகளை ரசிப்பார்கள். படம் முழுவதும் ஆர்வத்துடன் பார்க்க வேண்டும் என்பதால் கதைக்கு என்ன தேவையோ அதைச் செய்திருக்கிறேன்.

ஒவ்வொரு படத்திற்கு ஒவ்வொரு மாதிரி வித்தியாசத்தைக் கொடுத்து வருகிறேன். இப்படத்திற்குத் திரைக்கதை ரின்சில் டிசில்வா எழுதியிருந்தாலும், என்னுடைய உள்ளீடும் இருக்கிறது. நான் கேரளாவைச் சேர்ந்தவன், ரின்சில் டிசில்வா மும்பையிலிருந்து வந்தவர். ஆனால், கதையோ தமிழ்க் கலாச்சாரத்தைச் சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும். ஆகையால், மணிகண்டனை (விக்ரம் வேதா படத்திற்காக வசனம் எழுதியவர்) ஈடுபடுத்தியிருக்கிறோம். அவருடைய யோசனைகளையும் சேர்த்திருக்கிறோம். நான்கு பேருடைய மூளையையும் பயன்படுத்தி திரைக்கதை அமைந்திருக்கிறது. இதுதான் இப்படம் நன்றாக வருவதற்குக் காரணமாக இருக்கிறது.

இயற்கையாக ஒரு மனிதன் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு மாதிரியான மனிதனாகக் காணப்படுவான். அதுதான் கார்த்தியின் கதாபாத்திரம். மேலும், இதில் சஸ்பென்ஸ் நிறைந்திருக்கும். கார்த்தி திறமையான நடிகர். தன்னுடைய கதாபாத்திரம் என்னவென்பதைப் புரிந்துகொண்டு நேர்மையாகவும், கடின முயற்சியும் எடுத்து நடிக்கக் கூடிய மனிதர்.

ஜோதிகா திறமையான அனுபவமிக்க நடிகை என்பதை ஏற்கெனவே நிரூபித்துவிட்டார். அவருடைய நடிப்பு பாணியும், தன்னுடைய கதாபாத்திரத்தைக் கையாளும் விதமும் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தப் படத்திலும் சிறப்பான நடிப்பைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பே தன்னுடைய வசனங்களைப் பெற்றுக் கொண்டு பயிற்சி எடுத்து நடித்தார். கார்த்தி, ஜோதிகா இருவருமே தொழிலில் திறமை வாய்ந்த வல்லுநர்கள். கடின முயற்சி எடுக்கக் கூடியவர்கள்.

சத்யராஜ், அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வழக்கமான அப்பாவாகவும் இல்லாமல், அதேசமயம் தேவையற்ற கதாபாத்திரமாகவும் இல்லாமல் இருக்கும். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல், இப்படத்திலுள்ள அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் ஒரு முக்கியத்துவம், ஒரு நோக்கம் மற்றும் தொடர்பு இருக்கும்.

நான் பரிபூரணமாக இப்படத்தை இயக்கி இருக்கிறேனா என்பது தெரியாது. ஆனால், திரில்லர் கதை என்பதால் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தெளிவாக எழுதி, நன்றாகப் படித்துவிட்டுத்தான் இயக்கியிருக்கிறேன். முதலில் பெரிய கதையாக இருந்தது. பின்பு அதைத் திருத்தி சிறிது சுருக்கினேன். அதனால், தொடர்பு விட்டுப்போனது, பின்பு மீண்டும் சிறு சிறு காட்சியாகக் கோர்த்து, எங்கள் குழுவுடன் ஆலோசித்து எடுத்தோம். எனக்குத் தமிழ் முழுமையாகத் தெரியாததால், ஒவ்வொரு நாள் படப்பிடிப்பிலும், இந்தக் காட்சியை எப்படி எடுக்க வேண்டும் என்று ஆலோசித்து எடுத்தோம். இப்படத்தை குழுவாக இணைந்துதான் எடுத்தோம்.

நான் பார்த்த வரையில் மோகன்லால் மாதிரி கார்த்தியும், ஜோதிகாவும் அர்ப்பணிப்போடு நடிக்கக் கூடியவர்கள்''.

இவ்வாறு ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x