Published : 12 Dec 2019 04:15 PM
Last Updated : 12 Dec 2019 04:15 PM

CIFF-ல் டிசம்பர் 13 அன்று என்ன படம் பார்க்கலாம்? - க.நாகப்பன் பரிந்துரைகள்

SYSTEM CRASHER | GERMANY | 2019 | தேவி, மாலை 4.30 மணி

9 வயது சிறுமி, மற்றவர்களால் முன்பே கணிக்க முடியாத அளவுக்கு பல்வேறு சமயங்களில் அதீத கோபமுறுகிறாள். இது அவளை சுற்றியிருக்கும் மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது. அவளின் இந்த நடவடிக்கையால் தன் தாயால் ஏற்கெனவே குழந்தைகள் காப்பகத்தில் விடப்படுகிறாள். ஆனால், அச்சிறுமிக்கு மீண்டும் தன் தாயிடம் திரும்புவதே நோக்கமாக இருக்கிறது. ஆனால், அவளின் தாயோ தான் பெற்ற மகளைக் கண்டே பயப்படுகிறார். இதனால், தன் மகளின் கோபத்தைக் கட்டுப்படுத்த பயிற்சியாளர் ஒருவரை நியமிக்கிறார். அந்த பயிற்சியாளர் மூலம் புதிய நம்பிக்கை பிறக்கிறது. தன் மனக்குழப்பங்களில் இருந்து அச்சிறுமி மீள்கிறாரா என்பதை 'சிஸ்டம் கிராஷர்' திரைப்படம் உணர்வுப்பூர்வமாக கையாண்டிருக்கிறது..

SONS OF DENMARK | DENMARK | 2019 | தேவிபாலா, மாலை 5.30 மணி

2025 டென்மார்க்கில் நடக்கும் கதை. ஒரு பெரிய வெடிகுண்டு தாக்குதலுக்குப் பின் தீவிரவாதம் தேசம் முழுவதும் உக்கிரம் பெறுகிறது. இன ரீதியான கலவரங்கள் அதிகமாகின்றன. பாராளுமன்ற தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கும் நிலையில், தீவிரமான இனவெறி கொண்ட அரசியல் தலைவர் மார்டி நோர்டால் மிகப்பெரிய வெற்றி பெறுவார் என்று கணிக்கப்படுகிறது. 19 வயது ஸக்காரியா ஒரு தீவிரவாத அமைப்பில் இணைகிறான். அங்கி அலி என்பவனுடன் நட்பு ஏற்படுகிறது. புலம் பெயர்ந்து வந்தவர்களுக்கு எதிராகத் திரும்பும் தேசத்தின் தற்போதைய நிலையில் இருவருக்குமே உடன்பாடு இல்லை. அதற்கு எதிராக போராட முடிவெடுக்கின்றனர். ஆனால் இருவருமே அதிகார வர்க்கத்தின் கைப்பாவைகளாகவே இருக்கின்றனர். இவர்கள் செயல்பட ஆரம்பிக்கும்போது அவர்களின் சகோதரத்துவம் பாதிக்கப்படுகிறது, அவர்கள் செய்யும் காரியத்தின் விளைவுகள் அவர்களின் வாழ்வை பெருமளவில் பாதிக்கப்போகிறது என்பதை அவர்கள் அறியவில்லை.

IRINA | POLAND | 2018 | அண்ணா, பகல் 12.00 மணி

சிறு நகரமான பல்கேரியாவில், பகுதி நேரமாக வேலை செய்து வருகிறாள் ஐரினா. அவள் வேலையை விட்டு நீக்கப்படும் அதே நாளில் அவளது கணவன் மோசமான விபத்தை சந்திக்கிறான். அவளது குடும்பம் வறுமையில் சிக்குகிறது. குடும்பத்துக்காக வாடகைத் தாயாக மாறுகிறாள். ஏற்கெனவே உடைந்து போயிருக்கும் அவளது வாழ்வில், வயிற்றில் வளரும் கருவால் நிறைய சண்டையும் அவநம்பிக்கையும் பெருகுகிறது. ஆனால் மெதுவாக, அன்பு, மன்னித்தல் ஆகியவற்றின் உண்மையான அர்த்தத்தை ஐரினா புரிந்துகொள்கிறாள்.

HOMEWARD | UKRAINE | 2019 | கேஸினோ, பகல் 2.45

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் நடந்த போரில் தனது மூத்த மகனை இழந்த முஸ்தபா, சிறுவனின் உடலை அவன் பிறந்த நிலமான கிரிமியா தீபகற்பத்திற்கு கொண்டு வர தீர்மானிக்கிறான். அவரும் அவரது இளைய மகனும் சேர்ந்து ஒரு பயணத்தை மேற்கொண்டனர், எப்போதும் இடைவெளியோடு இருக்கும் அவர்களிடையே ஆழமான உறவு ஏற்பட அந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமைகிறது.

THE MAN WHO SURPRISED EVERYONE | RUSSIA | 2018 | ரஷிய கலாச்சார மையம், பகல் 12.00 மணி |

சைபீரியன் காடுகளில் தைரியமாக வேலை செய்து வரும் மாநில வனக் காவல் அதிகாரி ஈகோர். தனது குடும்பத்தால், கிராமத்தினரால் விரும்பப்படும், மதிக்கப்படும் ஒருவன். அவன் மனைவியோடு சேர்ந்து இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து வருகிறான். ஆனால் ஒரு நாள் தனக்கு கான்சர் இருப்பதும், தான் வாழ இரண்டு மாதங்கள் மட்டுமே உண்டு என்றும் தெரிந்து கொள்கிறான். நோயை எதிர்க்கும் ஒரு வழியாக பெண் வேடம் அணிந்து கொள்கிறான். இதனால் ஏற்படும் விளைவுகளே கதை.

PIRANHAS | ITALY | 2019 | தாகூர் பிலிம் சென்டர் என்எப்டிசி, மாலை 7.00 மணி |

இளங்கன்று பயமறியாது என்ற கருவை வைத்து உருவாக்கப்பட்டதுதான் 'பிரான்ஹாஸ்'. இந்த திரைப்படத்தை கிளாடியோ கோவானிஸ் இயக்கியுள்ளார். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியன பிரான்ஹாஸ் திரைப்படம் பெர்லினில் நடந்த கோல்டன் பியர் 69-வது சர்வதேச திரைப்பட விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு சிறந்த திரைக்கதைக்கு சில்வர் பியர் விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர் ராபர்ட்டோ சேவியானாவின் “தி பாய் பாசஸ் ஆப் நேப்பிள்ஸ்” என்ற புகழ் பெற்ற நாவலை தழுவி திரைப்படம் எடுக்கப்பட்டது. நேப்பிள் நகரம் அருகே இருக்கும் சானிடா நகரைச் சேர்ந்த 15 வயது சிறுவர்கள் நிகோலா, லிடிஜியா. இருவரும் சிறந்த நண்பர்கள். பதின்மவயதுக்கு ஏற்றார்போல் நகரை நண்பர்களுடன் வலம் இருவரும் சாவு, சிறை குறித்த அச்சம் இல்லாமல் இருக்கிறார்கள். நகரை எளிதாக வசப்படுத்தி பணம் ஈட்ட வேண்டும் என்ற தீராத வேட்கையில் துப்பாக்கி, கொள்ளை எனும் தவறான பாதைக்கு இருவரும் செல்கின்றனர். கிரிமினல் செயல்களால் பணம் கொட்டுகிறது, நண்பர்கள் இருவரும் தங்களை மறந்து செலவுசெய்து சொகுசாக வாழ்கிறார்கள். இரு நண்பர்களும் இரு பெண்களை காதலித்தபோதும் தங்களின் கிரிமினல் செயலை விட்டுவிட மறுக்கிறார்கள். நல்லவை எது கெட்டவை எனத் தெரியாமல் சொகுசு வாழ்க்கையில் வாழும் இருவரும் திருந்தினார்களா என்பதுதான் கதை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x