Published : 11 Dec 2019 02:20 PM
Last Updated : 11 Dec 2019 02:20 PM

‘வலிமை’ அப்டேட்: அஜித் ஜோடியாக யாமி கெளதம்

‘வலிமை’ படத்தில் அஜித் ஜோடியாக யாமி கெளதம் நடிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது.

அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ‘நேர்கொண்ட பார்வை’. எச்.வினோத் இயக்கிய இந்தப் படம், இந்தியில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக். இதில், அஜித்தின் மனைவியாக வித்யா பாலன் நடித்தார். ஜீ ஸ்டுடியோஸ் சார்பில் போனி கபூர் தயாரித்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, மறுபடியும் எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித். இதையும் போனி கபூரே தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘வலிமை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 10-ம் தேதி இதன் பூஜை நடைபெற்றது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. அத்துடன், அஜித்துடன் நடிப்பவர்கள் யார், தொழில்நுட்பக் கலைஞர்கள் யார் என்ற விவரமும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வடிவேலு, நஸ்ரியா உள்ளிட்ட சிலர் இந்தப் படத்தில் நடிப்பதாகத் தகவல் வெளியானது. ஆனால், எதுவுமே உறுதிப்படுத்தப்படவில்லை.

ஒருவழியாக, இந்த மாதம் (டிசம்பர்) 13-ம் தேதி படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிவித்துள்ளார் போனி கபூர். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். எனவே, படக்குழுவினர் யார் யார் என்பது விரைவில் தெரியவரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், அஜித் ஜோடியாக யாமி கெளதம் நடிக்கிறார் எனத் தகவல் கிடைத்துள்ளது. ‘கெளரவம்’ மற்றும் ‘தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும்’ ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ள இவர், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார்.

அடுத்த வருடம் (2020) தீபாவளிக்கு 'வலிமை' படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x