Published : 11 Dec 2019 08:55 AM
Last Updated : 11 Dec 2019 08:55 AM

திரை விமர்சனம்: ஜடா

சென்னை புளியந்தோப்பில் வசிக்கும் கதிர், திறமை வாய்ந்த கால்பந்து விளையாட்டு வீரர். ஆனால் ‘செவன்ஸ்’ போட்டியில் விளை யாட விரும்புகிறார். செவன்ஸ் என்பது கால்பந்துக்குரிய விதி முறைகள் எதையும் பின்பற் றாமல் விளையாடப்படும் ஒன்று. கிட்டத்தட்ட மரண விளையாட்டு.

வெற்றிக்காக எதிரணி வீரர் களை கடுமையாக தாக்குவது இவ்விளையாட்டில் சகஜம். இதில் புழங்கும் பந்தயப் பணத் துக்காக உள்ளூர் ரவுடிகளால் ‘செவன்ஸ்’ போட்டி நடத்தப் படுகிறது. நண்பர்கள் அடங்கிய தனது அணியுடன் ‘செவன்ஸ்’ போட்டியில் பங்கேற்கும் கதிர், காலிறுதி, அரையிறுதி என முன்னேறுகிறார். இறுதிப் போட்டியில் பங் கேற்க சாத்தான்குளம் கிராமத் துக்குச் செல்கிறது கதிரின் அணி.

அங்கே அவர்களுக்கு சில அமானுஷ்ய அனுபவங்கள் கிடைக்கின்றன. அதற்கான கார ணம் என்ன? கதிர் ‘செவன்ஸ்’ விளையாட வேண்டும் என்பதில் ஏன் உறுதியாக இருந்தார்? இறுதிப் போட்டியில் அவரது அணி வெல்ல முடிந்ததா போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறது கதை.

பின்தங்கிய பகுதிகளில் வறு மையுடன் வாழும் இளைஞர் கள், விளிம்பு நிலையிலிருந்து மீள்வதற்கான கருவியாகக் கால்பந்து விளையாட்டு இருப்பதை பல திரைப் படங்கள் வெளிக்காட்டியுள்ளன. இப்படம் கால்பந்து மீதான அப்பகுதி மக்களின் ஈடுபாட்டை வைத்து நடத்தப்படும் சூதாட்டத்தை தோலுரிக்கிறது.

கால்பந்து விளையாட்டின் வரலாற்றுடன் தொடங்கும் படம், 7 பேரை வைத்து, விதிமுறைகளைக் காற்றில் பறக்கவிட்டு நடக்கும் ‘செவன்ஸ்’ வரலாற்றையும் கூறுகிறது. தொழில்முறைப் போட்டிகளுக்கான தேர்வுக் குழுக்களில் ஊழலும் வசதி படைத்தவர்களின் ஆதிக்கமும் மலிந்திருப்பதால், அடித்தட்டு பிரிவைச் சேர்ந்த பல திறமை சாலிகள் பணத்துக்காக ‘செவன்ஸ்’ போட்டியில் பங்கேற்கும் அவலம் நேர்கிறது.

அதைப் பாங்காக சித்தரித்து, சென்னையில் நடக்கும் கால்பந்து போட்டிகளின் அறியப்படாத பக்கங்களைத் திறந்து காண்பித்திருக்கிறார் அறிமுக இயக்குநர் குமரன். வட சென்னையும் கால்பந்தும் பின்னிப் பிணைந்திருப்பதைச் சொல்லும் தொடக்கப் பாடல் நிமிர்ந்து உட்கார வைக்கிறது.

அதன் பிறகு நாயகனின் காதல், யோகிபாபுவின் நகைச்சுவை, இரட்டை அர்த்த வசனங்கள் என வழக்கமான பாதையில் நகர்கிறது திரைக்கதை. ஆனால் ‘செவன்ஸ்’ போட்டிகளில் பங்கேற்று உடலுறுப்புகளையும் உயிரையும் இழந்த விரர்களின் கதை பிளாஷ் பேக்காக விரியும் போது படம் வேறு ஒரு தளத்துக்கு உயர்ந்து ரசிக்க வைக்கிறது.

குறிப்பாக கிஷோர், லிஜேஷின் ஆகிய இருவரது பிளாஷ் பேக்குகளும் உணர்வுப்பூர்வ மாகத் தாக்குகின்றன. இவற்றைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்கால ‘செவன்ஸ்’ போட்டிகளின் காட்சிகள் ரசிக்கும்படியும் ஆர்வத்தைத் தக்கவைப்பவை யாகவும் உள்ளன.

விளையாட்டை மையப்படுத் திய படமாக முதல் பாதியை நிறுவிய பின்பு, இரண்டாம் பாதியின் வகை மாதிரியை (ஜானர்) அப்படியே தலைகீழாக மாற்றியது எடுபடாமல் போகிறது. இதனால் ஏற்படும் ஏமாற்றம், படத்துடனான தொடர்பை பார்வை யாளர்கள் துண்டித்துக்கொள் ளும்படி செய்துவிடுகிறது.

இப்படத்தில் விளையாட்டு காட்சிகள் ஏற்படுத்திய நல்ல தாக்கத்தை, திகில் காட்சிகள் அழித்தொழித்துவிடுகின்றன. கதிர் கால்பந்தாட்ட காட்சி களில் மின்னுகிறார். மற்ற காட்சிகளில் கதாபாத்திரம் கோரும் நடிப்பை வழங்கியிருக்கிறார். யோகிபாபு சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். கால்பந்தாட் டத்தில் அவரைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் மாஸ் காட்சிகள் ரசிக்கும்படி உள்ளன.

லிஜேஷும் செவித்திறன், பேச்சுத் திறனற்ற இளைஞராக வரும் கௌதம் செல்வராஜும் மனதில் நிற்கிறார்கள். பயிற்சியாளராக அருண் அலெக்ஸாண் டர் பாராட்டத்தக்க நடிப்பை வழங்கியிருக்கிறார். கிஷோர் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரருக்கான உடற்கட்டு, உடல் மொழி ஆகியவற்றுடன் நடிப்பிலும் வழக்கம்போல் கதாபாத்திர மாக மாறிவிடுகிறார். சித்தார்த் ராமசாமியின் ஒளிப்பதிவில் வட சென்னைப் பகுதிகள் இயல்பாகவும் கால்பந்து விளையாட்டுக் காட்சிகள் அனைத்தும் சுவாரஸ்யமாகவும் படமாக்
கப்பட்டுள்ளன. சாம் சி.எஸ்.

இசையில் தொடக்கப் பாடலை மட்டும் ரசிக்க முடிகிறது. பின்னணி இசை படத்துக்குப் பொருத்தமாக உள்ளது. முதல் பாதி படம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை, இரண்டாம் பாதியில் கோட்டை விட்டதால் ‘அட!’ போட வைத்திருக்க வேண்டிய ஜடா, அரை திருப்தி கொடுத்த படங்களின் வரிசையில் சேர்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x