Published : 10 Dec 2019 06:45 PM
Last Updated : 10 Dec 2019 06:45 PM

நான் வளர்ந்தது பெயர் வாங்கியது எல்லாமே பெண்களால் தான்: இயக்குநர் பாக்யராஜ்

நான் வளர்ந்தது பெயர் வாங்கியது எல்லாமே பெண்களால் தான் என்று 'நான் அவளை சந்தித்த போது' இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாக்யராஜ் பேசினார்

சினிமா ப்ளாட்பார்ம் என்ற புதிய நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'நான் அவளை சந்தித்த போது'. எல்.ஜி.ரவிசந்தர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இயக்குநர் கே.பாக்யராஜ், பேரரசு, தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் இயக்குநர் பாக்யராஜ் பேசும் போது, "நான் சினிமாவைப் பார்த்துக் கண்கலங்கி ரொம்பநாள் ஆகிவிட்டது. இந்தப் படத்தைப் பார்த்த சில பெண்கள் அழுதார்கள் என்று கேள்விப்பட்டேன். அப்படி என்றால் நிச்சயம் இந்தப்படம் அனைவருக்கும் பிடிக்கும்.

எனக்குத் தெரிந்து இரண்டு பெட்ஷீட் வியாபாரிகளைத் தயாரிப்பாளர்கள் ஆக்க முயற்சி நடந்த கதை உண்டு. இங்கு ஏமாறுவதற்கான சூழல் நிறைய உண்டு. இப்படத்தின் தயாரிப்பாளர் ரொம்ப நம்பிக்கையாக வந்திருக்கிறார். அவருக்கு ஏற்ற டீமும் அமைந்துள்ளது.

விநியோகஸ்தர்களிடம் கதை சொல்வது பெரிய கொடுமை. பாரதிராஜா அப்படி நிறைய பேரிடம் கதை சொல்லிச் சிரமப்படுவதைப் பார்த்திருக்கிறேன். அதனால் நான் எடுக்கும் படத்தில் யாருக்கும் கதை சொல்லமாட்டேன். ’முந்தானை முடிச்சு’ படத்தின் கதையைக் கேட்டபின் ஏவி.எம்-ல் இப்படத்திற்கு இளையராஜா தான் இசை அமைக்கணும் என்றார்கள். நான் கங்கை அமரனை பிக்ஸ் பண்ணி இருந்தேன். பின் ஏ.வி.எம் கங்கை அமரனை சந்தித்து அவருக்கு இரண்டு படங்கள் தருவதாகச் சொல்லி இந்தப்படத்தை இளையராஜாவிற்குக் கொடுத்தார்கள்.

நான் வளர்ந்தது பெயர் வாங்கியது எல்லாமே பெண்களால் தான். எம்.ஜி.ஆர் ஒரு மீட்டிங்கில் பெண்கள் போனபின் ஆண்களிடம் பேச வேண்டும் என்றார். பின் ஆண்களிடம் அவர் சொன்னார், "ரகசியம் ஒன்றுமில்லை. இவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒன்றாகக் கலைந்து போகும்போது பெண்கள் அவதிப்படக்கூடாது என்று நினைத்துத் தான் அவர்களை முதலாவதாகப் போகச் சொன்னேன்" என்றார்.

அப்படி யோசிக்கக் கூடிய எம்.ஜி.ஆர் என் படங்களைப் பார்த்துவிட்டு என்னை கலைவாரிசு என்று சொல்லி இருக்கிறார் என்றால் நான் பெண்களை எப்படி மதித்திருப்பேன் என்று புரிந்துகொள்ள வேண்டும். இந்தப் படத்தைப் பார்த்து சில பெண்கள் அழுததாகச் சொன்னதால் எனக்கும் இப்படத்தை உடனே பார்க்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது” என்று பேசினார் இயக்குநர் பாக்யராஜ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x