Published : 10 Dec 2019 04:52 PM
Last Updated : 10 Dec 2019 04:52 PM

எடப்பாடி பழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கம்: சித்தார்த் காட்டம்

எடப்பாடி பழனிசாமி மக்களின் பிரதிநிதி என்பது வெட்கமாக இருப்பதாக நடிகர் சித்தார்த் காட்டமாக ட்வீட் செய்துள்ளார்.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ளவர்களுக்குக் குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு, சமீபத்தில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்த மசோதாவை, இரு அவைகளிலும் நிறைவேற்றி, சட்டமாக அமல்படுத்த, மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

இந்த மசோதாவுக்குத் தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால், இந்த மசோதாவுக்கு அதிமுக முழு ஆதரவு தெரிவித்தது. இதனையடுத்து மக்களவையில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பது தொடர்பாக சித்தார்த் தனது ட்விட்டர் பதிவில், "எடப்பாடி பழனிசாமி என் மாநிலத்துக்கும் நம் மக்களுக்கும் பிரதிநிதியாக இருக்கிறார் என்பது மிகவும் வெட்கமாக இருக்கிறது. குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதவரளித்ததன் மூலம் அவருடைய சுயரூபமும், நேர்மையின்மையும், என்ன நடந்தாலும் பதவி முக்கியம் என்ற ஆசையும் வெளிப்பட்டுள்ளது.

நீங்கள் அனைவரும் இதற்குப் பொறுப்பாக்கப் படுவீர்கள். அதுவரை உங்கள் பதவியை ரசித்து அனுபவியுங்கள். ஜெயலலிதா ஒருபோதும் குடியுரிமை திருத்த மசோதாவை ஆதரித்திருக்க மாட்டார். அவர் இல்லாமல் அதிமுக தனது நெறிமுறைகளிலிருந்து எவ்வாறு சீரழிந்துள்ளது!" என்று தெரிவித்துள்ளார் சித்தார்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x