Published : 09 Dec 2019 05:56 PM
Last Updated : 09 Dec 2019 05:56 PM

'எனை நோக்கி பாயும் தோட்டா' தோல்வி: நடிகர்களைத் தரக்குறைவாக விமர்சித்த கே.ராஜன்

'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் தோல்வி, நடிகர்களைத் தரக்குறைவாக விமர்சித்துள்ளார் கே.ராஜன். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

வி.பி.நாகேஸ்வரன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தொட்டு விடும் தூரம்'. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர் கே.ராஜன், ஜாக்குவார் தங்கம் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசும்போது, கமல், தனுஷ், இயக்குநர் செல்வராகவன், கெளதம் மேனன் உள்ளிட்டோரை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தார் தயாரிப்பாளர் கே.ராஜன். அதிலும் நடிகர்களை ஒருமையில் கடுமையாகப் பேசினார்.

நடிகர்கள் தொடர்பாக இந்த விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது:

படம் எடுத்து ரிலீஸ் வரைக்கும் வந்துவிடலாம். ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் ரிலீஸ் பண்ண முடியாது. ஏனென்றால் இங்கு தயாரிப்பாளர்களைச் சாகடிப்பதற்கே பல பேர் இருக்கிறார்கள். தொலைக்காட்சி உரிமம், டிஜிட்டல் உரிமம், வெளிநாட்டு உரிமம், இந்தி உரிமம் ஆகியவை நல்ல விலை போய்க் கொண்டிருக்கிறது. ஆனால், இவர்கள் பெரிய நடிகர்கள் படங்களை மட்டுமே வாங்குவார்கள், சின்ன நடிகர்கள் படம் பக்கம் வரமாட்டார்கள்.

பெரிய நடிகர்கள் படங்கள் எல்லாம் நஷ்டமாகி, எத்தனை பேர் நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்கள் என்பதை கடந்த ஒரு மாதமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எங்களது தயாரிப்பாளர் சங்கத்தில் 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிற ஹீரோ, 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிற டைரக்டர் சேர்ந்து பண்ணிய படங்களில் அவ்வளவு பஞ்சாயத்து இருக்கிறது. இதனால் சமீபத்தில் இரண்டு தயாரிப்பாளர்களுக்கு 12 கோடி ரூபாய் மற்றும் 15 கோடி ரூபாய் நஷ்டம். சமீபத்தில் குறைந்த முதலீட்டில் எடுக்கப்பட்ட படங்கள் நல்ல லாபம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு சிறந்த உதாரணம் 'எல்.கே.ஜி'

மக்கள் இன்று நல்ல படம் பார்க்கத் தயாராக இருக்கிறார்கள். பெரிய ஹீரோக்கள் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. பெரிய ஹீரோக்கள் படங்கள் தான் கடந்த 6 மாதத்தில் தோல்வியடைந்துள்ளது. அனைத்துமே ரூ.10 கோடி, ரூ.20 கோடி, ரூ.50 கோடி நஷ்டம். தான் ஒரு பெரிய இயக்குநர் என்று பெயர் எடுத்தவர் கெளதம் மேனன். 'தோட்டா' விட்டார் காலி. 25 கோடி ரூபாய் காலி. 'அசுரன்' பெரிய ஹிட், சூப்பர் கலெக்‌ஷன். அந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூல் என்றெல்லாம் பொய் சொல்லாதீர்கள். ஆனால், நல்ல கலெக்‌ஷன்.

'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் தயாரிப்பாளரை நோக்கி, ரசிகர்களை நோக்கிப் பாய்ந்துவிட்டது. ஆனால், இயக்குநர், ஹீரோ மட்டும் நன்றாக இருக்கிறார்கள். படம் க்ளோஸ். அதே மாதிரி 'சிந்துபாத்' படம். 10 கோடி ரூபாய் சம்பளம் வாங்குற ஹீரோ. படம் க்ளோஸ்.

எம்.ஜி.ஆர் நடித்த 'நம் நாடு' போன்ற ஹிட் படங்களை தமிழிலும், தெலுங்கிலும் எடுத்தவர் நாகி ரெட்டி. அவருடைய நிறுவனம் தயாரித்த படம் 'சங்கத்தமிழன்'. அதற்கு 2-வது நாள் திரையரங்கில் ஆளில்லை. இதன் மூலம் தெரிந்து கொள்வது என்னவென்றால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். படம் நன்றாக இல்லை என்றால் யாரும் உள்ளே செல்வதில்லை.

தயாரிப்பாளர்களை நோகடிக்கும் யாருமே நன்றாக இருக்கமாட்டார்கள். எத்தனை கோடி சம்பளம் வாங்கினாலும், நன்றாக இருப்பது போல் தெரியும் அவ்வளவே. இப்போது எல்லாம் விளம்பரங்கள் என்று ஒரு அக்கிரமம் நடந்து கொண்டிருக்கிறது. ஹீரோக்களுக்கு சம்பளம் கொடுப்பதை விட, விளம்பரங்களுக்குக் கொட்டிக் கொடுப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இப்போது இணையத்தில் போடும் விளம்பரங்கள் நன்றாக உள்ளன.

ஆந்திராவில் தயாரிப்பாளர் சங்கம்தான் வலுவானது. நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் எதுவுமே செய்ய முடியாது. இங்குதான் நடிகர்களும், இயக்குநர்களுக்கும் தயாரிப்பாளர்களை க்ளோஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். செல்வராகவன் பல தயாரிப்பாளர்களைக் காலி பண்ணிவிட்டார். 'ஆயிரத்தில் ஒருவன்' படம் எடுத்த தயாரிப்பாளர் காலியாகிவிட்டார். இயக்குநர்களில் பல குடும்பங்களை அழித்தவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அனைவரையும் சொல்லவில்லை. சிலர் தயாரிப்பாளர்களைத் திட்டம் போட்டு அழித்தார்கள்.

தயாரிப்பாளர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று இயக்குநர்கள் நினைக்க வேண்டும். இப்போது ஹீரோக்கள், ஹீரோயின்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று பணத்தைக் கொட்டுகிறார்கள். ஏனென்றால் அடுத்தும் அவர்கள் படம் கொடுப்பார்கள் என்ற எண்ணம்தான். தயாரிப்பாளர்கள் வாழ்ந்தால்தான் படங்கள் அதிகரிக்கும். எந்த ஹீரோக்களாலும் படங்கள் வருவதில்லை. எந்த ஹீரோ படம் எடுக்கிறார்?. கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு இப்போது படம் தயாரிக்கும் தைரியம் இருக்கிறதா?

ரூ.10 கோடி, ரூ.20 கோடி, ரூ.50 கோடி என்று வெட்கமே இல்லாமல் வாங்குகிறார்கள். உங்களால் கெட்டுப் போன தயாரிப்பாளர்கள் எவ்வளவு பேர். ஒரு தயாரிப்பாளரையாவது காப்பாற்றி இருக்கிறீர்களா? ஆனால், அந்த தயாரிப்பாளர்கள் உங்களுக்குச் சோறு போட்டார்கள்.

கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோக்களின் காருக்கு டீசல், உதவியாளருக்குச் சம்பளம் உள்ளிட்டவை கூட தயாரிப்பாளர் தான் கொடுக்க வேண்டியுள்ளது. எல்லாம் கொடுத்தாலும், படப்பிடிப்புக்கு வந்து கேரவனில் உட்கார்ந்து கொள்வார்கள். சீக்கிரம் வரமாட்டார்கள். அதனால் 2 மணிநேரம் படப்பிடிப்பு தாமதமாகும். இதனால், தயாரிப்பாளர்களுக்குப் பெரும் நஷ்டமடைகிறது.

எனக்கு எந்த ஹீரோவையும் பற்றிக் கவலையில்லை. யாராலும் எனக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. தயாரிப்பாளர் நன்றாக இருந்தால்தான் சினிமா நன்றாக இருக்கும். தொழிலாளர்கள் நன்றாக இருப்பார்கள். பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கிறேன்.

'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் வசனக் காட்சிகளை விட முத்தக் காட்சிகள் தான் அதிகமாக இருந்தன. கமல்ஹாசன் என்று ஒருவர். அப்புறம் இந்த தனுஷ். இரண்டு பேரும் இந்தச் சினிமாவைக் கெடுக்கிறார்கள். குடும்பத்தினர் படம் பார்ப்பார்களே என்ற நாகரிகமே தெரியாதவர்கள்.

'அசுரன்' மற்றும் 'கைதி' படத்தில் ஏதேனும் ஒரு தவறானக் காட்சி இருந்ததா?. மக்கள் அந்தப் படத்தை ரசித்துப் பார்த்தார்களே. இரண்டுமே சூப்பர் கலெக்‌ஷன். நல்ல படம் எடுத்து நன்றாக சம்பாதியுங்கள்.

'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் இடைவெளிக்கு முன்பு பேசிய வசனம் 100 வார்த்தைகள் தான் இருக்கும். ஆனால், 150 முத்தக் காட்சி இருந்தது. அந்தப் படத்தில் இடைவெளிக்குப் பின்பு அப்பா - அம்மா பக்கத்திலேயே வைத்து முத்தம் கொடுக்கிறார். உங்கள் உதட்டில் எல்லாம் ஏதாவது சொல்லிடப் போறேன்''.

இவ்வாறு தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x