Published : 09 Dec 2019 10:37 AM
Last Updated : 09 Dec 2019 10:37 AM

என்கவுன்ட்டர்களை எந்த சூழலிலும் நியாயப்படுத்த முடியாது: ராம் கோபால் வர்மா

என்கவுன்ட்டர்களை எந்த சூழலிலும் நியாயப்படுத்த முடியாது என்று ஹைதராபாத் என்கவுன்ட்டர் தொடர்பாக ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து முகமது பாஷா, சிவா, நவீன் மற்றும் சென்ன கேசவலு ஆகியோரைக் கைது செய்தது காவல்துறை.

டிசம்பர் 6-ம் தேதி அதிகாலை குற்றவாளிகள் நால்வரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். அதுவும், பெண் மருத்துவர் இறந்த அதே இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த என்கவுன்ட்டருக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும், ஹைதராபாத் காவல் துறையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தார்கள்.

இந்நிலையில், இந்தியத் திரையுலகின் முன்னணி இயக்குநரான ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

இந்த என்கவுன்ட்டர் தொடர்பாக - எந்த ஒரு சமூகத்தின் அடிப்படை அஸ்திவாரமும் உணர்ச்சிவசப்படுதலைக் கட்டுப்படுத்துவதும், சட்டத்தின் படி பகுத்தாய்வதும் ஆகும். எனவே என்கவுன்ட்டர்களை எந்த சூழலிலும் நியாயப்படுத்த முடியாது.

நாகரிகமான சமூகத்தில் இருக்கும் எந்த குற்றவியல் நீதி அமைப்பிலும், காவல்துறை கைது செய்வார்கள், விசாரணை செய்வார்கள், சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள், அவர்கள் அதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து என்ன தண்டனை தரலாம் என்று முடிவெடுப்பார்கள்.

இந்த குற்றத்தின் கொடூரத்தை வைத்துப் பார்க்கும்போது பொதுமக்களின் கோபம் நியாயப்படுத்தப்படலாம். ஆனால் காவல்துறையே சட்டத்தைக் கையிலெடுப்பதும், கொலை செய்வதும் நீதித்துறையை மதிக்காமல் இருப்பதே. இது மிருகத்தனமான காவல்துறை ஆளும் சமூகத்துக்கு வழிவகுக்கும்.

சட்டத்தின் நோக்கமே குற்றம் பற்றிய முழு விவரத்தையும் கண்டறிவது. மேலும் இதில் அமைப்பு ரீதியில் என்ன தோல்வி, இதில் யாருக்குப் பொறுப்பு அதிகம் என்பதையும் அறிதல். இதை வைத்து எதிர்காலத்தில் குற்றங்கள் நடக்காமல் தடுக்க முடியும்.

குற்றவாளிகள் மேற்கொண்டு தவறுகள் செய்யக்கூடாது என்பதால்தான் அவர்களைப் பிடிப்பதில் அவசரம் காட்டப்படுகிறது. ஆனால் அவர்கள் காவல்துறையின் கையில் இருக்கும்போது இப்படி வேகமாகத் தண்டனை தருவதன் மூலம் ஒட்டுமொத்த அமைப்பும் இந்த குற்றத்தின் முழு பின்னணியை, விவரங்களை என்றும் தெரிந்துகொள்ளவிடாமல் தடுக்கப்பட்டு விடும்.

குற்றவியல் நீதி அமைப்பின் முக்கியமான நோக்கமே, குற்றவாளிகளின் குற்றத்தை சட்டப்படி விசாரித்து நிரூபிப்பதே. காவல்துறை சொல்வதை வைத்து, ஊடக யூகங்களை வைத்தும், விவரம் தெரியாத மக்களின் புலம்பல்களை வைத்து தண்டனை தர ஆரம்பித்தால் சமூக அமைப்பு நொறுங்கிவிடும்.

இவ்வாறு ராம் கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x