Published : 08 Dec 2019 11:37 AM
Last Updated : 08 Dec 2019 11:37 AM

சகலகலா கங்கை அமரன்  - இன்று கங்கை அமரன் பிறந்தநாள்

வி.ராம்ஜி


பிடித்த இசையமைப்பாளர் என்றொருவர் இருக்கலாம். அதேபோல் பாடலாசிரியர் என்று ஒருவர் இருக்கலாம். பாடகராகவும் சிலர் மனதில் இடம்பிடிக்கலாம். இயக்குநராகவும் சிலர் மனதில் பதிந்துவிடுவார்கள். இவர், முதலில் பாட்டு எழுதினார். பிறகு இசையமைத்தார். அதையடுத்து பாடவும் செய்தார். பின்னர், படத்தை இயக்கினார். இப்படி பன்முகங்கள் கொண்ட கலைஞனாகத் திகழ்பவர்... கங்கை அமரன்.
அது இருந்தால் இது இருக்காது. இதைப் பண்ணினால் அதைப் பண்ண முடியாது என்றெல்லாம் சொல்லுவார்கள். ஒரேசமயத்தில் இரண்டு வண்டிகளில் பயணிக்கக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பண்ணைபுரம் எக்ஸ்பிரஸ் பல வடிவங்களில், பல வண்டிகளில் பயணித்தது... தமிழ் சினிமாவின் ஆச்சரியங்களில் ஒன்று.


பாரதிராஜா, இளையராஜா, கங்கை அமரன் எல்லோரும் சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே பழக்கம். ‘அன்னக்கிளி’யில் இளையராஜா வந்தார். கூடவே அமர்சிங் என்று அழைக்கப்பட்ட அமர் என்று நெருக்கமானவர்கள் அழைக்கிற கங்கை அமரனும் வந்தார்.
பின்னர், ‘16 வயதினிலே’ மூலம் பாரதிராஜா புதியதொரு பாதையைத் திறந்து வைத்தார் திரையுலகிற்கு. அதுமட்டுமா? கங்கை அமரனுக்கும்தான்! அந்தப் படத்தில் கங்கை அமரனுக்குப் பாட்டெழுத வாய்ப்பு கொடுத்தார். அந்தப் பாட்டு விருதுக்குரிய பாடலாக அமைந்தது. பாடகிக்கு விருது கிடைத்தது. அது... ‘செந்தூரப்பூவே... செந்தூரப்பூவே’.


அப்போதிருந்தே கங்கை அமரனுக்கு குவியத் தொடங்கின பாராட்டுப் பூக்கள்.


மீண்டும் இன்னொரு வாய்ப்பு. பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’. அந்த ரயிலில் , பூவை எடுத்துக்கொண்டு ஏறினார் கங்கை அமரன். போனமுறை ‘செந்தூரப்பூவே’. இந்த முறை ‘பூவரம்பூ பூத்தாச்சு’. இந்த இரண்டு பாடல்களும் இன்று வரைக்கும் ஹிட்டான பாடல்கள் வரிசையில்!
ஓ.. கங்கை அமரன் பாட்டெழுதுவார் என்று எல்லோருக்கும் தெரியத் தொடங்கிய அதேவேளையில், ‘ஒரு விடுகதை ஒரு தொடர்கதை’ என்று இசையமைக்க ஆரம்பித்தார். முக்கியமாக, பாக்யராஜின் முதல் படமான ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்துக்கு கங்கை அமரன் இசையமைத்தார். ‘காதல் வைபோகமே’ இன்றைக்கும் எங்கு ஒலித்தாலும் நின்று கேட்கும் கூட்டம் உண்டு.


பிறகு ‘மெளன கீதங்கள்’ படத்தில் ’மூக்குத்திப்பூ’வுடன் வந்தார். இப்படியாக தொடர்ந்து பாட்டெழுதிக் கொண்டும் படங்களுக்கு இசையமைத்தும் கொண்டும் இருந்தார். நடுநடுவே பாடவும் செய்தார்.


பாடல்கள் எழுதியது ஒருபக்கம், இசையமைத்தது ஒரு பக்கம், பாடியது ஒருபக்கம் என்றிருக்கும் போது, இடையே டப்பிங்கும் பேசினார். ‘புதிய வார்ப்புகள்’ படத்தில் பாக்யராஜுக்கு குரல் கொடுத்தது இவர்தான் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று.


இன்னொரு விடியல்... அப்படியொரு கூவல். ‘கோழி கூவுது’ படத்தை இயக்கினார். பல ஊர்களில் சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. சில ஊர்களில் 250 நாட்களைக் கடந்தும் ஓடியது. ‘சங்கிலி’ படத்தில் அறிமுகமான பிரபுவுக்கு அட்டகாசமான பிரேக் கிடைத்தது ‘கோழி கூவுது’ படத்தில்தான்! பின்னாளில், ராமராஜனுக்கு ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ மூலம் அப்படியொரு வெற்றி கிடைக்கச் செய்தார், இயக்குநர் கங்கை அமரனாக.
‘சிறுபொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்’ என்றும் எழுதுவார். ‘சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு’ என்றும் எழுதுவார். ‘பூத்துப்பூத்துக் குலுங்குதடி பூவு’ என்றும் ‘அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம்’ என்றும் ’என் இனிய பொன்நிலாவே’ என்றும் எழுதினார். இப்படித்தான் என்றில்லாமல் எப்படியும் எழுதினார். ‘அட கங்கை அமரனா இந்தப் பாட்டு எழுதியது’ என்று வியக்கிற அவரின் பாடல்கள் லிஸ்ட் பெருசு.


அதேபோல்தான் இசையும். ‘சட்டம் ‘ படத்திற்கும் ‘வாழ்வே மாயம்’ படத்திற்கும் இவரின் இசை, தனியே தெரிந்தது. வெற்றிக்கு இசையும் காரணமாக அமைந்தது.


‘கும்பக்கரை தங்கையா’வும் ‘சின்னவர்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. முக்கியமாக, இன்னும் ஓர் நூற்றாண்டு கடந்தாலும் கூட வாராது வந்த மாமணியாக வந்தான் ‘கரகாட்டக்காரன்’. சாதாரண கதை. அதைச் சொல்ல தெளிவான திரைக்கதை. அந்தத் திரைக்கதைக்குள் மெல்லிய காதல், தடாலடி நகைச்சுவை. எட்டுத்திக்கும் கொண்டு சேர்க்கும் பாடல்கள். சிட்டி, பட்டி, தொட்டி என எங்கும் பிரமாண்ட வெற்றியைப் பெற்ற ‘கரகாட்டக்காரன்’ படத்தின் இயக்குநரான கங்கை அமரனை மறக்கவே மறக்காமல் குறித்து வைத்துக்கொண்டிருக்கிறது காலம். ரசிகர்களும்தான்!


இன்றைக்கும் ‘கோழி கூவும்’ சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.கரகாட்டக்காரனின் ஆட்டம் அதகளம் பண்ணிக்கொண்டே இருக்கிறது. கண்ணுக்குத் தென்படாத சொப்பனசுந்தரி எங்கோ வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.


முக்கியமாக, அந்த வாழைப்பழம் இன்று வரை தனிச்சுவையுடன் திகழ்கிறது.


கங்கை அமரனின் பாட்டு பிடிக்கும். பாட்டுக்கு மெட்டுப் போட்டால் பிடிக்கும். பாடலைப் பாடினாலும் பிடிக்கும். பாடல்கள் கொண்ட படத்தை இயக்கினாலும் பிடிக்கும். மொத்தத்தில் கலகலப்பான பேச்சுக்கும் சிரிப்புக்குமான கங்கை அமரனை எல்லோருக்கும் பிடிக்கும்.


எல்லோருக்கும் பிடித்த கங்கை அமரனுக்கு இன்று 8.12.19 பிறந்தநாள். சகலகலா கங்கை அமரனுக்கு வாழ்த்துகள்!


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x