Published : 06 Dec 2019 03:04 PM
Last Updated : 06 Dec 2019 03:04 PM

ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக உணரும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்: ஏ.ஆர்.முருகதாஸ் கருத்து

ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக உணரும் நாளுக்காகக் காத்திருக்கிறேன் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து முகமது பாஷா, சிவா, நவீன் மற்றும் சென்ன கேசவலு ஆகியோரைக் கைது செய்தது காவல்துறை.

இன்று (டிசம்பர் 6) அதிகாலை குற்றவாளிகள் நால்வரும் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். அதுவும், பெண் மருத்துவர் இறந்த அதே இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த என்கவுன்ட்டருக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும், ஹைதராபாத் காவல் துறையினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அவற்றில் சில திரையுலகப் பிரபலங்களின் கருத்து.

ஜெயம் ரவி: இதைத்தான் நான் நீதி என்பேன்.

தெலுங்கு நடிகர் மனோஜ் - நாங்கள் பாதுகாப்பான கைகளில் இருக்கிறோம் என்றும், நீதி என்று நிலைக்கும் என்றும் மீண்டும் உறுதி செய்ததற்கு நாங்கள் உங்களை நேசிக்கிறோம். முடிந்தால் பெண்களுக்கென சில பாதுகாப்பு முகாம்களை நடத்துங்கள். அது அவர்களுக்குப் பாதுகாப்பு குறித்தோ, சிக்கலான சூழலில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாதோ என்றோ சொல்லித் தரும். இது பல பெண்களுக்கு உதவலாம்.

பூஜா ஹெக்டே: உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ய வேண்டும் என்று நினைத்தவர்களுக்குக் கூட இது ஒரு கடும் எச்சரிக்கையாகப் போய் சேர்ந்திருக்கும் என்று நம்புகிறேன்.

ஏ.ஆர்.முருகதாஸ்: ஹைதராபாத் காவல்துறை எடுத்த நடவடிக்கைக்கு என் வணக்கங்கள். இந்த நாட்டின் ஒவ்வொரு பெண்ணும் பாதுகாப்பாக உணரும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.

ஜி.வி.பிரகாஷ்: ஹைதரபாத் என்கவுன்ட்டர் சம்பவம் வரவேற்கத்தக்கது. பாலியல் பலாத்காரக் குற்றவாளிகளுக்கான நியாயமான தண்டனையாகவே நான் பார்க்கிறேன். தவறு செய்யும் நபர்களுக்கான எச்சரிக்கை மணி என்றே இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. பெண்கள் பாதுகாப்புக்குத் துணை நிற்போம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x