Published : 05 Dec 2019 04:02 PM
Last Updated : 05 Dec 2019 04:02 PM

ஒரே வருடத்தில் மோகன் 15 படங்கள்; ஒரேநாளில் 3 படம் ரிலீஸ்; அத்தனையும் ஹிட்


வி.ராம்ஜி


ஒரே வருடத்தில் நடிகர் மோகன் நடித்த 15 படங்கள் வெளியாகின. இதில் ஒரே நாளில் மூன்று படங்கள் ரிலீசாகின. இந்த 15 படங்களும் ரசிகர்களால் மறக்கமுடியாத படங்களாக அமைந்தன.


ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான பாலுமகேந்திரா, முதன்முதலாக இயக்கிய படம் ‘கோகிலா’ கமல், ஷோபா, ரோஜாரமணி நடித்த இந்தப் படம் பாலுமகேந்திராவுக்கு மட்டும் முதல் படமல்ல. நடிகர் மோகனுக்கும் இதுவே முதல் படம். அடுத்தடுத்து, தமிழில், ‘மூடுபனி’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’ என படங்களில் நடித்தார்.


அடுத்து ‘கிளிஞ்சல்கள்’, ‘பயணங்கள் முடிவதில்லை’ என வரிசையாக படங்கள் அமைந்தன.எல்லாப் படங்களும் வெற்றிப் படங்களாகவே அமைந்தன.தயாரிப்பாளர்களின் நடிகராக, இயக்குநர்களின் நடிகராக, கதைகளின் நடிகராக, ரசிகர்களின் இதயம் கவர்ந்த நடிகராக வலம் வந்தார் மோகன்.


77-ம் ஆண்டு தொடங்கிய திரைப் பயணத்தில், 84-ம் ஆண்டு மோகனுக்கும் அவரின் ரசிகர்களுக்கும் தமிழ்த் திரையுலகிற்கும் மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது.


84-ம் ஆண்டில் மட்டும், மோகன் நடித்த படங்கள் 15-க்கும் மேலே வெளிவந்தன. ‘உன்னை நான் சந்தித்தேன்’, ‘நான் பாடும் பாடல்’, ‘நிரபராதி’, ‘விதி’, ‘ஓ மானே மானே’, ‘ஓசை’, ‘நூறாவது நாள்’, ‘24 மணி நேரம்’, ‘அம்பிகை நேரில் வந்தாள்’, ‘அன்பே ஓடி வா’, ‘சாந்தி முகூர்த்தம்’, ‘நெஞ்சத்தை அள்ளித் தா’, ‘மகுடி’, ‘ருசி’, ‘வாய்ப்பந்தல்’ என படங்கள் வரிசையாக வந்தன.


வருடத்துக்கு 12 மாதங்கள். மாதம் ஒன்று என்று வந்தால், 12 படங்கள்தானே வந்திருக்கவேண்டும். ஆனால் 15 மோகன் படங்கள் வெளியாகின. ஜனவரி 26ம் தேதி கே.பாலாஜி தயாரிப்பில், கே.விஜயன் இயக்கத்தில், மோகன் நடித்து ‘விதி’ வெளியானது. மோகன், பூர்ணிமா, ஜெய்சங்கர், சுஜாதா நடித்த ‘விதி’ வெளியானது. இந்தப் படம் வெளியான நாள் முதலாக, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்பட்ட தாக்கம் சாதாரணமானதல்ல. காதல் காட்சிகளாகட்டும், கோர்ட் காட்சிகளாகட்டும் மோகன் தன் நடிப்பால், இன்னும் மெருகூட்டியிருப்பார். மோகன் படங்களில் மறக்க முடியாத படங்களின் வரிசையில் ‘விதி’ படமும் ஒன்று.


அடுத்து, பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வெளியானது ‘நூறாவது நாள்’. இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில், மோகன் நடிப்பில் வெளியான இந்தப் படம் ஏற்படுத்திய பரபரப்பும் பதட்டமும் இன்றைய தலைமுறையினருக்கும் மறக்காது.


ஜெயப்பிரகாஷ் செய்த கொலையும் அதன் பின்னர் அவர் விடுத்த ஸ்டேட்மெண்ட்டும் ஏற்கெனவே சூப்பர் ஹிட்டுடன் ஓடிக்கொண்டிருந்த படத்தை இன்னும் இன்னுமாக ஓடச் செய்தன. மோகன், நளினி, விஜயகாந்த், சத்யராஜ் என பலரும் நடித்திருந்தனர். பாடல்களும் ஹிட்டாகி, படமும் ஹிட்டாகி, முக்கியமான படமாக இன்றைக்கும் இருக்கிறது ‘நூறாவது நாள்’. கெட்ட ஹீரோவாக பின்னிப்பெடலெடுத்திருப்பார் மோகன்.
இதன் பின்னர், ஏப்ரல் மாதத்தில் இரண்டு படங்கள் வெளியாகின. மீண்டும் கே.பாலாஜியின் தயாரிப்பில், கே.விஜயன் இயக்கத்தில், ‘நிரபராதி’ எனும் திரைப்படம், ஏப்ரல் 10-ம் தேதி வெளியானது. மோகனுடன் மாதவி நடித்திருந்தார். இந்தப் படமும் ரசிகர்களால் பேசப்பட்டது.
அடுத்து, இந்தப் படம் வெளியான நான்காம் நாள், அதாவது ஏப்ரல் 14-ம் தேதி, கோவைத்தம்பியின் ‘நான் பாடும் பாடல்’ வெளியானது. ஆர்.சுந்தர்ராஜன் இயக்கினார். மோகன் நடித்த இந்தப் படத்தில் சிவகுமார், அம்பிகா, பாண்டியன், இளவரசி முதலானோர் நடித்தனர். இந்தப் படத்தின் பாடல்கள் சக்கைப்போடு போட்டன. மோகனின் கச்சிதமான நடிப்பு, எல்லோரையும் ஈர்த்தது.


மே 4-ம் தேதி ‘நெஞ்சத்தை அள்ளித் தா’ படம் வெளியானது. மோகனுடன் சாதனா நடித்தார். அதே மே மாதத்தில், 12-ம் தேதி, மோகன், ஊர்வசி நடித்த ‘அன்பே ஓடி வா’ வெளியானது. ரஞ்சித்குமார் எனும் இயக்குநர் இயக்கியிருந்தார். தயாரிப்பாளர் நடிகர், இயக்குநர் நடிகர், கதைகளின் நடிகர் என்பது போல், நடிகைகளின் நடிகர் என்றும் மோகன் பேசப்பட்டார். மோகனுடன் யார் நடித்தாலும் அது சூப்பர் ஜோடி என்று பேரெடுத்தது. மோகன் - ஊர்வசி ஜோடியும் அப்படி ஹிட்டடித்த ஜோடி.


ஜூலை மாதம் 19-ம் தேதி இதே மோகன் - ஊர்வசி நடித்த ‘சாந்தி முகூர்த்தம்’ வெளியானது. இந்தப் படத்துக்கு சங்கர் கணேஷ் இசை. பாடல்கள் எல்லாமே ஹிட். படத்தை நடிகை ஸ்ரீப்ரியா இயக்கினார். கலகலவெனச் செல்லும் இந்தப் படத்தை எப்போதும் பார்க்கலாம்.


ஜூலை மாதம் 27-ம் தேதி மோகன் நடித்த ‘மகுடி’ வெளியானது. நளினி ஜோடியாக நடித்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்தார். பாடல்கள் பட்டையைக் கிளப்பின. இந்தப் படத்தில், மோகனின் தனித்துவமான நடிப்பைக் காணலாம். ஆகஸ்ட் 10-ம் தேதி, மோகன் நடித்த ‘ருசி’ வெளியானது. கங்கை அமரன் இசையில் பாடல்கள் அமைந்தன.


அந்த வருடத்தில், மோகன் - ஊர்வசி ஜோடி மீண்டும் ஒன்று சேர்ந்த ‘வாய்ப்பந்தல்’ வெளியானது. ராம.நாராயணன் இயக்கினார். சங்கர் கணேஷ் இசையமைத்தார். படம் காமெடிப்படமாக கலகலவென இருந்ததை, ரொம்பவே ரசித்தார்கள் ரசிகர்கள்.


அக்டோபர் மாதம் 22-ம் தேதி, இயக்குநர் ஏ.ஜெகநாதன் இயக்கத்தில், மோகன், ஊர்வசி நடித்த ‘ஓ மானே மானே’ படம் வெளியானது. இளையராஜா இசை. மறுநாள் 23-ம் தேதி, கே.விஜயன் இயக்கத்தில், சங்கர் கணேஷ் இசையில், ‘ஓசை’ வெளியானது. இதில் நளினி, மோகனுடன் நடித்திருந்தார். இந்தப்படத்திலும் மோகன், மிகச்சிறந்த நடிப்பை வழங்கியிருந்தார்.


இதே அக்டோபர் 23-ம் தேதி, இன்னொரு படமும் வெளியானது. கோவைத்தம்பியின் ‘உன்னை நான் சந்தித்தேன்’ படத்தில், சிவகுமார், சுஜாதா, மோகன், ரேவதி முதலானோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையில், எல்லாப் பாடல்களுமே மிகப்பெரிய ஹிட்டடித்தன. ஆக, ‘ஓ மானே மானே’, ‘ஓசை’, ‘உன்னை நான் சந்தித்தேன்’ என மூன்று படங்கள் வெளியாகி, மூன்றுமே வெற்றியைப் பெற்றன.
‘இவரை வைத்துப் படமெடுத்தால், முதலுக்கு மோசமில்லை’ என்று எம்ஜிஆர் படங்களைச் சொல்லுவார்கள். அதேபோல் ரஜினியைச் சொல்லுவார்கள். விஜயகாந்தை வைத்துப் படமெடுத்து நஷ்டம் அடைந்தவர்கள் என எவருமில்லை. இதேபோல், மோகனையும் தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் கொண்டாடினார்கள். தியேட்டர்களுக்கு ரிப்பீடட் ஆடியன்ஸ் வந்தார்கள். குடும்பம் குடும்பமாக மோகன் படங்களுக்கு வந்தார்கள்.


டிசம்பர் 8-ம் தேதி மணிவண்ணன் இயக்கத்தில் ‘அம்பிகை நேரில் வந்தாள்’எனும் திரைப்படம் வெளியானது. மோகனுக்கு ஜோடி ராதா. ஏற்கெனவே மணிவண்ணன் இயக்கத்தில், ‘நூறாவது நாள்’ படத்தில் நடித்தவர் இந்தப் படத்திலும் நடித்தார். அதுமட்டுமா? மோகன், சத்யராஜ், நளினி முதலானோரைக் கொண்டு ‘24 மணி நேரம்’ படத்தையும் இதே வருடத்தில் இயக்கினார் மணிவண்ணன்.


‘மோகன் ராசியான நடிகர் மட்டுமில்லை. படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் வந்துவிடுவார். ஷூட்டிங் ஸ்பாட்டிலும் கெடுபிடிகள் எதுவும் செய்யமாட்டார்’ என்று தயாரிப்பாளர் கோவைத்தம்பி மோகனைப் பற்றித் தெரிவித்துள்ளார்.


‘கதை கேட்டு அவருக்குப் பிடிச்சிருந்துச்சுன்னா, ஓகே சொல்லிருவார். அதுக்குப் பிறகு கதைக்குள்ளேயே வரமாட்டார். இதை மாத்துங்க, அதை மாத்துங்கன்னு சொல்லமாட்டார். அவரோட கேரக்டரை எந்த அளவுக்கு சிறப்பாச் செய்யமுடியுமோ அந்த அளவுக்கு நடிச்சுக் கொடுத்துட்டுப் போவார்’ என்கிறார்கள் இயக்குநர்கள்.


‘மோகன் படம் போரடிக்காது. நடிப்பு யதார்த்தமா இருக்கும். பாட்டெல்லாம் சூப்பரா இருக்கும். குடும்பத்துல இருக்கற எல்லாரும் சேர்ந்து பாக்கலாம்’ என்கிறார்கள் ரசிகர்கள்.


அதனால்தான் இன்றைக்கும் மக்கள் மனங்களில் நிற்கிறார் மோகன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x