

அஜித் - சிறுத்தை சிவா இணையின் வீரம் திரைப்படத்தின் கன்னட ரீமேக் டிசம்பர் 12-ஆம் தேதி வெளியாகிறது.
2014-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான வீரம் திரைப்படம் அஜித் - சிறுத்தை சிவா இணையின் முதல் திரைப்படமாகும். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, வேதாளம், விவேகம், விஸ்வாசம் என்ற மேலும் மூன்று படங்களில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்தார். இதில் விவேகத்தைத் தவிர மற்ற படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன. விஸ்வாசம் பல வசூல் சாதனைகளையும் படைத்தது.
வீரம் திரைப்படம் காடமராயுடு என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. பவன் கல்யாண் இதில் நடித்திருந்தார். ஆனால் இந்தத் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. தற்போது ஒடேயா என்ற பெயரில் கன்னடத்தில் வீரம் உருவாகியுள்ளது. கன்னட சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான தர்ஷன் இதில் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படம் டிசம்பர் 12 அன்று வெளியாகிறது. கிட்டத்தட்ட கர்நாடகத்தில் 700 திரைகளில் ஒடேயா வெளியாகவுள்ளது.
பச்சான் பாண்டே என்ற பெயரில் அக்ஷய் குமார் நடிப்பில் இந்தியிலும் வீரம் ரீமேக் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.