Published : 03 Dec 2019 08:48 PM
Last Updated : 03 Dec 2019 08:48 PM

'தலைவர் 168' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் மீனா ஒப்பந்தம்

சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க மீனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

'தர்பார்' பணிகளை முடித்துவிட்டதால், சிவா இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு இமான் இசையமைக்கவுள்ளார்.

இதில் ரஜினியுடன் சூரி நடிக்கவுள்ளதை மட்டுமே சன் பிக்சர்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. மீதமுள்ள நடிகர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டாலும், இன்னும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இதில் ரஜினியுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகக் கூடும்.

இதனிடையே, இந்தப் படத்தில் ரஜினியுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க மீனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை விரைவில் முறையாக அறிவிக்கவுள்ளார்கள். ரஜினி - மீனா ஜோடி 'எஜமான்', 'வீரா', 'முத்து' ஆகிய படங்களில் நடித்துள்ளது. அனைத்துமே பெரும் வரவேற்பைப் பெற்ற படங்களாகும். இதில் 'முத்து' படம் ஜப்பான் நாட்டில் மிகவும் வரவேற்பைப் பெற்ற படமாகும். அங்கு இந்தப் படத்தின் வசூலை 'பாகுபலி' படத்தால் கூடிய முறியடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ரஜினியுடன் மீனா குழந்தை நட்சத்திரமாக 'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்திலும் நடித்திருப்பது நினைவுகூரத்தக்கது.

தற்போதைக்கு தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை 'தலைவர் 168' என அழைத்து வருகிறது. மேலும், தனது படங்களின் வழக்கமான தொழில்நுட்பக் கலைஞர்களான ஒளிப்பதிவாளர் வெற்றி, எடிட்டர் ரூபன் ஆகியோரை இந்தப் படத்திலும் பயன்படுத்த சிவா முடிவு செய்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x