Published : 02 Dec 2019 08:22 PM
Last Updated : 02 Dec 2019 08:22 PM

தமிழ்நாட்டில் மேடையில் பேச பயமாக இருக்கிறது: மம்மூட்டி

தமிழ்நாட்டில் மேடையில் பேச பயமாக இருக்கிறது என்று சென்னையில் நடைபெற்ற 'மாமாங்கம்' பத்திரிகையாளர் சந்திப்பில் மம்மூட்டி பேசினார்.

எம்.பத்மாகுமார் இயக்கத்தில் மம்மூட்டி, உன்னி முகுந்தன், தருண் ஆரோரா, அனு சித்தாரா, கனிகா, இனியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாமாங்கம்'. மலையாளத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ளது.

டிசம்பர் 12-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பு பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் மம்மூட்டி கலந்து கொண்டார். அதில் பேசும்போது, "தமிழ்நாட்டில் மேடையில் பேச பயமாக இருக்கிறது. ஏனென்றால், சினிமாவில் சரியாகத் தமிழ் பேசி விடுவேன். ஆனால் மேடையில் தப்பு தப்பாகத் தான் பேசுவேன். வரலாற்றுப் படத்தில் நடிக்கும்போது மட்டும், அதை ஒரு பணியாக எடுத்துச் செய்வேன். அப்படி இந்தப் படத்தில் ஒரு அங்கமாக இருப்பதே சந்தோஷம்தான் எனக்கு.

100 ஆண்டுகளுக்கு முன்பு மலையாளம் என்ற மொழியே கிடையாது. மலபார் தான் இருந்தது. பிரிட்டிஷ்காரர்கள் போனவுடன்தான் அனைத்தையும் பிரித்துச் சரி பண்ணினோம். இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு என மொழிகள் உள்ளன. இப்படி மொழியைத் தாண்டி கலையை ரசிப்பதே பெரிய விஷயம்.

மொழியைத் தாண்டி பல படங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதில் பேசும் மொழியைத் தாண்டி உணர்வுபூர்வமான காட்சிகள்தான் ஒன்றிணைய வைக்கும். அந்தக் காட்சிகளுக்கு எல்லாம் மொழியே கிடையாது. இந்தப் படம் சாதாரணமான ஒரு பகைமைக் கதை கிடையாது. என்றைக்கோ நடந்த ஒரு சம்பவத்துக்காக தொடர்ச்சியாகப் பழிவாங்கிக் கொண்டிருக்கும் ஒரு குடும்பத்தின் கதை.

யாருக்காக கொல்கிறோம், யாருக்காக சாகிறோம் என்பதே படத்தின் க்ளைமாக்ஸில் சொல்லப்பட்டு இருக்கும் விஷயம். ஆகையால் தான் இந்தப் படம் எப்போதுமே முக்கியம். மீதி அனைத்தையுமே படம் பேசும். இந்தப் படத்தின் தமிழ் வசனங்களை நான் கேட்டேன் என்பதற்காக இயக்குநர் ராம் எழுதிக் கொடுத்திருக்கிறார்.

நான் பேசுவது எல்லாமே ராம் பேசுவது போலத்தான் இருக்கும். இந்தப் படத்தில் என்னை சரியான முறையில் தமிழ் பேச வைக்க ரொம்ப கஷ்டப்படுத்திவிட்டார். இதை விட 'பேரன்பு' எளிதான படமாக இருந்தது. தமிழ்ப் படமாக இருக்க வேண்டும் என்பதாலேயே ராமை உள்ளே கொண்டு வந்தேன். ரொம்ப சந்தோஷமாகவே பண்ணிக் கொடுத்தார்" என்று பேசினார் மம்மூட்டி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x