Published : 02 Dec 2019 06:29 PM
Last Updated : 02 Dec 2019 06:29 PM

ரஜினியுடன் லோகேஷ் கனகராஜ் சந்திப்பு: கூட்டணி உருவாகிறதா?

சென்னையில் போயஸ் கார்டன் வீட்டில் ரஜினியைச் சந்தித்துப் பேசி வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.

விமர்சன ரீதியாகப் படங்கள் பெரிய அளவில் வரவேற்பைப் பெறும்போது, ரஜினி அந்தப் படங்களைப் பார்த்துவிட்டுப் படக்குழுவினரைப் பாராட்டுவது வழக்கம். அந்த வகையில் தீபாவளிக்கு கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி' படம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தை நரேன், ஜார்ஜ் மரியான், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்திருந்தார்கள். எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு லோகேஷ் கனகராஜை அழைத்து ரஜினி பாராட்டினார். ஆனால், அவர் தொலைபேசியில் பாராட்டு தெரிவிக்கும் போது, டெல்லியில் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பில் இருந்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

தற்போது, டெல்லி படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பியிருக்கிறது 'தளபதி 64' படக்குழு. இதனால் ரஜினியின் பாராட்டுக்கு நேரில் நன்றி தெரிவிக்க லோகேஷ் கனகராஜ் அவரது போயஸ் கார்டன் இல்லத்துக்குச் சென்றுள்ளார். இருவரின் சந்திப்பு தற்போது நடைபெற்று வருகிறது.

'விஸ்வாசம்' படத்தின்போது ரஜினியின் பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கச் சந்தித்தார் இயக்குநர் சிவா. தற்போது சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதனால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் ரஜினி நடிக்க வாய்ப்பு உண்டு என்று அவருக்கு நெருக்கமானவர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

முன்னதாக, 'தளபதி 64' படத்தை முடித்துவிட்டு கமல் நடிக்கவுள்ள படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் ஒப்பந்தமாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x