Published : 01 Dec 2019 01:01 PM
Last Updated : 01 Dec 2019 01:01 PM

ரசிகர்களின் செயல்: திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தி

படம் திரையிடப்படும்போது ரசிகர்கள் மொபைலில் புகைப்படம் எடுப்பது, வீடியோ எடுப்பது குறித்து திரையரங்க உரிமையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழ்த் திரையுலகில் எதிர்பார்ப்புக்குரிய படங்கள் வெளியாகும் முதல் நாளில், சமூக வலைதளத்தில் நிறைய புகைப்படங்கள் பரவும். திரையரங்குகளில் ரசிகர்கள் படம் பார்க்கும்போது, திரையில் படத்தின் லோகோ, நடிகர்களின் பெயர், நடிகர்களின் அறிமுகக் காட்சி எனப் பலவற்றைப் புகைப்படம் எடுத்து, தங்களுடைய சமூக வலைதளத்தில் வெளியிடுவார்கள்.

சில சமயங்களில் இது படத்துக்கே பெரிய பின்னடைவாகவும் ஏற்பட்டு விடுகிறது. இந்த விவகாரம் தொடர்பாகப் பல படக்குழுவினர், அறிக்கைகள் மூலமாக வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், இதனைத் தடுக்கவே முடியவில்லை.

இந்நிலையில், கடந்த வாரம் வெளியான 'எனை நோக்கி பாயும் தோட்டா' திரையிடும்போது பலரும் புகைப்படங்கள் எடுத்துள்ளனர். இது தொடர்பாக குரோம்பேட்டை வெற்றி திரையரங்க உரிமையாளர் ராகேஷ் கெளதமன் தனது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில், "சத்தியமாகச் சொல்லுங்கள், இது முறையா? கை தட்டுவதற்கும் விசில் அடிப்பதற்கும் நாம் நம் கைகளைப் பயன்படுத்திய காலம் போய்விட்டது. பதிவிடுவதும், லைக்குகளும்தான் முக்கியமாக இருக்கிறது.

எனக்கு பவுன்சர்கள் தேவையில்லை. ஆனால் ’பக்‌ஷிராஜன்’ வேண்டும். நீங்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று யாரும் கேட்கவேண்டாம். நான் இந்த அக்கிரமத்தைத்தான் படம் பிடித்தேன், திரையை அல்ல" என்று தெரிவித்துள்ளார் ராகேஷ் கெளதமன்.

இந்தப் பதிவுக்கு திருநெல்வேலி ராம் சினிமாஸ் உள்ளிட்ட பலருமே தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். "ரசிகர்கள் படத்தைதான் ரசிக்க வேண்டும். கை தட்டலாம், விசில் அடிக்கலாம், நடனம் ஆடலாம் உள்ளிட்ட எதுவானாலும் ஓ.கே தான். ஆனால், இப்போது டைட்டில் கார்டு போடும்போதே அமைதியாகி முழுக்க மொபைல் விளக்குகள் எரியத் தொடங்குகின்றன. இதைத் தடுக்க என்ன பண்ணலாம்" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

— Rakesh Gowthaman (@VettriTheatres) November 30, 2019

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x