Published : 29 Nov 2019 11:15 AM
Last Updated : 29 Nov 2019 11:15 AM

முதல் பார்வை: அழியாத கோலங்கள் 2

சி.காவேரி மாணிக்கம்

24 வருடங்கள் கழித்து சந்தித்துக் கொள்ளும் காதலன் - காதலி, அவர்களின் பரிசுத்தக் காதல்தான் ‘அழியாத கோலங்கள் 2’.

தமிழின் மிகப்பெரும் எழுத்தாளரான பிரகாஷ்ராஜ், ஏராளமான நூல்கள் எழுதியுள்ளார். அவர் எழுதிய ‘மோகனப் புன்னகை’ நாவலுக்காக, இந்திய அரசின் சாகித்திய அகாதமி விருது வழங்கப்படுகிறது. அந்த விருதை வாங்குவதற்காக புதுடெல்லி செல்கிறார் பிரகாஷ்ராஜ்.

அங்கிருந்து மறுநாள் ரயிலில் சென்னை திரும்ப வேண்டிய பிரகாஷ்ராஜ், முதல்நாளே விமானம் மூலம் சென்னை வருகிறார். நேராகத் தன் வீட்டுக்குச் செல்லாமல், தன்னுடைய கல்லூரி காலக் காதலியான அர்ச்சனா வீட்டுக்குச் செல்கிறார்.

24 வருடங்கள் கழித்து இருவரும் சந்தித்துக்கொள்ள, அங்கே நெகிழ்ச்சிக்கான பல விஷயங்கள் நடக்கின்றன. பிரகாஷ்ராஜுக்குப் பிடித்த விதவிதமான மீன் குழம்பு, அவர் உருவத்துக்குப் பொருத்தமான வெள்ளை ஜிப்பா, சிகரெட் பிடிப்பார் எனத் தெரிந்து புதிய ஆஷ்ட்ரே வாங்கி வைத்திருப்பது என அர்ச்சனா ஒவ்வொன்றாக பார்த்துப் பார்த்து செய்ய, நெக்குருகிப் போகிறார் பிரகாஷ்ராஜ்.

அப்போது அங்கு ஓர் அசம்பாவிதம் நிகழ்கிறது. அது, இருவரின் நற்பெயரையும் எவ்வாறு களங்கப்படுத்துகிறது? 24 வருட பரிசுத்தக் காதல் எப்படி புரிந்து கொள்ளப்படுகிறது? என்பதுதான் படத்தின் கதை.

கெளரி சங்கர் என்ற எழுத்தாளர் கதாபாத்திரத்தில் வழக்கம்போல் முத்திரை பதித்துள்ளார் பிரகாஷ்ராஜ். தன்னைக் குழந்தைபோல் பார்த்துக் கொள்ளும் மனைவி ரேவதியின் அன்பின் நெகிழ்வதாகட்டும், 24 வருடங்கள் கழித்துச் சந்தித்தாலும் தனக்குப் பிடித்த விஷயங்களைப் பார்த்துப் பார்த்துச் செய்யும் அர்ச்சனாவின் காதலைக் கண்டு பிரம்மிப்பதாகட்டும்... வெகு இயல்பாக பொருந்திப் போகிறார்.

இந்தப் படத்தின் மிகப்பெரிய பலவீனம், மோகனா கதாபாத்திரத்தில் நடித்துள்ள(?) அர்ச்சனா. இந்தப் படத்தின் உயிர்நாடியே அந்தக் கதாபாத்திரம்தான். ஆனால், நடிக்கவே தெரியாதவர் போல பல இடங்களிலும், மிகை நடிப்பால் சில இடங்களிலும் அந்தக் கதாபாத்திரத்தின் ஜீவனை மட்டுமல்ல, படத்தின் ஜீவனையும் காலி செய்து விடுகிறார். அடி மேல் அடியெடுத்து வைத்து நடப்பது, எல்லாச் சூழ்நிலைகளிலும் ஹஸ்கி வாய்ஸில் பேசுவது என படத்துடன் ஒன்றாமல் இருப்பதற்கான அத்தனை விஷயங்களையும் செய்கிறார் அர்ச்சனா.

சில காட்சிகள் மட்டுமே வரும் நாசர், ரேவதி இருவரும் தேவையானதைச் செய்துள்ளனர். செய்தி வாசிப்பாளராக சில காட்சிகள் வந்துபோகும் ஈஸ்வரி ராவின் கதாபாத்திரம், டப்பிங்குடன் பொருந்தாமல் ஏனோதானோவென்று இருக்கிறது.

அரவிந்த் சித்தார்த் இசையில், வைரமுத்து வரிகளில், சித்ரா குரலில் ‘இருவிழியில் ஈரமா’ பாடல், இனிமை. ராஜேஷ் கே. நாயரின் ஒளிப்பதிவு, கண்களை உறுத்தா வண்ணம் இயல்பாக இருக்கிறது. காதல் என்பது உடல் தேடும் விஷயமல்ல, அது உயிரோடு கலந்தது என்பதைச் சொன்ன விதம் அருமை.

ஆனால், படம் மிக மெதுவாக நகர்கிறது. படத்தின் ஆரம்பத்தில் இடம்பெறும் அர்ச்சனா படுக்கையை விட்டு எழுவது, மெதுவாக நடப்பது, அடிக்கடி கடிகாரத்தைக் காண்பிப்பது என தேவையில்லாத காட்சிகளுக்கு கத்தரி போட்டிருக்கலாம். வாட்டர் பாட்டிலில் இருந்து தண்ணீரை க்ளாஸில் ஊற்றிவிட்டு, பாட்டிலை மூடாமலேயே ஃப்ரிட்ஜுக்குள் வைப்பது; தண்ணீரில் நெல்லிக்காய் பொடியைக் கலந்து கொடுத்துவிட்டு, அதைக் கஷாயம் என்று சொல்வது; ஒரு கேமரா கூட இல்லாமல் பத்துப் பதினைந்து மைக்குகளை நீட்டி கேள்வி கேட்பது; வீட்டில் போன் இருந்தும் பத்து மாடி கீழே ஓடிப்போய் வாட்ச்மேனை எழுப்புவது என ஏகப்பட்ட லாஜிக் மீறல்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

பெங்காலியில் வெளியான இந்தக் கதையை, சாகித்திய அகாதமி நிறுவனம் தமிழில் மொழி பெயர்த்துள்ளது. அதைப் படமாக இயக்கியுள்ளார் எம்.ஆர்.பாரதி.

சாகித்திய அகாதமி விருது அறிவிக்கப்பட்டதும், பிரகாஷ்ராஜ் வீட்டில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும். அப்போது ஒரு செய்தியாளர், ‘உங்கள் நாவல்களைப் படமாக்க நீங்கள் ஏன் ஒப்புக் கொள்வதில்லை?’ எனக் கேட்பார். ‘என் நாவலில் இருட்டான ஒரு சாலை என்று வந்தால், ஒவ்வொருவரும் தங்களுக்குத் தெரிந்த இருட்டான சாலையை நினைத்துக் கொள்வார்கள். ஆனால், படமாக எடுத்தால் எல்லோருக்கும் பொதுவான ஒரே இருட்டாகிவிடும். அதனால்தான் நான் எழுதிய நாவல்களைப் படமாக்க விரும்புவதில்லை’ எனப் பதில் சொல்வார் பிரகாஷ்ராஜ்.

தன் கதைமாந்தர் வழி இப்படிச் சொன்ன இயக்குநர், அதிலிருந்து முரண்பட்டிருப்பதுதான் புதிராக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x