Published : 28 Nov 2019 12:28 PM
Last Updated : 28 Nov 2019 12:28 PM

த்ருவ் விக்ரமின் வெற்றிக்குப் பின்னால் இயக்குநர் பாலாவின் உழைப்பு இருக்கும்: இயக்குநர் தாமிரா 

த்ருவ் விக்ரமின் வெற்றிக்குப் பின்னால் கண்ணுக்குத் தெரியாமல் இயக்குநர் பாலாவின் உழைப்பு இருக்கும் என்று இயக்குநர் தாமிரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக 'ரெட்டச்சுழி', 'ஆண் தேவதை' படங்களின் இயக்குநர் தாமிரா தன் ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டதாவது:

'' 'ஆதித்ய வர்மா' திரைப்படத்தில் த்ருவ் விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கு இது முதல் படம் போல இல்லை. சியான் விக்ரமின் மகன் என்பதை நிரூபித்து விட்டார். தமிழ்த் திரைக்கு ஒரு நல்ல நாயகன் கிடைத்துவிட்டார். இதுதான் ஆதித்ய வர்மா திரைப்படத்திற்கு விமர்சனம் எழுதிய எல்லோரது கருத்தும்.

வெகு சிலர், ஆம் இது இவருக்கு இரண்டாவது படம் தானே! எனக் கிண்டலாக, குறிப்பிட்டுச் சொல்லி இருந்தார்கள். த்ருவ் விக்ரம் நன்றாக நடித்திருக்கிறார் என்கிற பாராட்டிற்குப் பின்னால் ஒரு பேருண்மையும் பெரும் வலியும் புதைந்து கிடப்பதாகத்தான் நான் உணர்கிறேன்.

அது குறித்து யாரும் பேசவில்லை என்கிற ஆதங்கமே இந்தப் பதிவின் காரணி. ஒரு நடிகனாக 'என் காதல் கண்மணி' திரைப்படத்தில் அறிமுகமாகி இயக்குநர் ஸ்ரீதரால் 'தந்து விட்டேன் என்னை' திரைப்படத்தில் காதல் நாயகனாக அறியப்பட்ட விக்ரம் பத்தாண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு ‘சேதுவில்’தான் அடையாளம் பெற்றார்.

'சேது' ஒரு நல்ல திரைப்படம் என்பதைத் தாண்டி இயக்குநர் பாலாவின் திரைப்படத்தில் நடிப்பவர்கள் நடிப்பில் ஒரு தனி முத்திரை பதிப்பார்கள் என்று பாலாவின் அடுத்தடுத்த படங்கள் நிரூபித்தன. 'சேது'வில் எப்படி ஒரு நல்ல நடிகராக அடையாளப்படுத்தப்பட்டு ஒரு முன்னணி நடிகராக விக்ரம் மாறினாரோ, அதுபோல 'நந்தா'வில் சூர்யாவின் நடிப்பு குறிப்பிட்டுச் சொல்லும்படியாக இருந்தது.

'நந்தா' கதாபாத்திரத்தின் உடல் மொழியிலிருந்து சூர்யா விடுபடவே ஐந்து படங்களானது. அதன் பின் வந்த பிதாமகனில் விக்ரமிற்கு நடிப்பிற்காக தேசிய விருது கிடைத்தது. 'நான் கடவுள்' திரைப்படத்தில் ஒரு நல்ல நடிகனாக உருவானார் ஆர்யா. அவன் இவனில் விஷாலின் நடிப்பு குறிப்பிட்டுச் சொல்லப்பட்டது. அதர்வா,ஜி.வி பிரகாஷ் என நடிக்கும் நடிகர்கள் எல்லோரையும் நடிப்பின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லத் தவறியதில்லை இயக்குநர் பாலாவின் படங்கள்.

தாமிரா

படம் வெற்றியோ தோல்வியோ... தேர்ந்த நடிகர்களை உருவாக்கும் பயிற்சிப் பட்டறையாகவே இயக்குநர் பாலாவின் எல்லா படைப்புகளும் இருந்திருக்கின்றன. விக்ரம் தொடங்கி ஜிவி பிரகாஷ் வரைக்கும் அனைத்து நடிகர்களுக்கும் இது பொருந்தும்.

இன்று த்ருவ் விக்ரம் நல்ல நடிகராக உருவாகி இருப்பதற்கு அவர் பாலாவின் பயிற்சிப் பட்டறையில் தயாரானதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

த்ருவ் வெற்றிக்குப் பின்னால் கண்ணுக்குத் தெரியாமல் இயக்குநர் பாலாவின் உழைப்பு இருக்கும் என்றே நான் நம்புகிறேன். என்றேனும் ஒரு நாள் ஒரு நேர்காணலில் த்ருவ் இந்த உண்மையை தன்னியல்பாகச் சொல்வாரென்றே நான் எதிர்பார்க்கிறேன்''.

இவ்வாறு தாமிரா தெரிவித்துள்ளார்.

பின்னணி

விஜய் தேவரகொண்டா நடிப்பில் சூப்பர் ஹிட்டான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இதனைத் தொடர்ந்து அதன் தமிழ் ரீமேக் தொடங்கப்பட்டது. 'வர்மா’என்ற பெயரில் உருவான ரீமேக்கை பாலா இயக்க, விக்ரமின் மகன் த்ருவ் விக்ரம் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால், இறுதி வடிவம் திருப்தி தராததால் படத்தை ஒட்டுமொத்தமாகக் கைவிட்டது படக்குழு.

இதனைத் தொடர்ந்து 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் முதல்நிலை உதவி இயக்குநராகப் பணிபுரிந்த கிரிசாயா இயக்கத்தில் மீண்டும் ரீமேக் தொடங்கப்பட்டது. 'ஆதித்ய வர்மா' எனப் பெயரிடப்பட்ட இப்படத்தில் த்ருவ் விக்ரம், பனிட்டா சந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்தனர். நவம்பர் 21-ம் தேதி 'ஆதித்ய வர்மா' வெளியானது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x