Published : 28 Nov 2019 10:01 AM
Last Updated : 28 Nov 2019 10:01 AM

'சும்மா கிழி' பாடல் உருவான விதம்: ரகசியம் பகிரும் பாடலாசிரியர் விவேக்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தர்பார்’. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்தின் 'சும்மா கிழி' என்ற பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எஸ்.பி.பி பாடியுள்ள இந்தப் பாடலின் வரிகளை விவேக் எழுதியுள்ளார். ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடலின் தொடக்கமான 'சும்மா கிழி' என்ற வார்த்தை முதலிலும், பாடலின் இறுதியிலும் ரஜினியின் குரலில் இடம் பெற்றுள்ளது. மேலும், முழுமையாகப் பாடலைக் கேட்டு கை தட்டி "சூப்பர் பா... அய்யோ.. தியேட்டர்ல கிழிதான்" என்று அனிருத்தை ரஜினி பாராட்டுவதும், பாடலின் இறுதியில் இடம் பெற்றுள்ளது.

இந்தப் பாடலில் ‘சும்மா கிழி’ என்ற வார்த்தையை ரஜினி பாடியுள்ளார். இது அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொதுவாக ரஜினி படத்தின் பாடல், ட்ரெய்லர் உள்ளிட்டவை ரிலீஸாகும்போது அவரே வந்து ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் பார்வையிடுவது, பாடுவது, விவாதிப்பது போன்ற விஷயங்கள் வெளிவந்ததே இல்லை.

ஆனால், ‘தர்பார்’ படத்தின் இந்த சிங்கிள் டிராக் வீடியோ வெளியீட்டில் ரஜினியே பாடுவது, அனிருத் உள்ளிட்ட படக்குழுவினரோடு ரஜினி ஸ்டுடியோவில் விவாதிப்பது போன்ற விஷயங்கள் வெளியாகியுள்ளன. இதை அவரது ரசிகர்கள் திருவிழா அனுபவமாகவே கொண்டாடி வருகின்றனர்.

‘சும்மா கிழி

நான் தான்டா இனிமேலு

வந்து நின்னா தர்பாரு

உன்னோட கேங்குக்கு

நான் தான்டா லீடு...’ என்று தொடங்கும் இந்தப் பாடல்

‘நெருப்புப் பேரோட

நீ குடுத்த ஸ்டாரோட

இன்னைக்கும் ராஜா நான்

கேட்டுப் பாரு - சும்மா கிழி!’ என்ற வரிகள் அடுத்தடுத்து இடம்பெறுகின்றன.

இந்தப் பாடல் உருவானது அனுபவம் குறித்து பாடலாசிரியர் விவேக் கூறியதாவது:

''பாடலின் தொடக்கமாகவும் முடிவாகவும் ‘சும்மா கிழி’ என ரஜினி சார் குரலில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் பாடல் ஒலிப்பதிவு அன்று அவர் ஸ்டுடியோ வந்தார். அப்போது படக்குழுவினர் நாங்கள் அனைவரும் இருந்தோம். யாருக்காக ஒரு பாடல் உருவாக்குகிறோமோ அவரே உடன் இருந்து ஒலிப்பதிவு செய்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் ‘சும்மா கிழி’ என்று குரல் பதிவு கொடுத்துவிட்டு, முழு பாடல் எப்படி உருவாகிறது என்பதை ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் ஸ்டுடியோ இருக்கையில் அமர்ந்து அதைக் கேட்டு ரசித்த விதமே ஸ்டைலாக இருந்தது. அதனால்தான் 40 ஆண்டுகளுக்கும் மேல் தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை அவரால் உருவாக்கி வைத்திருக்க முடிகிறது.

இந்தப் பாடல் முழுக்கக் கேட்டுவிட்டு ரஜினி சார் எங்களை எல்லாம் பாராட்டினார். அந்தத் தொகுப்பு அப்படியே தற் போது வெளி யாகியுள்ளது. இதற்கு முன்பு ‘பேட்ட’ படத்தில் 3 பாடல்கள் எழுதினேன். எனக்கும், அனிருத்துக்கும் அலைவரிசை எப்போதுமே நன்றாக அமையும். அப்படித்தான் இந்தப் பாடலும் அமைந்தது.

1 மணிநேரத்துக்குள் எழுதி முடித்த பாடல் இது. ‘சும்மா கிழி’ பாடல் வெளியான நிமிடத்தில் இருந்து ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கிறது... அவ்வளவு வைரல்!''.

இவ்வாறு விவேக் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x