Published : 27 Nov 2019 04:08 PM
Last Updated : 27 Nov 2019 04:08 PM

பாக்யராஜ் சர்ச்சைப் பேச்சு: தமிழக மகளிர் ஆணையத்துக்கு ஆந்திர மகளிர் ஆணையம் கடிதம்

பெண்கள் தொடர்பான பாக்யராஜின் சர்ச்சைப் பேச்சு தொடர்பாகத் தமிழக மகளிர் ஆணையத்துக்கு ஆந்திர மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

சென்னையில் நடைபெற்ற 'கருத்துக்களை பதிவுசெய்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாக்யராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த விழாவில் பேசும் போது "ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழைய முடியாது என்பது பழமொழி. அதை படத்தில் ஜாலியாகச் சொல்லியிருப்போம். ஆனால், அது உண்மை தான். பெண்கள் இடம் கொடுக்காமல் தவறு நடக்க வழி இல்லை.

பெண்கள் ஜாக்கிரதையாக இருந்தால் சரியாக இருக்கும். ஆண்களை மட்டுமே குறை சொல்வதில் அர்த்தம் இல்லை. பொள்ளாச்சியில் நடந்த தவறுக்கு ஆண்கள் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. பெண்ணின் பலவீனத்தை அவன் உபயோகப்படுத்திக் கொண்டான். அவன் செய்தது தவறு என்றால், அந்த வாய்ப்பை உண்டாக்கிக் கொடுத்ததும் தவறு தான்” என்று பேசினார். இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது. இதற்கு பல்வேறு பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழக மகளிர் ஆணையத்துக்கு ஆந்திரப் பிரதேச மகளிர் ஆணையம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில், "தமிழகத்தில் பிரபல நடிகரான பாக்யராஜ், இந்தியப் பெண்களை மொத்தமாக இழிவுபடுத்தும் விதமாகக் கூறிய கருத்தை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

தேசிய பெண்கள் ஆணையம், மற்ற மாநில ஆணையங்களும் இந்த சமூகத்தில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரவும், பெண்கள் உரிமைக்காகவும் முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இது பற்றி எதுவும் தெரியாமல் ஒன்றிரண்டு உதாரணங்களை மட்டும் வைத்து பொதுவாக ஒரு கருத்தை பாக்யராஜ் கூறியுள்ளார்.

இது பெண்களுக்காகச் செயல்படும் ஆர்வலர்கள், அமைப்புகள், ஆணையங்கள் மற்றும் அரசின் முயற்சிகளைக் காயப்படுத்தும் விதமாக இருக்கிறது. எனவே, இந்த விஷயத்தை அரசு மற்றும் சட்டரீதியாகக் கொண்டு சென்று, பாக்யராஜுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மகளிர் ஆணையத்தின் தலைவரிடம் கேட்டுக்கொள்கிறேன். நன்றி. உங்கள் பதிலுக்காகக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளது ஆந்திரப் பிரதேச மகளிர் ஆணையம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x