Published : 27 Nov 2019 03:10 PM
Last Updated : 27 Nov 2019 03:10 PM

பாலிவுட் பற்றி பயப்படும் விஷயம்? - விஜய் சேதுபதி பதில்

பாலிவுட் பற்றி பயப்படும் விஷயம் என்ன என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார்.

இந்தியத் திரையுலகின் முன்னணி சினிமா இணையதளம் 'கடந்த 10 ஆண்டுகளில் 100 சிறந்த நடிகர்கள்' என்ற பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தனுஷ், மிஷ்கின், பாபி சிம்ஹா, ஐஸ்வர்யா ராஜேஷ், அஸ்வந்த், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல தமிழ்த் திரையுலகப் பிரபலங்களின் பெயர்கள் இடம்பெற்றன.

இதில் இடம்பெற்ற முக்கியமான நடிகர்களை ஒன்றிணைத்து வீடியோ பேட்டியும் எடுத்து வெளியிட்டுள்ளனர். இதில் அயுஷ்மான் குரானா, பார்வதி, தீபிகா படுகோன், ரன்வீர் சிங், அலியா பட், மனோஜ் பாஜ்பாய், விஜய் தேவரகொண்டா மற்றும் விஜய் சேதுபதி இடம்பெற்றனர்.

இதில் விஜய் சேதுபதியிடம் "இந்தி சினிமா என்று வரும்போது நீங்கள் பயப்படும் விஷயம் என்ன?" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு விஜய் சேதுபதி பதில் அளிக்கையில், “என் முதல் பயம் மொழி. அடுத்தது எனக்கு இந்தக் கலாச்சாரம் பற்றி ஒன்றுமே தெரியாது. நான் நிறைய இந்திப் படங்கள் பார்ப்பதில்லை. மொழியை யார் வேண்டுமானாலும் கற்கலாம். சவுதியில் 6 மாதங்கள் வேலை செய்தால் அரபிக் மொழி கூட பெரிய தடை அல்ல, கற்கலாம். ஆனால் கலாச்சாரம்தான் முக்கியம். அதன் மூலமாகத்தான் ரசிகர்களைச் சென்றடையமுடியும்” என்றார்.

விஜய் சேதுபதியை இடைமறித்த அலியா பட், “உடல் மொழியைக் குறிப்பிடுகிறீர்களா?” என்றார். உடனே, விஜய் சேதுபதி "இல்லை. நீங்கள் வேறு மாதிரி சிந்திப்பீர்கள். நான் வேறு மாதிரி சிந்திப்பேன். குடும்பம், உங்கள் பொருளாதாரத்தை நீங்கள் நிர்வகிக்கும் முறை, உங்கள் நட்பு எல்லாம் வித்தியாசப்படும்.

ஒவ்வொரு நகரத்துக்கும், மாநிலத்துக்கும் ஒரு உற்சாக ஆற்றல் இருக்கிறது. அதை அந்தந்த இடங்களில் ஒவ்வொரு விதமாகப் பேணுவார்கள். அது எனக்குத் தெரிய வேண்டும். அப்போதுதான் என்னால் அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க முடியும். என்னால் தமிழ், தெலுங்கு அல்லது மலையாளம் எனத் தென்னிந்தியக் கலாச்சாரத்தோடு ஒன்றிவிட முடியும். ஏனென்றால் அங்கு இவை கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கும் கலாச்சாரங்கள். ஆனால் இந்தி என்று வரும்போது கலாச்சாரத்தைத் தெரிந்துகொள்வது முக்கியம்.

நான் துபாயில் 3 வருடங்கள் வேலை செய்தேன். இந்தி சரளமாகப் பேசி வந்தேன். இப்போது 16 வருட இடைவெளி ஆகிவிட்டது. என்னால் இன்னமும் இந்தியைப் புரிந்து கொள்ள முடியும். எனவே மொழி எளிது. தென்னிந்தியாவில் நான் எங்கு சென்றாலும் மக்கள் என்னை அவர்களோடு தொடர்புப்படுத்திக் கொள்கின்றனர். உங்களுக்கு உண்மையிலேயே கலாச்சாரம் பற்றித் தெரிய வந்தால், அந்த மக்களுக்காக யோசித்தீர்கள் என்றால், சமூகம் தெரிகிறது என்றால், உங்கள் கலை மூலமாக எல்லோரையும் சென்றடையலாம்.

மக்கள் மீது உங்களுக்குத் தூய்மையான அன்பு இருந்தால், அது களங்கமின்றி இருந்தால், ஒரு சிறிய கோப்பையை அங்கிருந்து இங்கு நகர்த்தினாலும் உங்களை மக்கள் ரசிப்பார்கள். ஒவ்வொரு கதாபாத்திரத்தில் அப்படி மக்களைச் சென்றடைய ஒரு நுட்பம் இருக்கிறது. அந்தக் கதாபாத்திரம் நல்லவனாக இருந்தாலும் சரி, கெட்டவனாக இருந்தாலும் சரி” என்று தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x