Published : 26 Nov 2019 02:54 PM
Last Updated : 26 Nov 2019 02:54 PM

குருவுக்கு ‘மண்வாசனை’; சிஷ்யருக்கு ‘முந்தானை முடிச்சு’

வி.ராம்ஜி


குருநாதர் பாரதிராஜா ‘மண்வாசனை’ எடுத்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். அதேபோல் சிஷ்யர் கே.பாக்யராஜ் ’முந்தானை முடிச்சு’ எடுத்து பிரமாண்டமான வெற்றியை அடைந்தார். இந்த இரண்டு படங்களும், 1983-ம் ஆண்டு, ஒருவார இடைவெளியில் வெளியாகி, ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.


பாரதிராஜா இந்த வருடத்தில் ‘மண்வாசனை’ படமெடுத்தார். சித்ராலட்சுமணனின் காயத்ரி பிலிம்ஸ் தயாரித்த முதல் படம் இது. பாண்டியன், ரேவதி முதலானோரை அறிமுகப்படுத்திய இந்தப் படத்தில், காந்திமதி, விஜயன், வினுசக்ரவர்த்தி, நிழல்கள் ரவி ஆகியோரின் நடிப்பு பேசப்பட்டது.


முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியைக் கொண்ட இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. இளையராஜாதான் இசை. ‘பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு’, ‘அரிசி குத்தும் அக்கா மகளே’ என எல்லாப் பாடல்களுமே செம ஹிட்டு.
உறவுகளுக்குள் முறுக்கிக்கொண்டு, முகம் திருப்பிக் கொள்கிற விஷயத்தை, தனக்கே உரிய கோபத்துடனும் ஆவேசத்துடனும் அக்கறையுடனும் சொல்லியிருப்பார் பாரதிராஜா. பல ஊர்களில் 100 நாளைக் கடந்தும் சில ஊர்களில் 200 நாட்களைக் கடந்தும் மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் 300 நாளைக் கடந்தும் ஓடி சாதனை படைத்தது. இந்தப் படத்துக்குப் பிறகு பாண்டியன் ஒரு ரவுண்டு வந்தார். ரேவதி, குணச்சித்திர நடிகை எனப் பேரெடுத்தார். இன்று வரை ஆகச்சிறந்த நடிகை என்று கொண்டாடப்பட்டு வருகிறார்.


குருநாதரின் ‘மண்வாசனை’ எங்குபார்த்தாலும் மணம் வீசிக்கொண்டிருக்க, சிஷ்யர் பாக்யராஜ் தன் திறமையால் மொத்த ரசிகர்களையும் முடிச்சுப் போட்டு வைத்திருந்தார். அதுதான் ‘முந்தானை முடிச்சு’.


ஏவிஎம் நிறுவனத்துக்கு பாக்யராஜ் இயக்கிய முதல் படம் இது. ‘ஒரு கை ஓசை’ போல, ‘தூறல் நின்னு போச்சு’ போல இந்தப் படமும் முழுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில் அமைந்த படமாக இருந்தது. இதில் ஊர்வசியை அறிமுகப்படுத்தினார் பாக்யராஜ். மேலும் தீபாவுக்கு ரீ எண்ட்ரி படமாக இந்தப் படம் அமைந்தது. கே.கே.செளந்தர், கோவை சரளா, பயில்வான் ரங்கநாதன் முதலானோர் நடித்திருந்தனர். பூர்ணிமா பாக்யராஜ் கெளரவத் தோற்றம்.


இளையராஜா இசை. எல்லாப் பாடல்களுமே செம ஹிட். ‘கண்ணத் தொறக்கணும் சாமி’ ஒரு பக்கம் ஹிட்டு. இன்னொரு பக்கம் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாட்டு தாலாட்டியது. ‘நான் புடிச்ச மாப்பிள்ளைதான்’ பாடலும் ‘அந்தி வரும் நேரம்’ பாடலும் மயக்கின.


இந்தப் படம் திரையிட்ட பல ஊர்களில் 200 நாட்களைக் கடந்து ஓடின. பாக்யராஜுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தந்தது. ஏவிஎம் படங்களில் இந்தப் படம் ரிக்கார்டு ஏற்படுத்தியது.


பாக்யராஜின் ‘முந்தானை முடிச்சு’ ஜூலை 22-ம் தேதி ரிலீசானது. அடுத்த வாரம் 29-ம் தேதி பாரதிராஜாவின் ‘மண்வாசனை’ வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x