Published : 25 Nov 2019 05:20 PM
Last Updated : 25 Nov 2019 05:20 PM

கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதியா? - படக்குழு தரப்பில் விளக்கம்

'இந்தியன் 2' படத்தில் கமலுக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக வெளியான செய்திக்குப் படக்குழு மறுப்பு தெரிவித்துள்ளது.

கமல்ஹாசன் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகளை முன்வைத்து 'உங்கள் நான்' என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் இளையராஜா, ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம், இயக்குநர் ஷங்கர், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், வடிவேலு உள்ளிட்ட பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசும்போது, " கமலுடன் சேர்ந்து நடிக்க ‘இந்தியன் 2’வில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் அதைத் தவற விட்டுவிட்டேன். இப்போது நான் அவரிடம் வெளிப்படையாகக் கேட்கிறேன், ‘சார், உங்களுடன் பணியாற்ற ஒரு வாய்ப்பு தாருங்கள்'" என்று தன்னுடைய பேச்சில் குறிப்பிட்டார்.

இந்தப் பேச்சைத் தொடர்ந்து, ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் தேதியில் ஒதுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக 'இந்தியன் 2' படக்குழுவினரிடம் விசாரித்தபோது, "'இந்தியன் 2' படத்தில் நடிக்கவுள்ளவர்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இன்னும் நாங்கள் வெளியிடவே இல்லை. அதற்குள் இவர் நடிக்கிறார், அவர் நடிக்கிறார் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

கமல் விழாவில் விஜய் சேதுபதி பேசியது உண்மைதான். ஆனால், முதலில் நாங்கள் கேட்டபோது தேதிகள் பிரச்சினையால் அவரால் நடிக்க முடியவில்லை. 'கமல் 60' விழாவுக்குப் பிறகு அவரை நாங்கள் அணுகவே இல்லை. அதற்குள் எப்படி இப்படியொரு செய்தி வெளியானது எனத் தெரியவில்லை" என்று தெரிவித்தார்கள்.

’இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், சமுத்திரக்கனி, ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானிசங்கர், வித்யுத் ஜம்வால், டெல்லி கணேஷ், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் கமலுடன் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைத்து வரும் இந்தப் படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்து வருகிறார். ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளைக் கவனித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x