Published : 23 Nov 2019 04:44 PM
Last Updated : 23 Nov 2019 04:44 PM

முதல் பார்வை: கே.டி.

சி.காவேரி மாணிக்கம்

வயதான குழந்தைக்கும், பெரிய மனிதனின் மனப்பான்மையுடன் திகழும் சிறுவனுக்கும் இடையிலான உறவின் அழகியல்தான் ‘கே.டி.’

மூப்பின் தள்ளாமையால் படுத்த படுக்கையாகிறார் கருப்பு துரை. அவரைப் பராமரிப்பது ஒருகட்டத்தில் வீட்டில் உள்ளவர்களுக்கு சுமையாகத் தோன்ற, ‘தலைக்கு ஊத்திவிட’ (தலைக்கு நன்றாக எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி, பின்னர் 10-க்கும் மேற்பட்ட இளநீரைக் குடிக்க வைத்தால் ஜன்னி வந்து இறந்துவிடுவர்) முடிவெடுக்கின்றனர்.

அந்த நேரத்தில் கருப்பு துரைக்கு விழிப்பு வந்துவிட, அவர்களின் முடிவைக்கண்டு மனம் வெதும்பி வீட்டைவிட்டு யாருக்கும் தெரியாமல் வெளியேறுகிறார். எங்கு போவது என திக்கு தெரியாமல் தவிப்பவருக்கு, பிறந்தவுடனேயே கோயிலில் தூக்கி வீசப்பட்டு, அங்கேயே வளர்ந்துவரும் குட்டி என்ற சிறுவனின் நட்பு கிடைக்கிறது.

இருவருக்கும் இடையிலான நட்பு எப்படிப் பயணிக்கிறது? கருப்பு துரையின் குடும்பத்தினர் அவரைக் கண்டுபிடித்தார்களா? என்பது மீதிக்கதை.

கருப்பு துரைதான் படத்தின் நாயகன். அவரைச் சுற்றித்தான் முழுக்கதையும் நகர்கிறது. எனவே, அவர் பெயரைச் சுருக்கி ‘கே.டி.’ என படத்தின் தலைப்பாக வைத்துள்ளார் இயக்குநர் மதுமிதா. 80 வயது முதியவருக்கும், 8 வயது சிறுவனுக்கும் இடையிலான நட்பு என்று யோசித்த ஒன்லைனுக்காகவே அவருக்குப் பாராட்டுகள்.

படத்தின் மிகப்பெரிய பலம், யதார்த்தம். ஒன்றிரண்டு இடங்களைத் தவிர சினிமாத்தனமில்லாத இயல்பான காட்சிகள், படத்துடன் நம்மை ஒன்றிவிடச் செய்கின்றன. யாருக்கும் பெரிதாக அறிமுகமில்லாத நடிகர்களின் தேர்வு, அதற்குத் துணை செய்கிறது.

கருப்பு துரையாக பேராசிரியர் மு.இராமசாமி. ‘மருது’, ‘சண்டக்கோழி’, ‘ஜோக்கர்’ உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தவருக்கு, முதன்முதலாக பிரதான வேடம். இவரை விட்டால் இந்தக் கதாபாத்திரத்துக்கு வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் என இயக்குநர் நினைத்ததை உண்மையாக்கி இருக்கிறார் மு.இராமசாமி.

பிள்ளைகள் தன்னைக் கருணைக்கொலை செய்ய நினைத்ததை எண்ணிக் கலங்குவதாகட்டும், தன்னுடைய ஆசைகள் நிறைவேறும்போது சின்னக் குழந்தை போல் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பதாகட்டும், குட்டி தன்னைவிட்டுப் பிரியப்போவதை நினைத்து அழுவதாகட்டும்... எல்லா இடங்களிலுமே நம் வீட்டுத் தாத்தாவைக் கண்முன் நிறுத்துகிறார்.

அதுவும் அவர் பிரியாணி சாப்பிடும் அந்த அழகு இருக்கிறதே... அடடா! பிரியாணி பிடிக்காதவர்கள் கூட இரண்டு ப்ளேட் வாங்கிச் சாப்பிட வைத்துவிடுகிறார் மனிதர். ‘கவுச்சி’ய (மாமிசம்) எப்படித்தான் சாப்பிடுறீங்களோ? என்ற குட்டியின் கேள்விக்கு, கருப்பு துரை கொடுக்கும் விளக்கமும் அசத்தல்.

சின்ன வயதிலேயே பெரிய மனிதரின் பக்குவத்தோடு குட்டி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நாகவிஷால். படத்தில் நடிக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல், வெகு இயல்பாக, அந்த வயதுக்கே உரிய துடுக்குத்தனங்களோடு தன் கதாபாத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சிறு வயதிலேயே இறப்பைக்கூட இயல்பாக அணுகும் பக்குவத்தில் மிளிர்கிறார். வயதானவரின் ஆசைகளைத் தெரிந்துகொண்டு, அதை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வைக்கும் 8 வயது சிறுவனின் அன்பை, எதைக்கொண்டும் ஈடுசெய்ய இயலாது. ‘என் ஆத்தா கூட என்னை இப்படி பார்த்துகிட்டது இல்ல’ எனக் கருப்பு துரை கண்கலங்கும் இடத்தில், அறியாமலேயே நம் கண்களும் கலங்குகின்றன.

காணாமல் போன கருப்பு துரையைக் கண்டுபிடிக்கும் யோக் ஜேபியின் கதாபாத்திரத்தை அறிமுகப்படுத்தும்போது, பெரிய பில்டப் கொடுக்கின்றனர். ஆனால், எல்லோரையும் போல் சாதாரணமாகவே அவரும் தேடுகிறார். அந்த பில்டப்பைத் தவிர்த்திருக்கலாம்.

கார்த்திகேயா மூர்த்தியின் இசையில், ‘டக்குலிங்கு’ பாடல் அடிக்கடி முணுமுணுக்க வைக்கிறது. பின்னணி இசை, படத்துக்கு சுதி சேர்க்கிறது. மெய்யேந்திரன் கெம்புராஜ் ஒளிப்பதிவு, நெல்லையின் அழகை அள்ளித் தந்திருக்கிறது.

கருப்பு துரையின் ஆசைகள் நிறைவேறும் பகுதிகள், குட்டியின் துடுக்குகள், காதலியைத் தேடி கருப்பு துரை செல்வது... என படம் முழுவதும் ஹைக்கூ தொகுப்பைப் போல காட்சியளிக்கிறது. போரடிக்காமல், ஒரே மூச்சில் வாசித்து விடுகிற நாவலின் திருப்தியைத் தருகிறது ‘கே.டி’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x