Published : 17 Aug 2015 04:05 PM
Last Updated : 17 Aug 2015 04:05 PM

ரஜினி படத்தின் தலைப்பு கபாலி- ரஞ்சித் அறிவிப்பு

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்துக்கு 'கபாலி' என்று தலைப்பு வைத்துள்ளனர். இதை ரஞ்சித் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதன் தொடர்ச்சியாக, #Kabali என்ற ஹேஷ்டேக், ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வலம் வரத் தொடங்கியது.

'அட்டகத்தி', 'மெட்ராஸ்' படங்களை இயக்கிய ரஞ்சித் ரஜினியை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். பிரகாஷ்ராஜ், கலையரசன், தன்ஷிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைக்கிறார். 'மெட்ராஸ்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த முரளி ஜி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். கபிலன், உமாதேவி, கானா பாலா ஆகிய மூவரும் பாடல்களை எழுதுகின்றனர். பிரவீன் கே.எல். படத்தொகுப்புப் பணிகளை கவனித்துக் கொள்கிறார்.

'காளி' என்ற தலைப்புக்கு ரஜினி சம்மதம் தெரிவிக்கவில்லை. பல்வேறு தலைப்புகள் இருந்தும் 'கபாலி' தலைப்பு சரியாக இருக்கும் என்று படக்குழு ஆலோசித்தது. ஏனென்றால் இப்படத்தில் ரஜினி பாத்திரத்தின் பெயர் 'கபாலீஸ்வரன்'.

இந்நிலையில், 'கபாலி 'தான் படத்தின் தலைப்பு என்பது உறுதியாகி இருக்கிறது. இயக்குநர் ரஞ்சித் இதை ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

விநாயகர் சதுர்த்தி அன்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். மலேசியாவில் தொடர்ச்சியாக 60 நாள் படப்பிடிப்பு நடத்துவதற்கான ஆயுத்த பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x