Published : 21 Nov 2019 01:33 PM
Last Updated : 21 Nov 2019 01:33 PM

உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக என் கருத்து குற்றமாகிவிடாது: விசிக கட்சியினருக்கு கஸ்தூரி கண்டனம்

உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக என் கருத்து குற்றமாகிவிடாது என்று விசிகவுக்கு கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபமாக இணையத்தில் இந்து கடவுள் சிலைகள் குறித்து திருமாவளவன் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாகப் பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே நடிகை கஸ்தூரியும் புனிதத்தலங்கள் அவமதிப்பு தொடர்பாகத் தனது கருத்தையும் தெரிவித்திருந்தார்.

இந்தப் பதிவு திருமாவளவன் பேச்சு சம்பந்தப்பட்டதுதான் என்று, அவருடைய கட்சியினர் கஸ்தூரிக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கஸ்தூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''விசிகவில் எனக்குப் பல நல்ல நண்பர்கள் இருப்பதால் இந்த திறந்த மடலை எழுதுகிறேன்.

இப்பொழுது கடந்த சில நாட்களாக, விசிகவைச் சேர்ந்த சிலர் என்னை சமூக வெளியில் தாக்கியும், பொய்ப் பிரச்சாரங்களில் ஈடுபட்டும் வருவதையும் காண்கிறேன். நேற்று போலீஸில் பொய்ப் புகார் அளித்துள்ளதாகவும் அறிகிறேன். விசிக தலைவர் திருமாவளவனுக்கும் எனக்கும் இடையில் விரிசலை ஏற்படுத்தவும் பட்டியலினத்தவருக்கும் எதிரானவள் என்ற தோற்றத்தை ஏற்படுத்தவும் முயல்கிறார்கள்.

மதநல்லிக்கணத்துக்குப் பெயர் பெற்ற இந்தியாவில் சமீபகாலமாகப் பெருவாரியான மக்களின் மத நம்பிக்கையை அவமதிக்கும் போக்கு பெருகி வருகிறது. கடந்த வாரம் முகநூலில், புனிதத்தலங்களை அவமதிக்கும் விஷமிகளை விமர்சித்து பதிவிட்டிருந்தேன். அந்தப் பதிவில் எந்த தனி நபரையோ, சமூகத்தையோ குறிப்பிடவில்லை என்னும் பொழுது, திருமாவளவன் எம்.பி. மற்றும் அவர் சார்ந்த சமூகத்தைப் பற்றி நான் பதிவிட்டுள்ளேன் என்று தன்னிச்சையாக வந்து வம்பிழுப்பவர்கள், ஏன் அப்படி அவர்களுக்குத் தோன்றுகிறது என்று அவர்கள்தான் விளக்க வேண்டும்.

எந்த தனி நபரையோ, சாதியையோ நான் குறிப்பிட்டுப் பேசவில்லை எனும் நிலையில், என் மீது ஆதாரமற்ற வன்கொடுமை புகார் கொடுப்பதெல்லாம் POA சட்டத்தை வியாபார நோக்குடன் அணுகும் செயல். It is a malicious and frivolous case and abuse of the POA act. ஒரு வழக்கறிஞர் இப்படி ஆதாரமற்ற பொய் கேஸ் போட்டால், அதற்கான பின்விளைவுகள் என்ன என்று அந்த வழக்கறிஞர்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக எல்லாம் என் கருத்து குற்றமாகி விடாது. சும்மா இப்படி POA சட்டத்தை இஷ்டத்துக்குக் கையாண்டால் நாளை உண்மையான பிரச்சினையில் யார் உங்களை நம்புவார்கள்.

கட்சிக்கும் களங்கும் ஏற்படுத்தும் இது போன்ற அவதூறு நடவடிக்கைகள் நான் மிகவும் மதிக்கும் திருமாவளவனுக்குத் தெரிந்து நடக்கவில்லை என்றே நம்புகிறேன். இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்களை உடனடியாக தலைமை கண்டிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும்''.

இவ்வாறு கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x