Published : 21 Nov 2019 11:27 AM
Last Updated : 21 Nov 2019 11:27 AM

'பிகில்' வசூல் விவகாரம்: தனஞ்ஜெயன் - 'விஸ்வாசம்' விநியோகஸ்தர் மோதல்; நடந்தது என்ன?

'பிகில்' வசூல் விவகாரம் தொடர்பாக தனஞ்ஜெயனுக்கும் 'விஸ்வாசம்' விநியோகஸ்தரான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'பிகில்'. 180 கோடி ரூபாய் பொருட்செலவில் ஏஜிஸ் நிறுவனம் தயாரித்தது. இந்தப் படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றி ஸ்கிரீன் சீன் நிறுவனம் வெளியிட்டது. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் அக்டோபர் 25-ம் தேதி 'பிகில்' வெளியானது.

இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியாக மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தமிழக உரிமையை 80 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வாங்கி, விநியோகம் செய்துள்ளது ஸ்கிரீன் சீன் நிறுவனம். இதனால், இந்த வசூல் தமிழகத்தில் சாத்தியமில்லை, நஷ்டமே ஏற்படும் எனக் கருதினார்கள். ஆனால், அனைத்து சாதனைகளையும் கடந்து ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட வரிகள் போக ஷேர் தொகையே 80 கோடி ரூபாயைக் கடந்தது.

இதனால் அனைத்துத் தரப்புமே பெரும் ஆச்சரியத்துடன் கொண்டாடி வருகிறார்கள். மேலும், தமிழகத்தில் அதிக வசூல் செய்த தமிழ்ப் படங்கள் பட்டியலில் முதல் இடத்திலிருந்த 'விஸ்வாசம்' வசூலை முறியடித்து, முதல் இடத்தைப் பிடித்தது 'பிகில்'. இதனால் விஜய் - அஜித் இரண்டு தரப்பு ரசிகர்களுக்குமே சமூக வலைதளத்தில் மோதல்கள் உருவாகின.

இந்நிலையில், 'சினிமா சென்ட்ரல்' என்ற யூடியூப் பக்கத்தில் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் சினிமா வியாபாரம், பேட்டிகள் என தொடர்ச்சியாக தினமும் ஒரு வீடியோ வெளியிட்டு வருகிறார். இதில் நேற்று (நவம்பர் 20) 'பிகில்' படம் செய்த மாபெரும் சாதனை என்று வியாபார விஷயங்களைத் தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டார். இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றாலும், அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தை உண்டாக்கியது.

இந்த வீடியோவை மேற்கோளிட்டு, அஜித் ரசிகர்கள் "8 நாட்களில் 125 கோடி ரூபாய் வசூல் செய்தது 'விஸ்வாசம்' தெரியுமா" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு தனஞ்ஜெயன் "கண்டிப்பாக இல்லை. அதை மிகைப்படுத்திச் சொல்லியிருக்கிறார்" என்று பதிலளித்தார். இந்தப் பதில் 'விஸ்வாசம்' விநியோகஸ்தரான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தைக் கோபப்படுத்தியது.

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் ராஜேஷ்
கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ்

உடனே, 'விஸ்வாசம்' வெளியான சமயத்தில் தனஞ்ஜெயன் அளித்த பேட்டியின் சில பகுதிகளைப் பகிர்ந்து கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் "தல. சிலபேர் இப்படியும் பேசுவாங்க. அப்படியும் பேசுவாங்க. ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லிட்டு இருந்தா, நம்ம வேலை ஆகாது. பிகில் சக்சஸா? நாங்க ஹேப்பி. நாளைக்கு தர்பார் சக்சஸா? அதுக்கும் நாங்க ஹாப்பி. எல்லாம் நம்ம தமிழ்த் திரையுலகம் தானே" என்று தெரிவித்தது. இந்தப் பதிவு பெரும் வைரலாகப் பரவியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனஞ்ஜெயன், "இது பற்றி டேக் செய்து, சண்டையிட்டுக் கொண்டிருக்கும் அனைவரும், தயவு செய்து விநியோகஸ்தர் கேஜேஆர் ஸ்டுடியோஸைக் கேளுங்கள். தமிழகத்தில் அவருக்குக் கிடைத்த பங்கு என அவர் எதை தயாரிப்பாளருக்குக் காட்டியிருக்கிறார் என்று பதிவிடச் சொல்லுங்கள். 'பிகில்' ரூ.80 கோடி பங்கு வசூலித்துள்ளது என்று விவரங்களுடன் சொன்னேன். அவரது படம் அதை விட அதிகமாக வசூலித்தது என்று அவர் உறுதி செய்தால், சத்யஜோதி நிறுவனத்தோடு சேர்ந்து நானும் கொண்டாடுவேன்.

நீங்கள் விநியோகித்த பகுதிகளில் கிடைத்த, சத்யஜோதி நிறுவனத்துக்கு நீங்கள் கணக்கு காட்டிய அதிகாரபூர்வமான விநியோகஸ்தர் பங்கைப் பகிர்ந்தால் நான் பாராட்டுவேன், கொண்டாடுவேன். அப்படிச் செய்தால் அவரும் அவரது கணக்கு வழக்குகளை முடித்துக் கொள்வார். அது நிலுவையில் இருக்கிறது என்று எனக்குச் சொல்லப்பட்டுள்ளது. சத்யஜோதி நிறுவனத்தை டேக் செய்கிறேன். தயவுசெய்து உறுதி செய்யுங்கள்" என்று பதிவிட்டார். இந்தப் பதிவுக்கு 'சரியான பதிலடி' என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

தனஞ்ஜெயனின் பதிவுக்கு கே.ஜே.ஆர் நிறுவனம், "அடுத்தவன் வீட்டை எட்டிப் பார்த்து குற்றம் சொல்றதுக்கு முன்னாடி, தான் வீடு சரியா இருக்கான்னு பார்க்கணும் சார். ஜனவரி மாதத்திலிருந்து விஸ்வாசம் வெற்றியைக் கொண்டாடி வருகிறோம். உங்களுக்கு வேண்டுமென்றால் நீங்களும் வாருங்கள். கொண்டாடுவோம். எங்கள் அலுவலகக் கதவு எப்போதும் திறந்திருக்கிறது" என்று பதிலளித்துள்ளது.

இந்தப் பதிவுக்கு பதிலளிக்கும் விதமாக தனஞ்ஜெயன், "இந்த விவாதத்துக்குக் காரணமான விநியோகஸ்தர்களின் பங்குத் தொகையைக் குறிப்பிடுவதைக் காட்டிலும் நேர்மையான பதில். உங்களால் சரியான வசூல் தொகையை குறிப்பிட முடியவில்லையென்றால மேற்கொண்டு விவாதிக்க வேண்டாம்" என்று பதிவிட்டார். அதாவது, கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் பதிவைக் கிண்டலாகச் சாடினார். இதற்குப் பிறகு இருவருமே எந்தவொரு பதிவையும் வெளியிடவில்லை.

இந்தச் சண்டையால் விஜய் - அஜித் ரசிகர்கள் இருவருக்கும் மீண்டும் சண்டை உருவானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனஞ்ஜெயன், "டேக் செய்து சண்டையிடுபவர்களுக்கு. நான் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்காக நிற்பவன். எந்தப் படம் நன்றாக ஓடினாலும் நான் கொண்டாடுவேன். அது தலைவர் படமோ, விஜய்யோ, அஜித்தோ அல்லது சூர்யா படமோ. அது வியாபாரத்துக்கு நல்லது.

தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்

நான் விஸ்வாசத்தைக் கொண்டாடினேன். இப்போது பிகில். நாளை ஒருவேளை வலிமையாக இருக்கலாம். அமைதியாக இருங்கள். மேற்கொண்டு விவாதம் செய்ய விரும்புபவர்கள், சத்யஜோதி தியாகராஜன், தி இந்து நாளிதழிடம் சில மாதங்களுக்கு முன் பேசியதைப் படியுங்கள். மேற்கொண்டு விவாதம் வேண்டாம். விஷயத்தை முடித்துக்கொள்வோம்." என்று பதிவிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தனஞ்ஜெயன் - கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சினை முடிவுக்கு வந்தாலும், அஜித் - விஜய் ரசிகர்கள் சண்டை இன்னும் முடிவடையவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x