Published : 20 Nov 2019 09:51 PM
Last Updated : 20 Nov 2019 09:51 PM

கோயில் விஷயம் தவிர திருமாவளவன் பேசிய பல கருத்துகள் எங்களுக்குப் பிடிக்கும்: காயத்ரி ரகுராம் தரப்பு விளக்கம் 

கோயில் விஷயம் தவிர திருமாவளவன் பேசிய பல கருத்துகள் எங்களுக்குப் பிடிக்கும் என்று காயத்ரி ரகுராம் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் அண்மையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்தப் பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பவே, உடனடியாக மன்னிப்பு கோரினார். ஆனால், அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து 'அடிங்க' என்று பதிவிட்டார் பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்.

இந்தப் பதிவால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கடுமையாக காயத்ரி ரகுராமை ட்விட்டரில் சாடத் தொடங்கினர். பலருமே அவரை ஆபாசமாகத் திட்டினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காயத்ரி ரகுராம், "என் முன்னால் இந்துக்களைப் பற்றி மோசமாகப் பேச முடியுமா என்று திருமாவளவனுக்கு சவால் விடுகிறேன். யார் என் மீது பாய்கிறார்கள் என்று பார்க்கிறேன். இவர்களுக்கு கலைக்கும் வக்கிரப் புத்திக்கும் வித்தியாசம் தெரியவில்லை. இவர்கள் பிகாசோவையும் மற்ற மத வழிபாட்டு இடங்களிலும் இருக்கும் கலையை ரசிப்பார்கள். ஆனால், இந்துக்களின் கலை என்றால் பாரபட்சம் காட்டுவார்கள். இவற்றைக் கட்டியது கடவுள் அல்ல. மனிதர்கள்.

மு.க.ஸ்டாலினுக்கு ஒரு கோரிக்கை. எனக்கு உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் தெரியும். எனக்கு உங்கள் மீதும், உங்கள் குடும்பத்தின் மீதும் அரசியலைத் தாண்டி மரியாதை இருக்கிறது. நான் அரசியல் வாழ்க்கையைத் தனிப்பட்ட வாழ்க்கையிலிருந்து பிரித்துப் பார்க்கிறேன். ஆனால் திருமாவளவனின் கும்பலிடமிருந்து எனக்கு மிரட்டல்களும், அவதூறுப் பேச்சுகளும் வருகின்றன. நடவடிக்கை எடுங்கள். அவரை எம்.பி. என்று சொல்வதே வெட்கக்கேடு" என்று பதிவிட்டார் காயத்ரி ரகுராம்.

உடனடியாக காயத்ரி ரகுராமின் உதவியாளர் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்து, தொலைபேசி வாயிலாகத் திட்டத் தொடங்கியுள்ளனர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர். இதனால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.

விசிகவினர் தொலைபேசியில் பேசியபோது அதை ஸ்பீக்கரில் போட்டு, அவர்கள் திட்டுவது அப்படியே ட்விட்டர் வீடியோவாக வெளியிட்டுள்ளார் காயத்ரி ரகுராம்.

ஆபாசப் பேச்சுகள் தொடரவே இறுதியாக காயத்ரி ரகுராம், "நவம்பர் 27 அன்று மெரினாவில், காலை 10 மணிக்குத் தனியாக நிற்பேன். திருமாவளவன் கும்பலால் என்னை என்ன செய்துவிட முடியும் என்று பார்க்கிறேன். திருமாவளவனுக்குத் தைரியமிருந்தால் என்னை எதிர்கொண்டு இந்துக்களைப் பற்றிப் பேசட்டும். உங்களைப் போன்ற வெறிபிடித்தவர்களின் மிரட்டல்களுக்கு நான் பயப்பட மாட்டேன். எனது மதத்துக்காகவும் இந்தியாவுக்காகவும் நான் சாகத் தயார். நீங்கள் எந்த அளவு தரம் தாழ்வீர்கள் என்று எனக்குத் தெரியும். நான் எதிர்கொள்கிறேன். திருமாவளவன் வெளிப்படையாகச் செய்யும் துன்புறுத்தல் இது. நான் திரும்ப வந்து மனித உரிமை அமைப்பிடம் பேசுவேன். போலீஸில் புகார் அளிப்பேன்" என்று தெரிவித்தார்.

மேலும், தனது வீட்டுக்குப் பாதுகாப்பு அளித்த தமிழக காவல்துறைக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம். இந்த விவகாரம் தொடர்பாக காயத்ரி ரகுராம் வீட்டின் முன்பு போராட்டம் நடத்திய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, திருமாவளவன் குறித்து மேலும் சில பதிவுகளை காயத்ரி ரகுராம் வெளியிட்டதாகவும் சர்ச்சையானதால் அவற்றை நீக்கிவிட்டதாகவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக காயத்ரி ரகுராம் தரப்பில் கேட்டபோது, ''இங்கே எல்லா கடவுளும் ஒன்றுதான். ஒவ்வொரு மதத்தினரும் ஒவ்வொரு வடிவத்தில் கடவுளைத் தரிசிக்கிறோம். இந்துக்களும் அப்படித்தான். கோயில் அசிங்கம் என சொல்வது எப்படி நியாயமாக இருக்கும்? யாராக இருந்தாலும் கடவுளைத் தவறாகப் பேசுவதைக் கேட்கும்போது வருத்தமாகத்தானே இருக்கும். அந்தவகையில் திருமாவளவனின் அந்தப் பேச்சு காயத்ரி ரகுராமுக்கு மனக்கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறது. அதனால் அவர் தனது கருத்தை அப்படி வெளிப்படுத்தியிருக்கிறார். பொதுவாக அரசியல் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசிய நல்ல பல கருத்துகள் எங்களுக்குப் பிடிக்கும். ஆனால் இந்த விஷயத்தில் ஏன் இப்படி அவர் பேசினார் எனத் தெரியவில்லை'' என்று விளக்கம் அளித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x