Published : 19 Nov 2019 03:07 PM
Last Updated : 19 Nov 2019 03:07 PM

சிவாஜியின் அரசியல் பிரவேசம் தொடர்பான விமர்சனங்கள்: பிரபு அதிருப்தி

சிவாஜி அரசியல் பிரவேசம் தொடர்பான விமர்சனங்களுக்கு நடிகர் பிரபு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

கமல் திரைக்கு வந்து 60-ம் ஆண்டை முன்னிட்டு, ‘உங்கள் நான்’ எனும் விழா, சென்னையில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், ஷங்கர், மணிரத்னம், கார்த்தி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் ரஜினி பேசியது பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. மேலும், அந்த மேடையிலேயே இருவருமே தங்களது நட்பைப் பிரிக்க முடியாது என்று பேசினார்கள். இதனால், ரஜினி - கமல் இருவருமே இணைந்து உள்ளாட்சித் தேர்தலைச் சந்திப்பார்கள் என்று தகவல் வெளியானது. இது தொடர்பாகக் கருத்துகளைப் பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

ரஜினி - கமல் இணைந்து அரசியல் செய்து தொடர்பாக பிரபு தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் சமீபமாக சிவாஜியின் அரசியல் பிரவேசம் தொடர்பான விமர்சனங்களுக்குத் தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

சிவாஜி அரசியல் பிரவேசம் தொடர்பாக பிரபு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

"காங்கிரஸும் அதிமுகவும் இணைந்தபோது அப்பா வந்து பேசினாரே. ஒரு இலை எங்க அண்ணன், இன்னொரு இலை நான் என்று பேசினார் சிவாஜி. அந்த நேரத்தில் இந்தக் கூட்டணி ஜெயித்தது. அதற்குப் பிறகு அமெரிக்காவில் எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது, அப்பா பார்க்கச் சென்றார். அப்போது, 'தம்பி.. நான் இல்லை என்றால் ஜானகியை நீ பார்த்துக் கொள்ள வேண்டும்' என்றார் எம்.ஜி.ஆர். ஏன் அண்ணா இப்படியெல்லாம் பேசுகிறீர்கள் என்று அப்பா கேட்டவுடன், இப்போதே நீ சத்தியம் பண்ணு என்றார். அந்த ஒரே காரணத்துக்காக ஜானகி அம்மாவுக்கு அப்பா ஆதரவு கொடுத்தார்.

என் அப்பா பதவிக்காக ஆசைப்படவே இல்லை. எம்.ஜி.ஆருக்காக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றே, ஜானகி அம்மா ஜெயிக்க விரும்பினார். நாம் ஜெயிப்போமா, இல்லையா என்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படவே இல்லை. அதுதான் உண்மை. அப்போது நான், எங்க அண்ணன் அனைவருமே கூட இருந்தோம்.

அப்பாவைப் பற்றி இன்று இருப்பவர்கள் பேசுவது கஷ்டமாக இருக்கிறது. ஏனென்றால், அந்தக் காலத்தில் அவருக்கு கேமரா முன்பு தான் நடிக்கத் தெரிந்தது. இன்று அவர் இருந்திருந்தால், ரஜினி - கமல் இருவரையும் ஆதரித்திருப்பார். ஏனென்றால், என்னிடமும் எங்க அண்ணனிடமும் பேசியதை விட ரஜினி - கமல் இருவரிடமும்தான் அப்பா அதிகமாகப் பேசினார். அதனாலேயே எங்கள் வீட்டில் எந்த நல்ல நிகழ்வு நடந்தாலும், உடனே இருவரும் வந்துவிடுவார்கள்.

மக்களுக்காக ஏதாவது பண்ண வேண்டும் என நினைத்தவர்தான் சிவாஜி. ஆம். அவர் அரசியலில் தோற்றுவிட்டார். மற்றொரு கட்சியில் போய்ச் சேர்ந்தால் ஜெயிப்போம் எனத் தெரிந்தும், கொடுத்த வாக்குறுதிக்காக மட்டுமே ஜானகி அம்மாவுடன் போய்ச் சேர்ந்தார். அரசியலில் வெற்றி- தோல்வி இருக்கும். உடல்நிலையைக் காரணமாக வைத்து அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்டார். தற்போது அவரைப் பற்றி மற்றவர்கள் பேசும்போது, கஷ்டமாக இருக்கிறது. அவரது ரசிகர்களும் கஷ்டப்படுகிறார்கள். அவர் மறைந்துவிட்டார். ஆகையால், அவரைப் பற்றிப் பேசாமல் இருப்பது நல்லது".

இவ்வாறு பிரபு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x