Published : 19 Nov 2019 02:46 PM
Last Updated : 19 Nov 2019 02:46 PM

அறிமுகமான வருடத்தில் நாலு ஹிட் தந்த ஜெய்சங்கர்; 3-வது படத்திலேயே ஜெயலலிதாவுடன் ஜோடி! 

வி.ராம்ஜி


முதல் படம் அறிமுகமான ஆண்டில், நான்கு படங்களில் நடித்தார் ஜெய்சங்கர். நான்கு படங்களுமே நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. மூன்றாவது படத்திலேயே ஜெய்சங்கரும் ஜெயலலிதாவும் இணைந்து நடித்தார்கள். இதிலொரு சுவாரஸ்யம்... இருவருமே ஒரே வருடத்தில் அறிமுகமானார்கள்.
ஜெய்சங்கரின் முதல் படம் ‘இரவும் பகலும்’. சிட்டாடல் தயாரிக்க, ஜோஸப் தளியத் இயக்கத்தில் உருவான இந்தப் படம்தான் ஜெய்சங்கரின் முதல் படம். இதில் வசந்தா என்பவர் நாயகியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களும் செம ஹிட்டானது.


‘உள்ளத்தின் கதவுகள்’, ‘இரவும் வரும் பகலும் வரும்’, ‘இறந்தவனை சுமந்தவனும் இறந்துட்டான்’ என்று எல்லாப் பாடல்களுமே மக்களின் மனங்களில் இன்றைக்கும் தனியிடம் பிடித்து ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இதில், ‘இறந்தவனை சுமந்தவனும்’ பாடலை நடிகர் அசோகன் சொந்தக் குரலில் பாடியிருப்பார்.


இந்தப் படத்துக்கு கதை டி.என்.பாலு. பின்னாளில், டி.என்.பாலு இயக்கிய பல படங்களில் ஜெய்சங்கர்தான் நாயகன். இருவரும் அருமையான கூட்டணி என்று அப்போது திரையுலகில் பேசிக்கொண்டார்கள்.


1965-ம் ஆண்டு ஜனவரி 14-ம் தேதி, பொங்கலன்று படம் வெளியானது. இதையடுத்து, இயக்குநர் கே.சங்கர் இயக்கத்தில், முத்துராமன், கே.ஆர்.விஜயா, நாகேஷ், மனோரமாவுடன் ஜெய்சங்கர் நடித்த ‘பஞ்சவர்ணக்கிளி’, மே 21-ம் தேதி வெளியானது. வித்தியாசமான, வில்லத்தனமான வேடத்தில் ஜெய்சங்கர் வெளுத்து வாங்கியிருப்பார். இந்தப் படமும் 100 நாட்களைக் கடந்து ஓடியது.


பிறகு, டி.ஆர்.ராமண்ணா இயக்கத்தில், ‘நீ’ என்ற படத்தில் நடித்தார் ஜெய்சங்கர். இது அவருக்கு மூன்றாவது படம். இந்தப் படமும் காமெடி, செண்டிமெண்ட் கலந்துகட்டியிருந்ததால், வெற்றிப்படமாக அமைந்தது. ‘அடடா என்ன அழகு’, ‘வெள்ளிக்கிழமை’ என பாடல்கள் சிறப்பாகவே அமைந்திருந்தன.


இதன் பிறகுதான் ஜெய்சங்கருக்கு அப்படியொரு ஜாக்பாட் அடித்தது. பிரசித்திப் பெற்ற ஏவிஎம் நிறுவனம், இவரை நாயகனாக்கி ‘குழந்தையும் தெய்வமும்’ படத்தை நவம்பர் 19-ம் தேதி ரிலீஸ் செய்தது. இதில் ஜமுனா நடித்திருந்தார். ‘அன்புள்ள மான்விழியே’ பாட்டு ஒன்று போதாதா? இந்தப்படத்தின் தன்மையையும் வெற்றியையும் சொல்வதற்கு!


ஆக, அறிமுகமான ஆண்டில், ‘இரவும் பகலும்’, ‘பஞ்சவர்ணக்கிளி’, ‘நீ’, ‘குழந்தையும் தெய்வமும்’ என நான்கு படங்களில் நடித்தார். நான்கிலும் ஜெய்சங்கருக்கு நல்ல பெயர் கிடைத்தது.


இதே ஆண்டில்தான் ஜெயலலிதாவும் அறிமுகமானார். ஸ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ முதல் படம். அடுத்து ‘ஆயிரத்தில் ஒருவன்’. செப்டம்பர் 10-ம் தேதி மீண்டும் எம்ஜிஆருடன் தேவர் பிலிம்ஸ் படமான ‘கன்னித்தாய்’ படத்தில் நடித்தார். முன்னதாக ஆகஸ்ட் 21-ம் தேதி, ஜெய்சங்கருடன் ‘நீ’ படத்தில் நடித்தார். ஆக, ஜெயலலிதாவும் இந்த வருடத்தில், அதாவது அறிமுகமான வருடத்தில், நான்கு படங்களில் நடித்தார்.


’நீ’ படத்தில் சுவாரஸ்யம். ஜெய்சங்கரும் ஜெயலலிதாவும் இந்தப் படத்தில்தான் முதன்முதலாக இணைந்து நடித்தார்கள். இன்னொரு சுவாரஸ்யம்... இருவருமே இதே வருடத்தில்தான் அறிமுகமானார்கள். ஜெய்சங்கருக்கு ‘இரவும் பகலும்’. ஜெயலலிதாவுக்கு ‘வெண்ணிற ஆடை’. கூடுதல் சுவாரஸ்யம்... ஜெய்சங்கருக்கு மட்டுமல்ல... ஜெயலலிதாவுக்கும் இது மூன்றாவது படம். 65-ம் ஆண்டு, ஏப்ரல் 14-ம் தேதி ‘வெண்ணிற ஆடை’ வெளியானது. ஜூலை 9-ம் தேதி எம்ஜிஆருடன் முதன்முதலாக இணைந்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ வெளியானது. மூன்றாவதாக, ஆகஸ்ட் 21-ம் தேதி ‘நீ’ என்ற திரைப்படம் வெளியானது.


இன்னொரு கொசுறு சுவாரஸ்யம்... 65-ம் ஆண்டில் அறிமுகமான ஜெய்சங்கர் அதே வருடத்தில் நான்கு படங்களில் நடித்தார். அதேபோல், அதேவருடம் அறிமுகமான ஜெயலலிதாவும் அதே வருடத்தில் நான்கு படங்களில் நடித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x