Published : 18 Nov 2019 07:15 PM
Last Updated : 18 Nov 2019 07:15 PM

'நம்மவர்' ரீமேக்? - 'தளபதி 64' படக்குழு மறுப்பு

கமல் நடித்த 'நம்மவர்' படத்தின் ரீமேக் என்று வெளியான தகவலுக்கு 'தளபதி 64' படக்குழு மறுப்பு தெரிவித்தது.

'பிகில்' படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் விஜய். இதன் படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் படத்தில் நடிக்கும் முக்கியக் கதாபாத்திரங்கள் அனைவருமே இருக்கும் கல்லூரிக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

இன்று (நவம்பர் 18) முதல் சண்டைக்காட்சி ஒன்றைப் படமாக்கி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இந்தப் படம் கல்லூரிப் பின்னணி, விஜய் ஒரு கல்லூரிப் பேராசிரியராக நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. இதை வைத்துக்கொண்டு, இந்தப் படம் கமல் நடிப்பில் வெளியான 'நம்மவர்' படத்தின் ரீமேக் என்று செய்தி வெளியானது.

இந்தச் செய்திகள் வெளியாகக் காரணம் என்னவென்றால், 'கைதி' படம் தொடர்பாக லோகேஷ் கனகராஜ் அளித்த பேட்டிகள் அனைத்திலுமே கமலைப் பற்றி உயர்வாகப் பேசியிருந்தார். இதை வைத்துக்கொண்டு இப்படியொரு செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர். மேலும், இது உண்மையல்ல என்றும் தெரிவித்தார்கள்.

இந்தப் படத்தில் குடிகாரப் பேராசிரியராக விஜய் நடித்து வருகிறார். மேலும், அவருக்கு ஒரு கேங்ஸ்டர் பின்னணியும் இருக்கும். அது என்ன, ஏன் பேராசிரியர்? உள்ளிட்ட விஷயங்களே 'தளபதி 64' படத்தின் கதையாகும். இதில் நாயகியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

மேலும், சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி (நடிகர் வைபவ் சகோதரர்), வி.ஜே.ரம்யா என பலரும் விஜய்யுடன் கல்லூரி காட்சிகளில் நடித்துள்ளனர்.

டெல்லி படப்பிடிப்பை முடித்துவிட்டு, மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. டிசம்பரில் தான் விஜய் - விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கவுள்ளது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x