Published : 18 Nov 2019 07:11 PM
Last Updated : 18 Nov 2019 07:11 PM

சிங்கப்பூர் விநாயகர் கோயிலில் நயன்தாராவுக்கு அர்ச்சனை: இணையத்தில் வைரலாகும் அர்ச்சனை சீட்டு புகைப்படம்

நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு, சிங்கப்பூரில் உள்ள விநாயகர் கோயிலில் அவர் பெயருக்கு அர்ச்சனை செய்யப்பட்டுள்ளது.

‘லேடி சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாராவுக்கு இன்று (நவம்பர் 18) பிறந்த நாள். பொதுவாக, நடிகர்களின் பிறந்த நாட்கள் கொண்டாடப்படும் அளவுக்கு, நடிகைகளின் பிறந்த நாட்கள் கொண்டாடப்படுவது இல்லை. ஆனால், நயன்தாராவின் பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர், அவருடைய ரசிகர்கள்.

2003-ம் ஆண்டு ‘மனசினக்கரே’ என்ற மலையாளப் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார் நயன்தாரா. பின்னர், 2005-ம் ஆண்டு ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நயன், ‘சூப்பர்’ என்ற ஒரேயொரு கன்னடப் படத்தில் மட்டுமே நடித்துள்ளார்.

தொழில் ரீதியாகவும், வாழ்க்கை ரீதியாகவும் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தவர் நயன்தாரா. ஆனால், உளியின் வலி தாங்கும் கல்தான் சிலையாகும் என்பதற்கேற்ப, இன்றைக்கு நம்பர் ஒன் நாயகியாக வலம் வருகிறார். இந்த வருடம் (2019) மட்டும் அவர் நடிப்பில் 7 படங்கள் வெளியாகியுள்ளன. அதில், ‘லவ் ஆக்‌ஷன் ட்ராமா’ தவிர, மற்ற 6 படங்களுமே தமிழ்ப் படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நயன்தாராவின் பிறந்த நாளை முன்னிட்டு சிங்கப்பூர் ரசிகர் ஒருவர் அர்ச்சனை செய்ய, அந்த அர்ச்சனை சீட்டு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சிங்கப்பூரில் உள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் கோயிலில், நயன்தாரா குரியன் - திருவோணம் நட்சத்திரம் என்ற பெயரில் தேங்காய் அர்ச்சனை செய்துள்ளார் அந்த ரசிகர்.

இப்படிக் கடல் கடந்து நயன்தாரா கொண்டாடப்படுவதற்குக் காரணம், ஆண்கள் ஆதிக்கம் செலுத்திவரும் சினிமாவில், கடந்த 15 வருடங்களாக தனி ஒருத்தியாகப் போராடி வெற்றி பெற்றவர் என்பதுதான். அதுமட்டுமல்ல, தோல்வியில் இருந்து அவர் கற்றுக்கொண்டு, மீண்டு வந்ததும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x